உலகம்

“1 லட்சம் உயிர்களைப் பலிகொடுத்து மோசமான மைல்கல்லை எட்டிய அமெரிக்கா” - சற்றும் குறையாத கொரோனா தாக்கம்!

சீனாவில் தொற்றத் துவங்கிய கொரோனா வைரஸ் அங்கு ஏற்படுத்திய உயிர்ச்சேதம், பாதிப்பைக் காட்டிலும் ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

உலக வல்லரசான அமெரிக்கா, கொரோனா தொற்றினால் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்து வருகிறது. கொரோனா தொற்றையும், பலியையும் கட்டுப்படுத்தாமல் அதிபர் ட்ரம்ப் அரசு திணறி வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. 4 மாதங்களில் அமெரிக்காவில் கொரோனா வைரஸுக்கு ஒரு லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சத்தைக் கடந்துள்ளது. உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் 1,01,762 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாம் ஒரு மோசமான மைல்கல்லை எட்டியிருக்கிறோம். கொரோனாவுக்கு பலியான அனைவரது குடும்பத்தினருக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களும் இனி வழக்கமாகச் செயல்படுவதற்கான முயற்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈடுபட்டு வருகிறார். ஆனால் அரசின் இந்தச் செயல் அதிக அளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதிபர் ட்ரம்ப்பின் தவறான திட்டமிடல்களால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்ததாகவும் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Also Read: இதுவரை காணாத உச்சத்தை தொட்ட கொரோனா தொற்று : தமிழகத்தில் 12 பேர் பலி... 827 பேர் பாதிப்பு! #Covid19