உலகம்
மீண்டும் அத்துமீறல் : ஈரான் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் : 7 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு !
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.
அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்த தாக்குதல் இதுவரை 33 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்த போரில் ஹாமாஸ் அமைப்புக்கு ஈரான் ஆயுத உதவிகளை செய்து வருவதாக இஸ்ரேல் அரசு தொடர்ந்து கூறி வருகிறது. மேலும், ஹாமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானின் ஹஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வரும் நிலையில், அந்த அமைப்பின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், தற்போது சிரியா நாட்டில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது பிராந்தியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் ஈரான் தூதரகம் அமைந்துள்ளது. இந்த தூதரகத்தின் மீது இஸ்ரேல் நேற்று திடீரென வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில், தூதரகத்தில் இருந்த பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெஜா உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்த விவரங்களை ஈரான் வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் எல்லை கடந்த இந்த தாக்குதல் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!