Tamilnadu
மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதில் என்ன பிரச்சினை? - துரைமுருகன் சாடல்!
திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மேகதாது அணை விவகாரம், வைகோவின் விமர்சனம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
மேகதாது அணை விவகாரம் குறித்து அவர் கூறியதாவது:
மேகதாது அணை விவகாரத்தைத் தமிழ்நாடு அரசு ஏனோ தானோவென்று கருதுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு எவ்வளவு வேகமாகச் செயல்படுகிறது என்பதைத் தமிழ்நாடு அரசு உணர வேண்டும். இந்தப் பிரச்சினையை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தாவிட்டால், தஞ்சை பகுதி சஹாரா பாலைவனமாக மாறிவிடும்.
தமிழ்நாடு எதிர்த்தாலும், ஒன்றிய அரசு எதிர்த்தாலும் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் எனக் கர்நாடக முதலமைச்சர் பேசியிருப்பது அவரது பெருமைக்கு அழகல்ல. பிரதமர் முன்னிலையிலேயே அணை கட்ட ஒத்துழைப்பு கோரியிருப்பது சிறுபிள்ளைத்தனமான செயல்.
கர்நாடக அரசு நினைத்தவுடன் அணையைக் கட்டிவிட முடியாது. முதலில் கட்டுமானத் திட்டத்தை மத்திய நீர்வளத்துறைக்கு அனுப்ப வேண்டும். அதன் ஒப்புதலுக்குப் பிறகு சுற்றுச்சூழல் துறை, வனத்துறை எனப் பல்வேறு அனுமதிகளைப் பெற வேண்டும். இவற்றையெல்லாம் தாண்டி உச்சநீதிமன்றத்தையும் அணுக வேண்டியிருக்கும். இத்தனை தடைகள் இருக்கும்போது, அணையைக் கட்டியே தீருவோம் எனக் கர்நாடக முதலமைச்சர் பேசுவது சரியான அணுகுமுறை அல்ல. மேகதாது அணையைக் கட்டிக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
இந்தப் பிரச்சினையைத் தமிழ்நாடு அரசு மிகவும் தீவிரமான ஒன்றாகக் கருத வேண்டும். இது ஆளுங்கட்சி மட்டும் போராட வேண்டிய பிரச்சினை அல்ல. அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் பேசுவதைப் போலத் தமிழ்நாட்டிலும் ஒற்றைக் குரல் ஒலிக்க வேண்டும்.
இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என எங்கள் தலைவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அனைத்துக் கட்சியினர் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுவதற்கு அரசு ஏன் தயங்குகிறது எனத் தெரியவில்லை.
மேலும், முதலமைச்சர் டெல்லி சென்றபோது மேகதாது விவகாரம் குறித்து பிரதமரைச் சந்தித்துப் பேசுவேன் என்ற அறிவிப்பைக்கூட வெளியிடவில்லை. டெல்லியில் சோனியா காந்திக்கு அருகில் முதலமைச்சர் அமர்ந்த புகைப்படம் மட்டுமே வெளியாகியுள்ளது. புகைப்படம் எடுத்துக்கொள்வது பிரச்சினையல்ல. மேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடக முதலமைச்சரிடம் ஒன்றரை மணி நேரம் பேசினேன் என்று செய்தி வந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய இந்தப் பிரச்சினையில் முதலமைச்சர் உரிய கவனம் செலுத்த வேண்டும். கர்நாடக அரசு இந்த விவகாரத்தில் தீவிரமாகச் செயல்படும்போது, தமிழ்நாடும் வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“பொய் சொல்லும் டி.கே.சிவக்குமார்... தீர்ப்புகளை மதிக்காத கர்நாடகம்!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
வேட்பாளரிடம் பணம் பெற்றுகொண்டு சீட்... தவெக IT Wing நிர்வாகியின் வீடியோவால் பரபரப்பு!
-
பத்திரிகை சுதந்திரத்தை தடுப்பதா? : காவல்துறையின் அராஜகத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்!
-
8 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி.. சரண்டர் ஆன சில மணி நேரத்திலேயே தப்பியோடிய அவலம்.. திணறும் போலீஸ்!
-
மதுபானங்களையும் உயிர் காக்கும் மருந்துகள் பட்டியலில் இணைத்து விட்டார்களோ? : மா.சுப்பிரமணியன் ஆவேசம்!