உலகம்

ஆன்ட்ராய்டு, ஆப்பிள் போன்களுக்கு மாற்றாக புதிய ஸ்மார்ட்போன் - எலான் மஸ்க் ட்வீட்டால் பரபரப்பு !

உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், 12 மணி நேரம் பணிபுரியவேண்டும் என்ற எலான் மஸ்க்கின் மிரட்டல் காரணமாகி தானே முன்வந்தும் ஏராளமான ட்விட்டர் பணியாளர்கள் ராஜினாமாக்களை அனுப்பிவருகின்றனர்.

இந்த நிலையில், ஆன்ட்ராய்டு, ஆப்பிள் போன்களுக்கு மாற்றாக புதிய ஸ்மார்ட்போனை உருவாக்குவதற்கு தவிர வேறு வழியில்லை என்று எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எலான் மஸ்க் கூறுகையில், "ஆப்பிள் உள்ளிட்ட சில நிறுவனங்கள் ட்விட்டரை தங்களது ஆப் ஸ்டோரில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளன. ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டரை நிறுத்தி வைப்பதாக அச்சுறுத்தி உள்ளது. அது ஏற்கனவே ட்விட்டரில் விளம்பரம் செய்வதை நிறுத்தி விட்டது.

ஆப்பிள் மற்றும் கூகுள் ஆப் ஸ்டோர்களில் இருந்து ட்விட்டர் அகற்றப்படுவதை நான் விரும்பவில்லை. ஒருவேளை அப்படி அகற்றப்பட்டால் ஆன்ட்ராய்டு, ஆப்பிள் போன்களுக்கு மாற்றாக புதிய ஸ்மார்ட்போனை உருவாக்குவதற்கு தவிர வேறு வழியில்லை" என்று கூறியுள்ளார். அவரின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ஒரு ரூபாய் கூட விடுவிக்கவில்லை" -ஒன்றிய அரசின் பதிலால் அதிர்ச்சி !