உலகம்

முன்னணி நிர்வாகிகள் ராஜினாமா.. 270 மில்லியன் டாலர் நஷ்டம்.. திவாலாகிறதா Twitter நிறுவனம் ?

உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் அதில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற கருத்தும் பரவலாக இருந்தது அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது ஒரு மெயில் ட்விட்டர் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதில், நீங்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டிருந்தால் அதன் விவரம் உங்களது தனிப்பட்ட இமெயில் முகவரிக்கு அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது.எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

அதோடு எலான் மஸ்க்கின் இது போன்ற செயல்கள் பிடிக்காமல் யேல் ரோத், ராபின் வீலர் ஆகிய இரண்டு உயர் அதிகாரிகள் விளம்பரதாரர்கள் பிரச்சினையை முன்வைத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ட்விட்டரின் தலைமை பாதுகாப்பு அதிகாரி லீ கிஸ்னர், பாதுகாப்பு அலுவலர் டேமியன் கீரன், தலைமை கம்ப்ளையன்ஸ் அலுவலர் மேரியான் ஃபோகார்டி ஆகியோரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதன் காரணமாக பல்வேறு சிக்கல்களில் ட்விட்டர் நிறுவனம் சிக்கிக்கொண்டுள்ளது.

இந்த நிலையில், ட்விட்டர் திவாலாக வாய்ப்புள்ளதாக எலான் மஸ்க் தொலைபேசி உரையாடலில் சில ஊழியர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 2021-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ட்விட்டர் 66 மில்லியன்கள் டாலர் நஷ்டத்தை சந்தித்த நிலையில், ஜூன் 30-ம் தேதி வெளியான இரண்டாவது காலாண்டு அறிக்கையில் 270 மில்லியன் டாலர்கள் நிகர இழப்பை சந்தித்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

Also Read: "10 ஆண்டாக செய்யாததை 15 மாதத்தில் செய்து காட்டியுள்ளது தி.மு.க அரசு": முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!