Tamilnadu

Tanishq கொள்ளை : தொக்காக சிக்கிய கொள்ளையன்... 2023-லேயே வழக்கு... யார் இந்த நிஷாந்த்?

மதுரை பைபாஸ் சாலையில் கடந்த அக்டோபர் மாதம் திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில், கடந்த நவ.12-ம் தேதி கொள்ளை சம்பவம் அரங்கேறியது. சுமார் ரூ.20 கோடி மதிப்பிலான 15 கிலோ நகைகளைக் கொள்ளை போன சம்பவத்தில் பைக் ரைடரும், வீடியோ எடிட்டருமான நிஷாந்த் (25) என்ற இளைஞர் ஈடுபட்டது போலீசார் கண்டறிந்தனர்.

நிஷாந்த் தலைமறைவானதை தொடர்ந்து நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் இன்ஸ்டா பிரபலமும் நிஷாந்தின் நெருங்கிய தோழியான மீனாட்சியையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடைபெற்ற விசாரணையின் மூலம், சுமார் 5 அரை கிலோ நகைகளை மீட்டனர்.

மேலும் தலைமறைவான நிஷாந்தை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், பேருந்து நடத்துனர் அளித்த தகவலின் பேரில், தர்மபுரி மாவட்டம் சேசம்பட்டி புறவழிச்சாலை (Bypass) பகுதியில் காவல்துறையினர் நிஷாந்தை கைது செய்தனர். தொடர்ந்து நிஷாந்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழலில் இதுகுறித்து இன்று (நவ.17) மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நிஷாந்த் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்தார்.

அதாவது, கடந்த 2023-ம் ஆண்டிலேயே பைக் ரேஸில் ஆர்வமுள்ள நிஷாந்த் ஒரு சாலை விபத்தில் சிக்கியுள்ளார். அப்போது அந்த விபத்தில் எதிரே வந்த நபர் உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக நிஷாந்த் மீது போலீசார் 304 ஏ பிரிவில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் நிலை குறித்து போலீசார் மேலும் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நிஷாந்திடமும் தங்கம் மற்றும் வைர நகைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான 11.384 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நிஷாந்துக்கும், மீனாட்சிக்கும் கல்லூரியில் இருந்தே நட்பு இருந்து வந்துள்ளதாகவும், மீனாட்சியின் ஸ்கூட்டரையே திருட்டு சம்பவத்திற்கு நிஷாந்த் பயன்படுத்தியதும், இந்த திருட்டு சம்பவமே மீனாட்சியின் புது வீடு கட்ட பண தேவை இருந்ததால் அரங்கேறியது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Also Read: 3 கி.மீ. வேகத்தில் நகரும் அக்வான் புயல்... நவ.20 அன்று கரையைக் கடக்கிறது! : வானிலை ஆய்வு மையம் தகவல்!