Tamilnadu

ஊழல்.. ஊழல்... : த.வெ.க அரசின் அடுத்த ஊழல் வெற்றி சைக்கிள் திட்டம்!

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 5.32 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்குவதற்கான டெண்டரை முன்னணி நிறுவனமான ஹீரோ சைக்கிள்ஸ் (Hero Cycles) நிறுவனம் அண்மையில் கைப்பற்றியது.

இந்த டெண்டரின்படி, மாணவர்களுக்கான சைக்கிள் ஒன்றுக்கு ரூ.7,235 மற்றும் மாணவிகளுக்கான சைக்கிள் ஒன்றுக்கு ரூ.7,476 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், அண்டை மாநிலமான புதுச்சேரியில் சுமார் 8,861 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்குவதற்காக GeM (Government e-Marketplace) தளத்தில் அதிகாரப்பூர்வமாக விடப்பட்ட கொள்முதல் ஆவணத்தில், ஆண்களுக்கான சைக்கிள் விலை ரூ.6,268 என்றும், பெண்களுக்கான சைக்கிள் விலை ரூ.6,248 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ள அரசியல் விமர்சகர்கள், "வெறும் 8,800 சைக்கிள்கள் மட்டுமே வாங்கும் புதுச்சேரி அரசாங்கத்திற்கே ரூ.6,200 என்ற விலையில் சைக்கிள்கள் கிடைக்கும்போது, அதைவிட 60 மடங்கு அதிகமாக அதாவது 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சைக்கிள்களை மொத்தமாக (Bulk Order) வாங்கும் த.வெ.க அரசுக்கு அதைவிடக் குறைந்த விலையில்தான் கிடைத்திருக்க வேண்டும்.

பொதுவாக மொத்தமாக கொள்முதல் செய்யும்போது தயாரிப்பு செலவு குறைய வேண்டும். ஆனால், புதுச்சேரியை விட ஒரு சைக்கிளுக்கு ரூ.1,000 வரை ஏன் கூடுதலாகக் கேட்கப்படுகிறது?" என வினவியுள்ளனர்.

த.வெ.கஅரசின் மின்சாரக் கொள்முதல் டெண்டர் விவகாரத்தைத் தொடர்ந்து, தற்போது சைக்கிள் டெண்டரிலும் ஊழல் நடந்துள்ளதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து த.வெ.க அரசின் மின்துறை மற்றும் முக்கிய பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில், புதுச்சேரி சைக்கிள் டெண்டர் குறித்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் இந்த விளக்கத்தை மறுத்துள்ள விமர்சகர்கள், "புதுச்சேரியின் சைக்கிள் டெண்டர் ஆவணம் உண்மையில்லை என்றால், தமிழக அரசு பெற்றுள்ள டெண்டர் ஆவணங்களின் அசல் நகலை (Original Copy) பொதுவெளியில் வெளியிட அமைச்சர் நிர்மல்குமாருக்கு தைரியம் இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

சைக்கிள்களுடன் சேர்த்து ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் போன்ற கூடுதல் உபகரணங்கள் வழங்கப்படுவதாகக் காரணங்கள் கூறப்பட்டாலும், இவ்வளவு பெரிய விலை வித்தியாசம் ஏற்படுவது ஏன் என்ற கேள்விக்கு த.வெ.க உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அரசியல் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Also Read: “மீனவ மக்களின் வாழ்க்கையைக் கபளீகரம் செய்யும் மாஃபியா அரசு” : விஜய்யை Left Right வாங்கிய முரசொலி!