உலகம்

பிரிட்டனில் பணவீக்கம்; பிலிப்பைன்ஸில் புயல் பாதிப்பு: என்ன நடக்கிறது உலக நாடுகளில்? இது 5in1_world நியூஸ்

1) ரஷிய போர்க்கப்பலை அழித்த உக்ரைன்!

கருங்கடலில் உள்ள ரஷிய போர்க்கப்பலை அழித்துவிட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது. இதுகுறித்து உக்ரைன் கவர்னர் மக்சிம் மார்சசென்கோ, ‘கருங்கடலைக் காக்கும் நெப்டியூன் ஏவுகணைகள் ரஷிய போர்க் கப்பலுக்கு மிகக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. இது உக்ரைனின் மகிமை. அந்த கப்பல் தற்போது பயங்கரமாக எரிகிறது. 510 குழு உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், அவர்களால் உதவி பெற முடியுமா என்பது தெரியவில்லை.” என்று கூறியுள்ளார்.

2) நான் மிகவும் ஆபத்தானவனாக மாறப்போகிறேன்: இம்ரான் கான் எச்சரிக்கை

பாகிஸ்தானின் பெஷாவரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய இம்ரான் கான் : “ நான் பிரதமராக இருந்த போது ஆபத்தானாவனாக இல்லை. ஆனால், தற்போது மிகவும் ஆபத்தானவனாக மாறியுள்ளேன். என்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்க சட்ட விரோத செயல்கள் நடைபெற்றன. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் முன்பாக நள்ளிரவில் நீதிமன்றம் திறக்கப்பட்டது ஏன்? நான் ஏதேனும் சட்டத்திற்கு புறம்பானதை செய்து விட்டேனா? இறக்குமதி செய்யப்பட்ட அரசாங்கத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி மக்கள் தாங்கள் விரும்பியதை வெளிப்படுத்தலாம்” என்றார்.

3) உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50.20 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 38 லட்சத்து 34 ஆயிரத்து 403 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 45 கோடியே 20 லட்சத்து 35 ஆயிரத்து 856 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து 14 ஆயிரத்து 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

4) பிலிப்பைன்சில் புயல் பாதிப்பு: 121 பேர் பலி

பிலிப்பைன்சில் பருவகால புயலான மெகி தாக்கியதில் பலி எண்ணிக்கை 121 ஆக உயர்ந்து உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் சக்தி வாய்ந்த மெகி புயல் பாதிப்புகளால் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் அதிகளவில் மக்கள் உயிரிழந்து உள்ளனர். நிலச்சரிவில் சிக்கி 81 பேர் மண்ணில் புதைந்து போயுள்ளனர். இதுவரை 236 பேர் காயமடைந்து உள்ளனர். புயலை தொடர்ந்து கொட்டித்தீர்த்த கனமழையால் லெய்டே மாகாணம் முழுவதும் வெள்ளக்காடாகி உள்ளது.

5) பிரிட்டனில் பணவீக்கம் உயர்வு, மக்கள் வாழ்க்கை தரம் சரிவு!

பிரிட்டனில் எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றின் விலை உயர்வால், 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, பணவீக்கம் அதிகரித்துள்ளது. 1992ம் ஆண்டுக்குப் பின், பிரிட்டனில் இந்த அளவிற்கு பணவீக்கம் உயர்ந்துள்ளதற்கு, பெட்ரோல், டீசல், மின்சாரம், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வு தான் காரணம். இத்துடன், வரி அதிகரிப்பாலும், மக்களின் வாழ்க்கைத் தரம், 1950களின் நிலைக்கு இறங்கி விட்டதாக, பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: ரஷ்யாவிலிருந்து மூட்டையை கட்டிய இன்ஃபோசிஸ்; பாக்., பிரதமரை வாழ்த்திய அமெரிக்கா: உலகச் செய்திகளின் துளிகள்