அரசியல்

“ஒன்றிய அரசு எவ்வித நிதிப் பகிர்வையும் ஒழுங்காக மேற்கொள்வதில்லை!” : சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நடைபெற்ற 11வது காமன்வெல்த் பாராளுமன்ற சங்கத்தின் இந்திய பிராந்திய மாநாட்டில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு சிறப்புரை.

“ஒன்றிய அரசு எவ்வித நிதிப் பகிர்வையும் ஒழுங்காக மேற்கொள்வதில்லை!” : சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நடைபெற்ற 11வது காமன்வெல்த் பாராளுமன்ற சங்கத்தின் இந்திய பிராந்திய மாநாட்டில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு அவர்கள் ஆற்றிய உரை.

முதலாவதாக, இந்த மாநாட்டினை சிறப்பாக ஏற்பாடு செய்தமைக்கும், விருந்தோம்பலுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் நடைபெறும் விவாதங்கள் மக்களின் நலனுக்காகவும், அவர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் முன்னுரிமைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு கூட்டாட்சி அமைப்பில், மாநில அரசுகள் மக்களுடன் மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டிருப்பதால், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் சுமுகமாகவும், உறுதியானதாகவும் இருக்க வேண்டும். “அமைதி, வளம், வளர்ச்சி” இந்த மூன்றும் இருந்தால்தான், மாநிலங்கள் சிறப்பாக வளர்ச்சியடையும் என்ற அடிப்படையில்தான் இந்திய அரசமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இராஜமன்னார், சர்க்காரியா, வெங்கடாசலயா மற்றும் பூஞ்ச் குழுக்கள் ஒன்றிய, மாநில அரசுகளின் உறவுகள் ஆரோக்கியமானதாக இருப்பதற்காக பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளன. மேலும், மாநிலங்களில் ஆளுநர்களை நியமிக்க வேண்டுமென்றால், மாநில முதலமைச்சர்களின் ஆலோசனைகளை பெற வேண்டுமென்றும் பரிந்துரை செய்யப்பட்டது. இதை ஒரே வரியில் தலைவர் கலைஞர் அவர்கள் “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்று தெளிவாகக் குறிப்பிட்டார்.

இந்திய அரசமைப்பின் அட்டவணை 7, பிரிவு 246-இல் ஆரம்பத்தில் மாநிலப் பட்டியலில் 66 பொருட்பாடுகள் இருந்தன. கல்வி உள்பட 5 பொருட்பாடுகள் மாநில பட்டியலிருந்து பொது மற்றும் ஒன்றிய பட்டியலுக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மூலம் மாற்றப்பட்டுவிட்டன.

அண்மைக்காலமாக, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமலேயே நிருவாக ரீதியான அறிவிப்புகள் மூலமாகவும், அரசாணைகள் மூலமாகவும் கனிமவளம், மீன் வளம், கூட்டுறவுச் சங்கங்களுக்கான அதிகாரங்கள் உள்பட பல்வேறு உரிமைகள் மாநில அரசுகளிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன. இது கூட்டாட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.

“ஒன்றிய அரசு எவ்வித நிதிப் பகிர்வையும் ஒழுங்காக மேற்கொள்வதில்லை!” : சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!

சமீபத்தில்கூட, மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியில் கனிம வளங்களை தனியார் நிறுவனம் வெட்டி எடுப்பதற்கான அனுமதியை ஒன்றிய அரசு வழங்கியதால், அப்பகுதியில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டபோது அது மாநில அரசுக்குத்தான் நெருக்கடியை கொடுத்தது.

அந்த நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் மேற்படி ஒன்றிய அரசின் நடவடிக்கையை எதிர்த்து தீர்மானத்தை நிறைவேற்றும்போது, அந்தப் பகுதியில் சுரங்க நடவடிக்கைகளை அனுமதிக்கப் போவதில்லை என்றும், அதையும் மீறி நடந்தால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார்.

