அரசியல்

"ஒன்றிய அரசின் அறிவிப்பு கூட்டாட்சிக்கும், மக்களாட்சிக்கும் எதிரானது" - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் !

"ஒன்றிய அரசின் அறிவிப்பு கூட்டாட்சிக்கும், மக்களாட்சிக்கும் எதிரானது" - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சுரங்கத் திட்டங்களுக்கு பொது மக்கள் கருத்துக் கேட்பிலிருந்து ஒன்றிய அரசு விலக்கு அளித்துள்ள குறிப்பாணையினைத் திரும்ப பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுப் பிரிவால் 08.09.2025 அன்று (எண். IA-Z-11013/136/2025-IA-I) வெளியிடப்பட்டுள்ள அலுவலகக் குறிப்பாணையின் மீது கவனத்தை ஈர்க்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், அந்தக் குறிப்பாணையின் மூலம், பகுதி B-ல் அறிவிக்கப்பட்ட அணு கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் முதல் அட்டவணையின் பகுதி D-ல் அறிவிக்கப்பட்ட முக்கியமான மற்றும் அரிய வகை கனிமங்களின் அனைத்து சுரங்கத் திட்டங்களும் பொது மக்கள் கருத்துக் கேட்பின் தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன என்றும், மேலும், அத்தகைய அனைத்துத் திட்டங்களும் சம்பந்தப்பட்ட குத்தகைப் பகுதியின் அளவைக் கருத்தில் கொள்ளாமல், ஒன்றிய அளவில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் கடற்கரை மணல் அமைப்புகளில் படிந்துள்ள அரிய மண் கனிம கூறுகளின் படிவுகளைக் கொண்டுள்ளன என்றும், இந்தக் கடற்கரைகள் சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவை என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், மன்னார் வளைகுடா மற்றும் பாக் விரிகுடாவின் மணல் கடற்கரைகள் அழிந்து வரும் ஆமைகளின் இனப்பெருக்கம், பவளப்பாறைகள், சதுப்பு நிலங்கள் மற்றும் மணல் திட்டுகளுக்கு தாயகமாக உள்ளன என்றும், அவை கடலரிப்பு மற்றும் சூறாவளி நிகழ்வுகளுக்கு எதிராக இயற்கைக் கேடயங்களாகச் செயல்படுகின்றன என்றும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

"ஒன்றிய அரசின் அறிவிப்பு கூட்டாட்சிக்கும், மக்களாட்சிக்கும் எதிரானது" - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் !

மேலும், இந்தச் சுற்றுச்சூழல் அமைப்புகள் பல்லுயிரியலை நிலைநிறுத்துகின்றன; கரையோரங்களை உறுதிப்படுத்துகின்றன; கார்பனை பிரித்தெடுக்கின்றன மற்றும் கடல் அரிப்பிலிருந்து சமூகங்களைப் பாதுகாக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய பகுதிகளில் சுரங்கம் என்பது இயல்பாகவே சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கொண்டது என்றும், எனவே, உள்ளூர் சமூகங்களின் முழுமையான ஈடுபாட்டுடன் கடுமையான ஆய்வு தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1997 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட 1994 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிவிப்பு, கட்டாய பொது மக்கள் கருத்துக் கேட்புகளை அறிமுகப்படுத்தியது என்பதை நினைவு கூர்ந்துள்ள முதலமைச்சர் அவர்கள், இந்தப் பங்கேற்பு சுற்றுச்சூழல் நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறி, ஒரு மைல்கல்லாகத் திகழ்கிறது என்று தெரிவித்துள்ளார். இந்தப் பாதுகாப்பு 2006 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிவிப்பில் வலுப்படுத்தப்பட்டது என்றும், பொது மக்கள் கருத்துக் கேட்பிருந்து திட்டங்களுக்கு விலக்கு அளிப்பது என்பது, வாழ்வாதார இழப்பு, இடப்பெயர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பான நியாயமான கவலைகளை எழுப்பும் உள்ளூர் சமூகங்களின் உரிமையைப் பறிக்கும் என்றும், இது மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்தின் கொள்கைகளை பலவீனப்படுத்தும் என்றும் கவலைபடத் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்தக் குறிப்பாணை, கடுமையான சட்டரீதியான கவலைகளையும் எழுப்புகிறது என்றும், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த காலங்களில் சட்டப்பூர்வ பாதுகாப்புகளை நீர்த்துப்போகச் செய்யும் இத்தகைய அலுவலகக் குறிப்பாணைகளை ரத்து செய்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் அவர்கள், Alembic Pharmaceuticals Ltd. v. Rohit Prajapati & Ors. (2020) வழக்கில், உச்சநீதிமன்றம், அலுவலகக் குறிப்பாணைகள் போன்ற நிர்வாக அறிவுறுத்தல்கள் மூலம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) கட்டமைப்பில் கணிசமான திருத்தங்களைக் கொண்டு வரமுடியாது என்றும், அத்தகைய கருவிகள் சட்டப்பூர்வ அறிவிப்புகளை மீற முடியாது என்றும் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தற்போதைய அலுவலகக் குறிப்பாணை பொது மக்கள் கருத்துக் கேட்பிற்கு வழிவகுக்காமல், அனுமதிக்க முடியாத நிர்வாகச் சட்டத் திருத்தத்திற்குச் சமமாக உள்ளது என்றும், எனவே இது நிலைக்கத்தக்கதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"ஒன்றிய அரசின் அறிவிப்பு கூட்டாட்சிக்கும், மக்களாட்சிக்கும் எதிரானது" - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் !

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை மாற்றங்கள் நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் வெளிப்படையாக விவாதிக்கப்பட வேண்டும் என்றும், மாநில அரசுகள் மற்றும் பொதுமக்களின் உரிய ஆலோசனையுடன் செய்யப்பட வேண்டுமென்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், மேற்கூறிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் வெளியிடப்படும் இத்தகைய அறிவிப்புகள் கூட்டாட்சி உணர்வுக்கும், நமது நாட்டின் மக்களாட்சி நெறிமுறைகளுக்கும் எதிரானதாக இது அமையும் என்றும் அவர் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, 08.09.2025 நாளிட்ட அலுவலகக் குறிப்பாணையை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசை தான் வலியுறுத்துவதாகவும், கடந்த காலங்களில் எப்போதும் செய்யப்பட்டது போல, நாட்டின் முன்னேற்றத்திற்கு மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு பங்களிப்பதற்கான தமிழ்நாட்டின் உறுதிப்பாட்டை இத்தருணத்தில் மீண்டும் தான் வலியுறுத்த விரும்புவதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories