Viral

டான்ஸ், கபடி என ஆட்டம் போடும் பிரக்யா சிங்.. தண்டுவடம் பாதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தை ஏமாற்றியதாக சர்ச்சை!

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி உடல்நலனைக் காரணம் காட்டி ஜாமினில் வெளியேவந்த பா.ஜ.க எம்.பி பிரக்யா தாக்கூர் கபடி விளையாடியதும், டான்ஸ் ஆடியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மலேகான் என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஆறு பேர் பலியாகினர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பா.ஜ.கவைச் சேர்ந்த பிரக்யா தாக்கூர் உடல் நலக்குறைவை காரணம் காட்டி 2017-ல் ஜாமினில் வெளியே வந்தார்.

விசாரணையின்போது போலிஸார் அவரை கடுமையாகத் தாக்கியதாகவும், அதனால் தன்னுடைய முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டதாகவும் கூறிய அவர் பல காலமாக சக்கர நாற்காலியில் அமர்ந்து பொது இடங்களுக்குச் சென்று வந்தார்.

இதையடுத்து மத்திய பிரதேசத்தின் போபால் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு எம்.பி.,யாக தேர்வானார். அதன்பிறகும் சக்கர நாற்காலியையே பெரும்பாலும் பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில், போபால் மைதானத்தில் பிரக்யா சிங் கூடைப்பந்து விளையாடும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரக்யா சிங் தாக்கூர் திருமண விழா ஒன்றில் நடனமாடும் வீடியோவும் வெளியானது.

சமீபத்தில் நவராத்திரி விழாவுக்குச் சென்ற பிரக்யா சிங், குஜராத்தின் பாரம்பரிய நடனமான கர்பா நடனமாடினார். கடந்த அக்டோபர் 13ஆம் தேதி போபாலில் உள்ள காளி கோவிலுக்கு சென்ற பிரக்யா சிங், அங்குள்ள மைதானத்தில் பெண்களுடன் உற்சாகமாக கபடி விளையாடினார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால், பிரக்யாசிங் தாக்கூருக்கு முதுகு தண்டுவட பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் சக்கர நாற்காலியில் பயணித்து மக்களை ஏமாற்றுகிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

உடல்நலம் சரியில்லை என பொய் சொல்லி விசாரணைக்கு கூட ஆஜராகாத பா.ஜ.க எம்.பி பொது இடங்களில் இப்படி துள்ளி குதித்து விளையாடுவது பா.ஜ.க தலைமையின் கண்களுக்கு தெரியவில்லையா காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Also Read: பெட்ரோல், டீசல் விலைலாம் ஒரு உயர்வா? - பாஜக எம்.பி பிரக்யா தாகூர் பேச்சால் மக்கள் கொதிப்பு!