இருந்தபோதிலும், இப்படிப்பட்ட பாதிப்புகள் குறித்து, சட்டமன்றத்தில் விவாதித்தாலும், முடிவுகள் ஒன்றிய அரசின் கையில் இருப்பதால், அதை விவாதித்தாலும் எந்தப் பயனும் ஏற்படுவதில்லை.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, முதன்முதலாக GST சட்டமுன்வடிவினை அறிமுகம் செய்தபோது, இப்போதைய பிரதமர் மோடி அவர்கள், அப்போது, குஜராத் மாநில முதலமைச்சராக பொறுப்பு வகித்த போது “இது மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதோடு, மாநில அரசுகளை ஒன்றிய அரசிடம் கையேந்தும் நிலைக்கு கொண்டு செல்லும்” என்று அவருடைய கருத்தைத் தெரிவித்தார்.

அவர் பிரதமராக பொறுப்பேற்றபின் கொண்டுவரப்பட்ட, GST-ல், கடந்த 8 ஆண்டுகளாக 4 அடுக்குகளாக வரி விதிப்புகள் வசூலிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போதுதான் அது இரண்டு அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் மாநில அரசின் பங்கு மேலும் குறைந்துவிட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது, சுதந்திர போராட்ட வீரர்கள் ஒரு பாடலைக் குறிப்பிட்டு பாடுவார்கள்.

ஊரான், ஊரான் தோட்டத்திலே...

ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய்..

காசுக்கு இரண்டு விற்கச் சொல்லி...

கடிதம் போட்டான் வெள்ளைக்காரன்..

விவசாயிகள் இந்தப் பாடலின் மூலம் தங்கள் துயரத்தை வெளிப்படுத்தினர். வெளிநாட்டினர் தங்கள் கடின உழைப்பால் உற்பத்தி செய்யும் பொருட்களின் மீது அதிகாரம் செலுத்துவதையும், அவர்கள் சொந்தமாக வைத்திருக்கும் உடைமைகளைக் கூட வெளிநாட்டினர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் கண்டு விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்தனர்.

இதேபோல், டெல்லியில் அமர்ந்திருக்கும் ஒன்றிய அரசும், மாநிலங்களின் கருத்தைக் கருத்தில் கொள்ளமால் பொருட்களின் மீது பல்வேறு வரிகளை விதித்து வருகிறது. GST வரிகளை (50:50) வசூல் செய்யும் தண்டல்காரர்களாக மட்டுமே மாநில அரசுகளை பயன்படுத்தி வருகிறது. 50 சதவிகித வரியைப் பெறும் ஒன்றிய அரசு, மாநில அரசுக்கு தரவேண்டிய, சமகர சிக்ஷா அபியான் (Samagara Shiksha Abhiyan) திட்டத்தின்மூலம் ரூபாய் 2,152 கோடி நிதியை இதுவரை ஒன்றிய அரசு விடுவிக்காமலே உள்ளது.

மேலும், தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவிகித இடஒதுக்கீட்டிற்கான ஒன்றிய அரசின் பங்களிப்பான 60 சதவிகித நிதியை கடந்த 4 ஆண்டுகளாக ஒதுக்கவில்லை. MGNREA திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியும் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், புயல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகளால் மாநிலங்கள் பாதிக்கப்பட்டாலும், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மிகக் குறைந்த அளவில் மட்டுமே நிதி விடுவிக்கப்படுகிறது. அரசியல் கருத்து வேறுபாடுகள் எவ்வாறான மோசமான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்பதை இது விளக்குகிறது.

வருமான வரி, சுங்க வரி, கலால் வரி, சேவைகள் வரி, பெட்ரோலிய செஸ் வரி, உள்ளிட்ட பல்வேறு வரிகள் மூலமாக ஒன்றிய அரசிற்கு வருவாய் வருகிறது, அதில், மிகவும் குறைந்த அளவில் மட்டுமே மாநில அரசுக்கு பங்குத் தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில், கல்வி, சுகாதாரம், சாலை வசதி போன்ற பணிகளை மாநில அரசுகள்தான் மேற்கொண்டு வருகின்றன.

மேலும், தமிழ்நாட்டில், புதுமைப் பெண் திட்டம், தவப்புதல்வன் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம், மகளிருக்கு பேருந்தில் கட்டணமில்லா பயணம், விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், அனைவருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முத்தாய்ப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கிராமப்புறங்களில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திலும் ஒன்றிய அரசு 72,000 ரூபாயும், தமிழ்நாடு அரசு 2,02,000 ரூபாயும், நகர்ப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தில், ஒன்றிய அரசு 1.5 இலட்சம் ரூபாயும், தமிழ்நாடு அரசு 7 இலட்சம் ரூபாயும் வழங்குகிறது. இதிலும், தமிழ்நாடு அரசுக்கு நிதிச் சுமை ஏற்படுகிறது. ஒன்றிய அரசு எந்தவிதமான நிதிப் பகிர்வையும் ஒழுங்காக மேற்கொள்வதில்லை.

