Viral

“30 வயதில் 197 நாடுகளில் சுற்றி உலக சாதனை” : YouTube Vlogger ட்ரூ பின்ஸ்கி-யின் நெகிழ்ச்சி கதை!

அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல யூடியூப் டிராவல் வோல்கர் (YouTube travel vlogger) ட்ரூ பின்ஸ்கி (30). இவர் உலகில் உள்ள 197 நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக சாதனைப் படைத்துள்ளார்.

அமெரிக்காவின் விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோது, 2012 இல் ப்ராக் நகரில் வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றபோது, பயணத்தின் மீதான அவரது ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்பிறகு உலகம் முழுவதும் சுற்றி பார்ப்பதற்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்தார்.

ட்ரூ பின்ஸ்கி பொருளாதாரத்தில் பட்டம் பெற்றிருந்தாலும் கல்லூரிப் படிப்புக்குப் பிறகு கார்ப்பரேட் பணிக்கு செல்ல அவர் விரும்பவில்லை. பின்னர் சியோலுக்கு வெளியே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஆங்கிலம் கற்பிக்கும் திட்டத்தைப் பற்றி நண்பர் ஒருவர் பின்ஸ்கியிடம் சொன்னபோது, ​​அவரும் ஆர்வம் அடைத்து செல்லிக்கொடுக்க அமெரிக்காவில் இருந்து முதல் பயணத்தை தொடங்கினார்.

பின்னர், தென் கொரியாவில் அவருக்கு ஏற்பட்ட அந்த அனுபவம் அவரது பயண விருப்பத்தை மேலும் உறுதிப்படுத்தியது. அங்கு மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கற்பித்த பிறகு, பின்ஸ்கி உலகின் ஒவ்வொரு நாட்டிற்கும் செல்லத் தொடங்கினார். முன்னதாக தென் கொரியாவில் கற்பிக்கும் போது, அவர் தனது பயண அனுபவங்களை ஹங்கிரி பார்ட்டியர் (Hungry Partier) என்ற வலைப்பதிவில் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.

அதில் அவர் தனது பயண அனுபவங்களை ஆவணப்படுத்தினார். இந்த வலைப்பதிவின் வெற்றி, அவரை 2015 இல் யூடியூப் சேனல் மற்றும் பேஸ்புக் பக்கத்தை தொடங்க வழிவகுத்தது. பின்ஸ்கியின் ஃபேஸ்புக் பக்கமும்ம் யூடியூப் சேனலும் பிரபலமடைய தொடங்கியது. பின்னர் 2017 ஆம் ஆண்டில், வட கொரியாவில் அவர் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தைப் பற்றிய ஒரு வீடியோவை அவர் செய்தார், அது வைரலாகி கிட்டத்தட்ட 10 மில்லியன் பார்வைகளை சென்றடைந்தது.

அவரது வீடியோவின் வெற்றியைப் பார்த்த பிறகு, அவர் தனது வீடியோவை யூடியூப் மற்றும் பேஸ்புக்கிற்கு அதிகமாக வெளியிடத் தொடங்கினார். பின்ஸ்கி ஆரம்பத்தில் குறைந்த பட்ஜெட்டில் பயணம் செய்யத் தொடங்கினார், ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் அவரது வீடியோ மூலம் அவருக்கு லாபம் அதிகரிக்கத் தொடங்கியது. அவர் இப்போது வரை யூடியூப்பில் 2.7 மில்லியன் சந்தாதாரர்களையும், பேஸ்புக்கில் 4 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களையும் கொண்டுள்ளார்.

மேலும் அவர் சமூக தளங்கள், பிராண்ட் ஒப்பந்தங்கள் மற்றும் தனது சொந்த பொருட்களை விற்பதன் மூலம் விளம்பர வருவாய் மற்றும் ஆன்லைன் படிப்பு மூலம் பணம் சம்பாதிக்கிறார். அதுமட்டுமல்லாது ஒருநபராகத் தொடங்கிய அவரது நிறுவனம் இன்று 26 பேர் கொண்ட குழுவாக மாறியுள்ளது. மேலும் வீடியோவில் தன்னை பின் தொடர்பவர்களுக்கு பல்வேறு தகவல்களை தெரிவிப்பார்.

குறிப்பாக தென்கிழக்கு ஆசியா, கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் குறைந்த கட்டணங்களில் பயணிக்குமாறும், மேற்கு ஐரோப்பா மற்றும் ஸ்காண்டிநேவியா மற்றும் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் துபாய் போன்ற நாடுகளில் பயணச் செலவு அதிகமாக இருக்கும் நாடுகளைத் தவிர்க்கவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாது, "ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான், லிபியா, சோமாலியா, ஏமன், துர்க்மெனிஸ்தான், ஈரான், லெபனான் போன்ற நாடுகளில் எனது இதயம் உள்ளது - அந்த நாடுகளில் எல்லோரும் செல்ல பயப்படுகிறார்கள். இது ஒரு போர் மண்டலம் என்று நினைக்கிறார்கள், மேலும் அது மிகவும் பாதுகாப்பற்றது என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் அங்கு சென்று மக்களைச் சந்தித்து இந்த நாடுகளின் மனிதநேய அம்சங்களுடன் இணைந்தால், அது மிகவும் அழகாக இருக்கிறது." என்று பின்ஸ்கி கூறுகிறார்.

Also Read: இந்திய அளவில் அசத்திய 'அரபிக் குத்து' வீடியோ.. YOUTUBE டாப்-10 வீடியோக்கள் பட்டியலில் இடம்பிடித்து சாதனை!