
2026 சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 30ம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி நிறைவடைகிறது.
இந்நிலையில், திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன.
நேற்று தி.மு.க வேட்பாளர் பட்டியலை கழக தலைவைர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதையடுத்து இன்று தி.மு.கவின் தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் வெளியிட்டார்.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
1.இதுவரை 1 முதல் 5 வரை படிக்கும் 19 லட்சம் மாணவ,மாணவியருக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் படி காலை உணவு வழங்கப்பட்டது. திராவிட மாடல் 2.0 ஆட்சியில் கூடுதலாக 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.
2.ஒரு கோடியே 31 லட்சம் சகோதரிகள் மாதம் தோறும் 1000 ரூபாயை உரிமைத் தொகையாகப் பெறுகிறார்கள். இனி நமது ஆட்சிக் காலத்தில் 2000 ரூபாயாக உரிமைத் தொகையானது உயர்த்தி வழங்கப்படும்.
3.இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரப் பம்பு செட்டுகள் வழங்கப்படும்.
4.அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.
5.முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.5 இலட்சமாகவும், காப்பீட்டுத் தொகை ரூ.10 இலட்சமாகவும் உயர்த்தப்படும்.
6.உயர் கல்விச் சேர்க்கையை அதிகரிக்க, புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் படி மாதம் தோறும் வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய், இனி 1500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
7.நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
8.கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ. 4,500-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
9.பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தப்படும்.
10.முதியோர் உதவித்தொகை ரூ. 1,200 லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ. 1500-இல் இருந்து ரூ. 2,500-ஆக உயர்த்தப்படும்
11.மீன்பிடி தடைக்கால சிறப்பு நிவாரணத் தொகை 8 ஆயிரம் ரூபாயில் இருந்து 12 ஆயிரம் ரூபாயாகவும், மீன்பிடி குறைவு கால சிறப்பு நிவாரணத் தொகை 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 9 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
12.அன்னைத் தமிழைப் போற்ற பன்னாட்டுத் தமிழ் அறிஞர்களையும் மொழி வல்லுநர்களையும் கொண்டு ‘செம்மொழி மாநாடு’ சென்னையில் நடத்தப்படும்
13.ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான அறிக்கையை நாடு முழுவதும் விவாதப் பொருளாக்கி, மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்டும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.
14.சுயஉதவிக்குழு உறுப்பினராக இருக்கும் பெண்கள், தொழில் முனைவோராக முன்னேறிடும் வகையில் பிணை எதுவுமின்றி ரூ. 5 இலட்சம் வரை மானியத்துடன் வங்கிக் கடனுதவி வழங்கப்படும்.
15. பேரிடர் கால இழப்பீடுகளாக இறவைப் பாசன பயிர்கள் மற்றும் நெல் பயிர்கள் - ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.25,000,நீண்டகாலப் பயிர்கள் - ரூ.27,000,மானாவாரிப் பயிர்கள் - ரூ.12,000 என உயர்த்தி வழங்கப்படும்
16.மாவட்டங்கள் முதல் வட்டங்கள் வரையிலான அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான கருவிகள் இரண்டு மடங்காக்கப்படும்.
17.அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்காக அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படும்
18.ஒன்றிய அரசின் எட்டாவது ஊதியக் குழு அறிக்கையை ஒன்றிய அரசு செயல்படுத்தியதும், அதனை மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் செயல்படுத்த குழு அமைக்கப்படும்.
19.அரசு அமைப்புகளில் ஏற்படும் 1.5 இலட்சம் காலிப் பணியிடங்கள் காலதாமதமின்றி நிரப்பப்படும். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள் உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

20.உயர்கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கும் ஐந்து ஆண்டுகளுக்குள் மடிக்கணினி வழங்கப்படும்.
21.நான் முதல்வன் திட்டத்தின்கீழ் திறன்பயிற்சி மேற்கொள்ள முன்வரும் ஐந்து லட்சம் மாணவர்களுக்கு 6மாத பயிற்சியுடன் ரூ.1500 உதவித் தொகையும் வழங்கப்படும்
22.புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில், 2030-ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நியோ டைடல் பூங்காக்கள்; நகரங்களில் தேவைப்படும் இடங்களில் முழு அளவிலான தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
23.ரூ. 18 இலட்சம் கோடி அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டு, அதன்மூலம் 50 இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
24.தமிழ்நாட்டின் ஏற்றுமதி 120 பில்லியன் டாலராக உயர்ந்து, உலக வணிக வரைபடத்தில் தமிழ்நாடு இடம் பிடிக்கும் வகையில் திராவிட மாடல் ஆட்சியின் செயல்பாடுகள் அமையும்
25.தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி 2.5 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 5 இலட்சம் கோடி ரூபாயாக இரண்டு மடங்கு ஆக்கப்படும்.
