உலகம்

ஏமனில் இஸ்ரேல் தாக்குதல் : மயிரிழையில் உயிர் தப்பிய உலக சுகாதார அமைப்பின் தலைவர்... பின்னணி என்ன ?

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் ராணுவத்தை அனுப்பியது. அதோடு இஸ்ரேல் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு மற்றும் ஏமனின் ஹெய்தி அமைப்பு ஆகியவை ஆதரவாக உள்ளது. ஹெய்தி அமைப்பு இஸ்ரேலின் வர்த்தக தலைநகரான டெல்-அவிவ் மீது டிரோன் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். அதே போல செங்கடல் பகுதியில் செல்லும் இஸ்ரேலிய கப்பல்களை குறிவைத்தும் ஹெய்தி அமைப்பு தாக்குதல் நடத்தி வருகின்றது.

WHO Leader Tedros Adhanom Ghebreyesus

இந்த நிலையில், ஏமனில் இருக்கும் சில இடங்களில் வான்வழி வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஏமன் தலைநகர் சனா சர்வதேச விமான நிலையத்தில் இஸ்ரேல் வான்வெளித் தாக்குதல் நடத்தியுள்ளது. அப்போது உலக சுகாதார அமைப்பின் தலைவர் அதானோம் கெப்ரேயஸ் அந்த விமான நிலையத்தில் இருந்துள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த தாக்குதல் குறித்து அதானோம் கெப்ரேயஸ் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், ”நாங்கள் சனா விமான நிலையத்தில் விமான ஏறுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, தாக்குதல் நடந்துள்ளது. இதில் எங்களுடைய விமானி குழுவில் ஒருவர் காயமடைந்தார். மேலும் குறைந்தபட்சம் இரண்டு பேராவது உயிரிழந்திருப்பார்கள். நாங்கள் இருந்த இடத்தில் இருந்து சில மீட்டர்கள் தள்ளி இந்த தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று கூறியுள்ளார்.

Also Read: "கட்சியை விட்டு வெளியே போகட்டும்" - ஒரே மேடையில் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராமதாஸ், அன்புமணி !