உலகம்

22 வயதில் சிறை சென்ற நபர், 71 வயதில் விடுதலை... செய்யாத தவறுக்கு தண்டனை... பின்னணி என்ன ?

அமெரிக்காவில் அமைந்துள்ளது ஓக்லஹோமா (Oklahoma) என்ற நகரம். இங்கு க்ளின் சிம்மன்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த 1974-ம் ஆண்டு ஓக்லஹோமா நகரத்தின் புறநகர்ப் பகுதியில் இருந்த எட்மண்ட் மதுபானக் கடையில் கொள்ளை சம்பவம் நடந்தது. அப்போது இதில் கரோலின் சூ ரோஜர்ஸ் என்பவர் கொல்லப்பட்டார்.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் க்ளின் சிம்மன்ஸ், டான் ராபர்ட்ஸ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சிம்மன்ஸ், தான் ஒரு நிரபராதி என்றும், கொலை செய்யப்பட்ட நேரத்தில் தான் லூசியானாவில் இருந்ததாகவும் தெரிவித்தார்.

இருப்பினும் அவர்கள் இரண்டு பேருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை அறிவித்தது. தனது 22வயதில் சிம்மன்ஸ் சிறை சென்றார். தொடர்ந்து சிம்மன்ஸ் மேல்முறையீடு செய்த நிலையில், அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இருப்பினும் இடைவிடாமல் தனது முயற்சியை இருவரும் மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு ராபர்ட்ஸ் பரோலில் வெளியே வந்தார்.

தொடர்ந்து நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் சிம்மன்ஸ் நிரபராதி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து விடுதலை செய்தது. சுமார் 48 ஆண்டு 1 மாதம் 18 நாட்கள் கழித்து சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். தனது 22-வது வயதில் சிறை சென்ற சிம்மன்ஸ், தனது 71-வது வயதில் வெளியே வந்தார்.

தனது விடுதலை குறித்து பேசிய சிம்மன்ஸ், "பொறுமைக்கும் மனஉறுதிக்கும் இது ஒரு பாடம். நடக்காது என யார் கூறினாலும் நம்பாதீர்கள்; ஏனென்றால் நடக்க வேண்டியது நடக்கும்" என்று தெரிவித்தார். எனினும் தான் அனுபவிக்க வேண்டிய பல விஷயங்கள் அனுபவிக்க முடியாமல் போனது குறித்தும் வருத்தம் தெரிவித்தார். சிறையில் இருந்து விடுதலை ஆன பிறகு அவருக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

தற்போது அவருக்கு வேலையும் இல்லை, கையில் பணமும் இல்லை, இவற்றிற்கு மத்தியில் புற்றுநோயுடனும் போராடி வருகிறார். இதனால் இவரது உடல் மற்றும் இதர செலவுகளுக்கு சிலர் உதவுவதாக தெரிவித்துள்ளனர். அதில் குறிப்பாக தவறான தண்டனைக்காக சிம்மன்ஸ்க்கு $175,000 வரை இழப்பீடாக வழங்கப்படவுள்ளது.

இது தற்போது சிம்மன்ஸ்க்கு ஆதரவாக இருக்கிறது. செய்யாத தவறுக்கு சிறை சென்று, 48 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை சிம்மன்ஸ் என்ற 71 வயது நபருக்கு தற்போது உதவிகள் வருகிறது.

Also Read: ஏழு மாதங்களுக்கு பின்னர் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட 87 உடல்கள் : மணிப்பூர் கலவரத்தின் கோரம் !