
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ‘அக்வான்’ புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ‘அக்வான்’ புயல், கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
தற்போது சென்னைக்கு கிழக்கே சுமார் 610 கி.மீ. தொலைவிலும், இலங்கையின் திரிகோணமலைக்கு வடகிழக்கே 630 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 660 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.

இப்புயல் இன்று (நவ.17) மாலை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் தீவிரப் புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற நவ.19-ம் தேதி காலை மிகத் தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நகரும் இந்தப் புயல், வருகிற நவம்பர் 20-ஆம் தேதி நண்பகல் ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானம் கடற்கரைக்கு இடையே, நெல்லூர் – டியூனி பகுதிகளுக்கு இடைப்பட்ட இடத்தில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வேகத்திலும், அதிகபட்சமாக மணிக்கு 145 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






