உலகம்

பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைப்பு.. இங்கிலாந்தில் பரவும் புதிய வைரஸ்! #5IN1_WORLD

இம்ரான் கான் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைப்பு!

பாகிஸ்தான் பாராளுமன்றம் இன்று காலை கூடியபோது இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் துணை சபாநாயகரால் ரத்து செய்யப்பட்டது. இந்த தீர்மானம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனக்கூறி அவர் தீர்மானத்தை நிராகரித்தார்.இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு அதிபருக்கு "பாகிஸ்தான் பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும்" என்று கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று பாராளுமன்றத்தை கலைத்து பாகிஸ்தான் அதிபர் அறிவித்துள்ளார்.

பிரேசிலில் கனமழை- நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி!

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், வெள்ளம் சூழ்ந்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை எட்டு குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5 பேர் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்!

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. உருமாற்றம் அடைந்துள்ள ஒமைக்ரான் வைரஸாக இது கருதப்படுவதாகவும், புதிய வகை இந்த கொரோனா வைரஸ் எக்ஸ்இ (XE) என்று அழைக்கப்படுகிறது என பிரிட்டன் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒமைக்ரானை விட இது வேகமாக பரவும் தன்மை கொண்டது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கம்!

இலங்கையில் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மற்றும் யூ டியூப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகத் தளங்களை இலங்கை அரசாங்கம் முடக்கியுள்ளது. இலங்கை அதிபர் மாளிகை முன் ஆயிரக்கணக்கானோர் கூடி அதிபருக்கு எதிராக நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால் இலங்கையில் அவசர நிலையை அமல்படுத்தியுள்ளனர். நேற்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.‌‌இந்நிலையில், தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, நாட்டில் போராட்டங்களைத் திட்டமிடுவதற்கு மக்களைத் திரட்டுவதைத் தடுக்கவும் சமூக வலைதளங்கை அந்நாட்டு அரசு முடக்கியுள்ளது

அஜர்பைஜானில் இரவு விடுதியில் வெடிவிபத்து!

அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் உள்ள இரவு விடுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட வெடிவிபத்தில், ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 31 பேர் படுகாயமடைந்துள்ளனர். எரிவாயு கசிவு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது, விசாரணை நடந்து வருகின்றது என்று உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்

Also Read: மைசூர் டூ ஆந்திரா.. நான் ஸ்டாப்பாக பைக்கில் வந்த இளைஞர்.. பூஜை போடும் நேரத்தில் வெடித்து சிதறிய புல்லட்!