Tamilnadu

தமிழக அச்சகங்களுக்குக் கதவடைப்பு? - ரூ.90 கோடி பாடநூல் அச்சடிப்பு ஒப்பந்தத்தில் புதிய சர்ச்சை!

தமிழ்நாடு பாடநூல் அச்சடிப்புப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கடந்த 22 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் இதுவரை புதிய டெண்டர் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

ஏற்கனவே, நடைமுறையில் இருந்த டெண்டரையே நீட்டிப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தமிழ்நாடு பாடநூல் அச்சிடுவோர் நலச்சங்கத்தின் தலைவர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த டெண்டரில் ஒரு டன் காகிதத்திற்கான அச்சடிப்புப் பணிக்கு ரூ.20,000 வழங்கப்பட்டதாகவும் தற்போதைய செலவினங்களைக் கருத்தில் கொண்டு இந்தக் கட்டணத்தை 10 சதவிதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அச்சக உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

ஆனால், கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்க்கப்படாத நிலையில், பழைய டெண்டரை நீட்டிப்பதற்கு தாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை எனச் சங்கத்தினர் கூறினர்.

புதிய டெண்டர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டால் அடுத்தக் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாக பள்ளி மாணவர்களுக்குத் தேவையான பாடநூல்களை அச்சிட்டு விநியோகிப்பதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றும் அச்சக உரிமையாளர்கள் கவலை தெரிவித்தனர்.

எனவே, மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, பாடநூல் அச்சிடுவதற்கான புதிய டெண்டர் அறிவிப்பைத் தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்கள்.

இதற்கிடையே, பாடநூல் அச்சிடும் ஒப்பந்தங்களைத் தமிழ்நாட்டில் அமைந்துள்ள அச்சகம் மற்றும் பைண்டிங் பிரிவுகளைக் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கும் வகையில் டெண்டர் நிபந்தனைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்பதும் அச்சக உரிமையாளர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் நடைமுறையில் இருப்பது போல, மாநிலத்திற்குள் அச்சக வசதி கொண்ட நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முறையைத் தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பெரிய அச்சகங்கள் இருப்பதாகவும் பாடநூல் அச்சடிப்புப் பணிகளை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 20,000 குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்று வருவதாகவும் சங்கத்தினர் சுட்டிக்காட்டுகிறனர்.

ரூ.90 கோடி மதிப்பிலான பாடநூல் அச்சடிப்புப் பணிகளில் தமிழக அச்சகங்களுக்கு உரிய வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பாடநூல் அச்சிடுவோர் நலச்சங்கத்தின் தலைவர் பிரேம்குமார், தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கையாக முன்வைத்துள்ளார்.

Also Read: “செக்காணுரணி காவல் சித்திரவதை மரணம்.. CBI-க்கு வழக்கை மாற்றுக” : கனிமொழி எம்.பி வலியுறுத்தல்!