Tamilnadu

“த.வெ.க ஆட்சி தானாகவே கவிழும்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்!

”நாங்கள் எந்தவொரு குதிரை பேரத்திலோ அல்லது இந்த ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியிலோ ஈடுபட மாட்டோம்; இந்த ஆட்சி தானாகவே கவிழும்” என என தி.மு.க முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க முன்னாள் அமைச்சர் ரகுபதி, "தி.மு.க குதிரை பேரத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் கிடையாது. த.வெ.க அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தங்களுக்குள் ஒரு தனி அணியாகச் செயல்படுவதற்கோ அல்லது சட்டமன்றத்தில் த.வெ.க அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கோ வாய்ப்புகள் உள்ளன.

அப்படி ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால், தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி அமலாகலாம். அல்லது ஆட்சி கவிழ்ந்து மீண்டும் ஒரு பொதுத்தேர்தல் வரக்கூடும். அப்போது மக்கள் ஆதரவோடு திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, மீண்டும் திமுக ஆட்சி மலரும்.

நாங்கள் எந்தவொரு குதிரை பேரத்திலோ அல்லது இந்த ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியிலோ ஈடுபட மாட்டோம்; இந்த ஆட்சி தானாகவே கவிழும். த.வெ.க அரசின் மீது மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியைக் கண்டுதான், அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் தனி அணியாகச் செயல்பட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே, கட்சித் தலைவர் விஜய் அடிக்கடி எம்.எல்.ஏ-க்களை அழைத்து அவசரப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்

இன்றைய த.வெ.க அரசு, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை போன்ற முந்தைய தி.மு.க அரசின் நல்ல திட்டங்களின் பயனாளிகளைக் குறைத்து வருகிறது. தகுதியான பலருக்கு அந்தத் தொகை கிடைக்காதபடி பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகிறது. மேலும், தமிழகம் முழுவதும் த.வெ.க-வின் எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகள் மற்றும் ரசிகர் மன்றங்களைச் சேர்ந்தவர்கள் அரசு அதிகாரிகளையும் ஆளும்கட்சி நிர்வாகிகளையும் வரம்பு மீறி மிரட்டி வருகின்றனர். இதனால் அரசு அதிகாரிகள் எந்தவொரு முடிவும் எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

கடந்த ஆறு மாத கால த.வெ.க ஆட்சியில் தமிழகம் எந்த அளவிற்குச் சீரழிந்துள்ளது என்பதைப் பொதுமக்கள் நேரடியாகப் பார்த்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர் தரப்பில் தலைமைச் செயலாளரிடமும் மத்திய அரசிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் தமிழக அரசு இதுவரை அந்த எம்.எல்.ஏ மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மகளிர் ஆணையம் இவ்விவகாரத்தில் தலையிட்டுள்ளது; அவர்கள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவது குறித்தும், எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான விவகாரங்கள் குறித்தும் இந்திய உள்துறை அமைச்சகம் தமிழக ஆளுநரை டெல்லிக்கு வரவழைத்துக் கேட்டுறிந்துள்ளது. இந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மீது மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்" என்று ரகுபதி கூறினார்.

Also Read: செஞ்சியில் சிறுமி காணாமல்போய் 30 நாட்கள் ஆகியும் மீட்காத அவலம்! - கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!