26. 5,000 கோயில்களுக்குக் குடமுழுக்கு செய்யப்படும். ஆயிரம் கிராம தெய்வத் திருக்கோவில்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்.
27.அனைத்து மாவட்டங்களிலும் உணவு மற்றும் தங்குமிட வசதியுடன் கூடிய தரம் வாய்ந்த விளையாட்டு விடுதிகள் கட்டப்படும்
28.மிகவும் வறுமையில் வாடும் நலிவடைந்த குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு வீட்டு வசதி, சமூகப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், திறன் மேம்பாடு, வங்கிக்கடன் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கிடைக்க தாயுமானவர் திட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.
29.கிராம சாலைத் திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் கி.மீ நீளமுள்ள சாலைகள் ரூபாய் 10,000 கோடி மதிப்பீட்டில் சீர்செய்யப்படும்
30.அனைத்து மாநகராட்சிகள், முக்கிய நகராட்சிகளில் 50 புதிய செம்மொழிப் பூங்காக்கள் அமைக்கப்படும்
31.திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சேலம் மாநகராட்சிகளின் அருகில் நவீன உலகத்தர வசதிகளுடன் புதிய நகரங்கள் அமைக்கப்படும்
32.அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 புதிய பேருந்துகள் இயக்கப்படும்
33 ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்த்தப்படும்.
34.மொழிப்போராட்ட வரலாற்றை இளைய தலைமுறையினர் அறிய, நவீன நூலக வசதிகளுடன் கூடிய காட்சிக் கூடம் பொள்ளாச்சியில் அமைக்கப்படும்
35.நிகர சாகுபடி பரப்பு 50 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும்
36.தொழிற்சாலைகள் அதிகமுள்ள நகரங்களில், பெண்கள் வேலைக்குச் செல்வதை எளிதாக்கும் பொருட்டு, 1000 குழந்தைகள் காப்பகங்கள் உருவாக்கப்படும்.
37.பல்வேறு துறைகளில் சிறப்புறப் பணியாற்றிடும் திருநர் - திருநங்கையருக்கு விருது வழங்கப்படும்.
38.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தம் இல்லா நிலை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
39.பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் தொழில் தொடங்க, TABCEDCO மூலம் கடன் பெறும் உச்சவரம்பு 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
40. கடலூர், தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம், சேலம், திருப்பூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
41.பத்திரிக்கையாளர்களின் குழந்தைகள் கல்விக்காக வழங்கப்படும் பல்வேறு உதவித்தொகைகள் அனைத்தும் இரு மடங்காக உயர்த்தப்படும்.
42.தமிழ்நாட்டில் 10 கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும்.
43. கிராமப்புறங்களின் ஆதாரங்களைக் கொண்டு, ஊரகப்பகுதிகளில் 5000 புத்தொழில்கள் தொடங்கப்படும்.
44. கூடைப்பந்து, கைப்பந்து, பேட்மிண்டன், தற்காப்புக் கலை, வாள்வீச்சு விளையாட்டுகளுக்கான பல்நோக்கு வசதிகொண்ட உள்விளையாட்டு அரங்குகள் அனைத்து மாவட்டங்களிலும் இருப்பது உறுதி செய்யப்படும்.
45.தமிழ்நாட்டின் MSME நிறுவனப் பொருள்கள் உலக அளவில் சந்தைப்படுத்த மெய்நிகர் வணிகத் தளம் உருவாக்கப்படும்
46.மீனவர்கள் தங்களின் வருவாயை பெருக்குவதற்குத் தேவையான நவீன உட்கட்டமைப்பு வசதிகள் மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்குதளங்களில் ஏற்படுத்தித் தரப்படும்
47.அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் Wi-Fi வசதியுடன் கூடிய டிஜிட்டல் கற்றல் மையங்கள்
48.முதல்வர் படைப்பகங்கள், அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் அமைக்கப்படும்

50. இல்லத்தரசிகளை மகிழ்விக்க இன்னொரு மாபெரும் அறிவிப்பு..
இல்லத்தரசிகள் தங்களது வீட்டுக்குத் தேவையான , வாஷிங் மெஷின், டி.வி., கிரைண்டர், ஃபிரிட்ஜ்,மிக்சி, மைக்ரோவேவ் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களைப் புதிதாக வாங்கவோ அல்லது ஏற்கனவே பயன்படுத்திவரும் இத்தகைய பொருட்களுக்கு மாற்றாக வாங்கவோ இல்லத்தரசி என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் கீழ் வருமான வரி செலுத்தாத குடும்பங்களின் இல்லத்தரசிகள் அனைவருக்கும் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கடைகளில் இப்பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும்.
51. தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதி வளர்ச்சியையும் உறுதி செய்ய
* வட மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சித் திட்டம்-
*டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சித் திட்டம் -
* மேற்கு மாவட்ட சிறப்பு வளர்ச்சித் திட்டம் -
* தென் மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சித் திட்டம் - ஆகியவை 20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.






