Tamilnadu

Tanishq கொள்ளை : பெங்களூரு TO சேலம்... துப்பு கொடுத்த ஓட்டுநர்.. நிஷாந்த் பிடிப்பட்டது எப்படி?

மதுரை பைபாஸ் சாலையில் கடந்த அக்டோபர் மாதம் திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில், கடந்த நவ.12-ம் தேதி கொள்ளை சம்பவம் அரங்கேறியது. சுமார் ரூ.20 கோடி மதிப்பிலான 15 கிலோ நகைகளைக் கொள்ளை போன நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அதில் கொள்ளையனின் கையில் இருந்த டாட்டூவையும், கொள்ளையடிக்க பயன்படுத்திய நம்பர் பிளேட் இல்லாத ஸ்கூட்டரையும் வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும் கொள்ளை சம்வத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் தொப்பியுடன் இளைஞர் ஒருவர் கடையை நோட்டமிட்டதை கண்டறிந்த போலீசார், இந்த கொள்ளை சம்பவத்தில் நிஷாந்த் என்ற இளைஞர் ஈடுபட்டது தெரிந்துகொண்டனர்.

இதையடுத்து நிஷாந்தை தேடி சென்ற போலீசார், அவர் தலைமறைவானதை அறிந்துகொண்ட நிலையில், அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த சூழலில் நேற்று (நவ.15) இரவு நேரத்தில் பெங்களூருவிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் நிஷாந்த் பயணித்துள்ளார். அப்போது அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர், உடனடியாக அதியமான் கோட்டை காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் அளித்தனர்.

பின்னர் தர்மபுரி மாவட்டம் சேசம்பட்டி புறவழிச்சாலை (Bypass) பகுதியில் காவல்துறையினர் பேருந்தை மடக்கிச் சோதனையிட்டனர். அப்போது போலீசாரைக் கண்ட நிஷாந்த், பேருந்தின் ஜன்னல் வழியாகக் குதித்துத் தப்பிக்க முயன்ற நிலையில், அவரை காவல்துறையினர் சுற்றிவளைத்துப் பிடித்தனர். தற்போது அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக நிஷாந்தை தேடி சென்ற போலீசார், அவர் தலைமறைவானதை அறிந்துகொண்ட நிலையில், அவரது தந்தையை விசாரித்தனர். அப்போது நிஷாந்த், தான் கொள்ளையடித்த நகைகளை, தனது தந்தை சுரேஷிடம் கொடுத்து மறைத்து வைக்க சொன்னது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து நிஷாந்தின் தந்தையை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

மேலும் நிஷாந்தின் சமூக ஊடகத்தை ஆய்வு செய்ததில், அவர் இன்ஸ்டா பிரபலம் மீனாட்சியுடன் பேசி வந்தது தெரியவந்தது. இதையடுத்து நிஷாந்தின் தோழியும், பிரபல இன்ஸ்டா Influencer-மான மீனாட்சியிடம் (meenakshi_nachiyar) போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இந்த கொள்ளை சம்பவத்துக்கு மீனாட்சியும் உறுதுணையாக இருந்தது கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து மீனாட்சியிடம் நடைபெற்ற விசாரணையின் மூலம், வயல்வெளியில் சாக்குப்பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த திருடுபோன நகைகளில் சுமார் 5 அரை கிலோ நகைகளை போலீசார் மீட்டனர். மேலும் இந்த திருட்டு சம்பவமே மீனாட்சி, தான் கட்டும் புதிய வீட்டுக்காகவும், பல லட்சம் கடனை அடைப்பதற்காகவும் நடந்தது என்று கூறப்படுகிறது.

இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி மற்றும் அவரது காதலன் நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகிய இருவருக்கும் 29-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்ட நிலையில், இருவரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த நிஷாந்தை போலீசார் தேடி வந்த நிலையில், தர்மபுரி சேசம்பட்டி பகுதியில் பிடிபட்டதை தொடர்ந்து மீதி உள்ள நகைகளும் மீட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: கந்த சஷ்டி: முதல்வர் விஜய்க்கு அரோகரா.. ரமேஷுக்கு அரோகரா.. திருச்செந்தூரில் முருகரை இழிவுப்படுத்திய தவெக!