உலகம்

“இந்தியா மீது சீனா நடத்திய சைபர் தாக்குதல் முயற்சி” - புலனாய்வு நிறுவனம் அதிர்ச்சித் தகவல்!

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன படையினர் இடையே நடந்த மோதலில், தமிழக வீரர் உட்பட 20 இந்திய இராணுவத்தினர் பலியாகினர். இந்த மோதலில் சீன இராணூவத்தினர் 40க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது.

இந்தியா - சீனா இராணுவம் இடையேயான மோதலால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்திய அரசு துறைகள் மற்றும் வங்கிகளின் இணையதளங்களை முடக்கும் முயற்சியில், சீனா இறங்கியது தெரியவந்துள்ளது.

சைபர் புலனாய்வு நிறுவனமான Cyfirma கூற்றுப்படி, சீன ஹேக்கர்கள் சில நாட்களுக்கு முன்னதாக ஹேக்கிங் குழுக்களில் இந்தியாவுக்கு பாடம் கற்பிப்பது தொடர்பாக பேசிவந்துள்ளனர்.

அதன்படி, இந்தியாவின் தொழில்நுட்ப நிறுவனங்கள், பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது தொழில்நுட்பத் தாக்குதல் நடத்த சீன ஹேக்கிங் அமைப்புகள் திட்டமிட்டதாகத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரிகள் கூறியதாவது “சைபர் வார் நடத்த, சீனா ஏற்பாடுகளை செய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில், அரசு துறைகள் மற்றும் வங்கிகளின் இணையதளங்களை முடக்க முயற்சி நடந்துள்ளது.

செயற்கையாக மிக அதிக அளவில் பயன்பாடு உள்ளதுபோல் காட்டி, அந்த இணைய சேவையை முடக்குவதே, சீனாவின் யுக்தி. சீன ராணுவத்தின் இணைய வழிப் போர் பிரிவு செயல்படும் நகரிலிருந்து இந்தத் தாக்குதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read: “சீன ஊடுருவல் தெரியாதா? இல்லை தெரிந்தும் மௌனம் காத்தீர்களா?”- பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!