உலகம்

3 வயது குழந்தையை கரடி அகழிக்குள் தள்ளி விட்ட கொடூர தாய்.. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்.. நடந்தது என்ன?

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் தாஷ்கண்டில் உயிரியல் பூங்கா ஒன்று உள்ளது. அங்குள்ள அகழியில் நின்று கொண்டிருந்த கரடியை எல்லோரும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, பெண் ஒருவர் தனது 3 வயது குழந்தையை அகழிக்குள் தள்ளிவிட்டார்.

அந்தப் பெண் தனது குழந்தையை அகழிக்குள் தள்ளிவிட்ட காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அகழிக்குள் விழுந்த அந்த சிறுமிக்கு அருகில் சென்று கரடி மோப்பம் பிடிக்கத் தொடங்கியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள் இதுகுறித்து பூங்கா ஊழியர்களுக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.

பூங்கா ஊழியர்கள் விரைந்து வந்து அகழிக்குள் இருந்த கூண்டுக்குள் கரடியை விரட்டியடித்த நிலையில், அந்தக் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. ஆனால், இந்த சம்பவம் குறித்து எதையும் அலட்டிக் கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் அந்த தாய்.

இதையடுத்து, காவல் துறையினர் அந்தப் பெண்ணை கைது செய்தனர். அவர் மீது கிரிமினல் வழக்கு பதியப்படும் என்று அந்நாட்டு காவலர்கள் தெரிவித்தனர்.

சுமார் 16 அடிக்கு கீழே உள்ள அகழியில் விழுந்ததில் குழந்தையின் தலை மற்றும் உடலில் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டன. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெற்ற குழந்தையையே கொல்ல முயன்றது தொடர்பாக அந்தப் பெண்ணிடம் போலிஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அந்தப் பெண் ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக உள்ளதாகவும், தனது கணவர் வேலையை விட்டதால் அவர் ரஷ்யாவில் வேலைக்குச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.

இதனால் மிகுந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும் அதன் காரணமாக இவ்வாறு நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Also Read: டிராவல் பேக்கில் வைத்து இளம்பெண்ணை ஹாஸ்டலுக்குள் கொண்டு செல்ல முயன்ற மாணவர்... வைரலாகும் வீடியோ!