“ஒன்றிய அரசு எவ்வித நிதிப் பகிர்வையும் ஒழுங்காக மேற்கொள்வதில்லை!” : சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!

மேலும், ஏழை விவசாயிகள், நெசவாளர்கள், சுய உதவிக் குழுக்கள், மாணவர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெற்ற கடன்களுக்கு ஒன்றிய அரசு எந்த சலுகையும் வழங்கவில்லை, மாறாக ஒரு சில செல்வந்தர்களால் நிர்வகிக்கப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களால் வாங்கப்பட்ட 15 லட்சம் கோடி ரூபாய் வங்கிக் கடன்களை செயல்படாத சொத்துகளாகக் கருதி தள்ளுபடி செய்துள்ளது, இது வருந்தத்தக்கது.

இவ்வாறு ஒன்றிய அரசு நிதிப் பகிர்மானத்தில் மாநிலங்களை வஞ்சித்தாலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையின்கீழ், தமிழ்நாடு அரசு 11.19% வளர்ச்சி அடைந்த மாநிலமாக உருவாகியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கடந்த 17-வது மக்களவையில் (2019-2024), அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு, மேதகு குடியரசுத் தலைவர் அவர்கள், ஒரிரு நாட்களில் ஒப்புதல் அளித்து, சட்டமாக்கப்படுகின்றன.

ஆனால், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையை பொறுத்தவரையில், ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட சட்டமுன்வடிவுகள் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கின்றன. குறிப்பாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிதி பொறுப்புடைமை திருத்தச் சட்டமுன்வடிவினை ஆளுநர் அவர்கள் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத்தில் மறுஆய்வு செய்ய சமீபத்தில் அனுப்பியுள்ளார். இதனால், மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதியொதுக்குவதில் மாநில அரசிற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு மாண்புமிகு ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்கு காலநிர்ணயம் செய்யப்பட வேண்டுமென்றும், இதற்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தில், சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், முதன்முதலில் 2021 ஆம் ஆண்டு சிம்லாவில் நடைபெற்ற அகில இந்திய மாநில பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு, நான் உரையற்றினேன். அதேபோன்று, மும்பை மற்றும் பாட்னாவிலும் நடைபெற்ற மாநாடுகளிலும், இதே கருத்தை மீண்டும் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினேன்.

தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான வில்சன் அவர்கள், ஆளுநர்கள், சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு கால நிர்ணயம் செய்ய வேண்டுமென்று, தனிநபர் சட்டமுன்வடிவினை மாநிலங்களவையில் தாக்கல் செய்து, வலியுறுத்தி பேசியுள்ளார்.

இப்பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் முன்னெடுப்பு காரணமாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கில், மேதகு குடியரசுத் தலைவர் மற்றும் மாண்புமிகு ஆளுநர்களுக்கு கால நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன். இந்த வரலாற்று தீர்ப்பினாது தற்போதைய சட்டமாகும்.

ஜெர்மனியில் 16 மாநிலங்கள் உள்ளன. அங்குள்ள ஒன்றிய அரசு மாநில அரசுகளுடன் அதிகாரத்தை சரிசமமாக பகிர்ந்து கொண்டுள்ளது. சாதாரண சாமானியர்களின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை ஜெர்மனியின் ஒன்றிய அரசு முடிவு செய்வதில்லை. அந்தந்த மாநில அரசுகள் தான் முடிவு செய்கின்றன.

எனவே, பிரதமர் மோடி அவர்கள் குஜராத் மாநில முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தபோது, கூறிய கருத்தின் அடிப்படையில், மாநிலங்களுக்கு முழுமையாக நிதி சுயாட்சி வழங்க வேண்டும் அல்லது மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி பங்கை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும். இதனால் மாநில மக்களுக்கு பயனளிக்கும் கூடுதல் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதை தெரிவித்துக்கொண்டு இத்துடன் எனது உரையை முடிக்கிறேன்.

நன்றி, வணக்கம்!

banner

Related Stories

Related Stories