Viral

விளம்பரத்திற்காக இவ்வளவு கேவலமாக இறங்கவேண்டுமா? : பெண்களை கொச்சைப்படுத்திய போஸ்டரால் பரபரப்பு!

உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பெண்களின் அடிப்படை உரிமைக்காக போராடிய நாளை நினைவு கூறும் வகையில் மார்ச் 8ல் பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், இணையவாசிகள் என பலரும் சமூகத்தில் சாதனை படைத்த பெண்களைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில், சென்னை நகரம் முழுவதும் பெண்களைக் கொச்சைப்படும் விதமாக ‘நாயே பேயே’ எனத் தலைப்பிட்டு போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. இது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா எடிட்டர் கோபி கிருஷ்ணா தயாரித்துள்ள படம்தான் 'நாயே பேயே'. இந்தப் படத்தில், நடன இயக்குனர் தினேஷ் நாயகனாகவும், ஐஸ்வர்யா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசரை சமீபத்தில் வெளிட்டனர். அதில் பெரும் வரவேற்பு கிடைக்காத நிலையில், எதிர்மறை விமர்சனங்கள் மூலம் விளம்பரம் தேடிக்கொள்ளும் வகையில் படக்குழுவினர், சர்வதேச மகளிர் தினமான இன்று சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் இத்தகைய போஸ்டரை ஒட்டியுள்ளனர்.

அந்தப் போஸ்டரில், “மொத மொதல்ல பேய கல்யாணம் பண்ணப் போறது நான்தானா? 90 சதவீதம் பொண்டாட்டிகள் பேய்தான?” என அச்சிட்டப்பட்டுள்ளது. இது பெண்களை கொச்சைப்படும் விதமாக இருப்பதாக மகளிர் அமைப்பினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இதுபோன்று பெண்களைக் கொச்சைப்படும் நோக்கில் போஸ்டர் வெளியிட்ட படக்குழு அனைத்து பெண்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என அவ்வமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: “தி.மு.க கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்?” : அடுத்தடுத்து தொகுதி பங்கீடு - பரபரக்கும் தேர்தல் களம்!