உலகம்

ஜப்பானில் மோதிக்கொண்ட விமானங்கள்: தப்பித்த 379 பயணிகள்.. 5 பேர் பலி.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி !

ஜப்பானின் வடக்கு, மத்திய பகுதிகளில் புத்தாண்டு அன்று (01.01.2024) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி பிற்பகல் சுமார் 12.40 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.5 முதல் 7.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். சுமார் 1.30 மணி நேரத்தில் மட்டுமே தொடர்ந்து 21 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது..

அதனைத் தொடர்ந்து ஹோன்ஷூ அருகே 13 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இஷிகாவா, நிகட்டா மற்றும் டொயாமா ஆகிய கடலோரா மாகாண பகுதிகளுக்கு ஜப்பான் ஆய்வு மையம், சுனாமி எச்சரிக்கை விடுத்தது. அதனைத் தொடர்ந்து ஜப்பானை 5 அடி கொண்ட சுனாமி அலைகள் தாக்கின.

இந்த நிலநடுக்கம் மற்றும், சுனாமி காரணமாக ஜப்பானில் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அங்கு விமான விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கொண்டு செல்ல கடலோர காவல்படை விமானம் ஒன்று டோக்கியோவின் ஹனேடா விமான நிலைய ஓடுபாதையில் நின்றுள்ளது.

அப்போது அங்கு 379 பயணிகளுடன் ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளது. அப்போது கடலோர காவல்படை விமானமும், பயணிகள் விமானமும் மோதிக்கொண்டதில் இரு விமானமும் தீப்பிடித்தது.

அதனைத் தொடர்ந்து பயணிகள் விமானத்தில் இருந்த அனைவரும் உடனடியாக அதிலிருந்து வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. ஆனால், கடலோர காவல்படை விமானத்தில் இருந்த 5 ஊழியர்கள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். இது குறித்து வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மோடி செல்பி பாய்ண்டு : RTI கேள்விக்கு பதிலளித்த இரயில்வே அதிகாரி பணியிட மாற்றம்.. பாஜக அரசு அதிரடி !