உலகம்

உலகளவில் தினமும் இறக்கும் 60 பெண் குழந்தைகள்... ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்: காரணம் என்ன?

உலகளவில் குழந்தைகள் திருமணத்தினால் தினந்தோறும் 60க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் உயிரிழந்து வருவதாக 'சேவ் தி சில்ரன்' வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், "குழந்தை திருமணத்தால் ஏற்படும் கர்ப்பம் மற்றும் பிரசவத்தால் மட்டும் ஆண்டுக்கு 22 ஆயிரத்திற்கும் அதிகமான பெண் குழந்தைகள் உயிரிழக்கின்றனர். உலக அளவில் ஒரு நாளைக்கு 60க்கும் மேற்பட்ட பெண்குழந்தைகள் உயிரிழக்கிறார்கள்.

அதேபோல், தெற்காசியாவில் ஒருநாளைக்கு 6 பெண் குழந்தைகள் உயிரிழக்கின்றனர். மேலும் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் குழந்தைத் திருமண விகிதம் அதிகமாக உள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் 8 கோடி குழந்தைகள் திருமணம் நடைபெற்றுள்ளது.

தற்போது கொரோன ஊரடங்கு காரணமாகப் பல குடும்பங்கள் வறுமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் 2030க்குள் ஒரு கோடி குழந்தைகளுக்குத் திருமணம் செய்ய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. விஞ்ஞானத்தில் உலகமே வளர்ச்சியடைந்து வந்தாலும் குழந்தை திருமணத்தைத் தடுப்பதில் உலகமே தோல்வியடைந்துள்ளது என்பதையே இந்த புள்ளி விவரங்கள் காட்டுவதாக சமூக நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Also Read: சிட்டிசன் அத்திப்பட்டியாகிப் போன ஜப்பான் நகரம் : சன்யாவின் கதிதான் என்ன?