Viral

கரண்ட் கட்.. டார்ச் லைட் வெளிச்சத்தில் ஆப்ரேஷன் : பா.ஜ.க ஆளும் உத்தரபிரதேசத்தின் அவலம் !

பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தர பிரதேச மாநில சம்பல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் இன்வெர்ட்டர் வசதி மற்றும் போதிய வசதிகள் இல்லாததால் பல மணிநேரங்கள் மின்சாரமின்றி நோயாளிகள் தவித்து வந்துள்ளனர். மேலும் மருத்துவர்கள் தொடர் மின்வெட்டினால் நோயாளியின் உறவினர்களை டார்ச் லைட்டினை பிடிக்கச் செய்து அந்த வெளிச்சத்தில் மருத்துவம் பார்த்துள்ளனர்.

அதேபோன்று சில அவசர அறுவை சிகிச்சையின் போது, மருத்துவமனை ஊழியர்கள் போன் டார்ச் லைட் பிடித்துக்கொண்டும், மருத்துவர்கள் அந்த வெளிச்சத்தில் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். இதனால் நோயாளிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனையடுத்து பல நோயாளிகளை நாளை வந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள் என மருத்துவமனை நிர்வாகம் வற்புறுத்தியுள்ளது.

மேலும் இதுகுறித்து நோயாளிகள் கூறுகையில், “மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லையென்றும், இன்வெர்ட்டர் வசதி இல்லையென்பதால் பல மணிநேரங்கள் மின்சாரமின்றி தவித்து வருவதாகவும், அரசு இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

மேலும் உத்தரபிரதேசத்தில் உள்ள பெரும்பாலான மருத்துவமனை சுகாதார சீர்கேடுகளுடன் உள்ளது. நோயாளிகள் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் தான் இங்குள்ள மருத்துவமனை இருப்பதாகவும், இந்த யோகி அரசு மக்கள் பிரச்சனை கண்டுகொள்ளாமல் செயல்படுகிறது என சமூக ஆர்வலர்கள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.