Tamilnadu

தமிழ்நாடு முழுவதும் காணாமல் போனவர்கள் எத்தனை பேர்? : DGP-க்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த சங்கர்ராஜ் என்பவரைச் சொத்துப் பிரச்சினைக்காக, அவரது தந்தையும் சகோதரரும் சட்டவிரோதமாகச் சிறைப்பிடித்து வைத்துள்ளதாகவும், அவரை மீட்டு ஒப்படைக்க வேண்டும் எனவும் அவரது மனைவி புவனேஸ்வரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா மற்றும் பி.கார்த்திகேயன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சங்கர்ராஜைக் கண்டுபிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இது தொடர்பான வழக்கைச் சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் எனப் புவனேஸ்வரி தரப்பில் வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில், சங்கர்ராஜைக் கண்டுபிடிக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும்; இந்த வழக்கு விசாரணையின்போது சங்கர்ராஜ் காணாமல் போனது தொடர்பாக அவரது தந்தை பொன்னன் ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்ததாகவும், 2021-ஆம் ஆண்டு சங்கர்ராஜ் மாயமானது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையைத் திருக்கோவிலூர் டி.எஸ்.பி. கண்காணிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு மாநிலங்களில் காணாமல் போனவர்களைக் கண்டறிய AI தொழில்நுட்பத்தை அந்தந்த மாநிலக் காவல்துறையினர் பயன்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டில் அதுபோன்ற செயலிகள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது தெரியவில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள்; ஆள்கொணர்வு வழக்குகளில் நீதிமன்றங்கள் அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பித்தாலும், தீவிரமாக விசாரணை நடத்தப்படுவதில்லை என்பது தெரியவந்துள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

பின்னர், சங்கர்ராஜைக் கண்டுபிடிக்க எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாகத் தாக்கல் செய்யும்படி திருக்கோவிலூர் டி.எஸ்.பி-க்கு உத்தரவிட்ட நீதிபதிகள்; தமிழ்நாடு முழுவதும் காணாமல் போனவர்கள் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்?

எத்தனை வழக்குகளின் புலன்விசாரணை நிலுவையில் உள்ளது? எத்தனை பேரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை? நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தப் போலீஸார் எடுத்த முயற்சிகள் என்ன? என்பது குறித்து 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என டி.ஜி.பி-க்கு உத்தரவிட்டுள்ளனர்.

அதேபோல, மாநிலம் முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளின் புலன்விசாரணையை விரைவுபடுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் டி.ஜி.பி. தனது அறிக்கையில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Also Read: “மொட்டை அடிச்சுருங்க.. ஒருவரது தோற்றம்தான்..” - பள்ளியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி சர்ச்சை பேச்சு!