Tamilnadu

”ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாற்றி இருக்கும் காவல்துறை” : ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

த.வெ.க-வின் 5 மாத ஆட்சிக் காலத்தில், சட்டம்-ஒழுங்கு இந்தியாவிலேயே படுமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சிக் காலத்தில் அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது. ஒன்றிய அரசுடன் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், திமுக அரசின் செயல்பாடுகளைப் பாராட்டி ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு 10-க்கும் மேற்பட்ட விருதுகளை வழங்கியிருந்தது.

ஆனால், தற்போதைய த.வெ.க ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. பள்ளிக்குச் செல்லும் பெண் பிள்ளைகள் பத்திரமாக வீடு திரும்புவார்களா? என்ற அச்சத்தில் பெற்றோர்கள் வாழ்கின்றனர். அதுமட்டுமன்றி, சிறையில் இருக்கும் கைதிகள் கூட தப்பிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதையெல்லாம் பார்த்தும் முதலமைச்சர் மௌனம் காக்கிறாரே தவிர, சட்டம்-ஒழுங்கைச் சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பழனி கோவில் விவகாரத்தில் நடைபெற்ற 100 கோடி ரூபாய் ஊழலின் பிரதான குற்றவாளி, உயிரோடு சென்று தற்போது பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழ்நாடு காவல்துறையைத் தன்னாட்சியுடன் செயல்பட விடாமல், ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாற்றி வைத்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் கைது முறைப்படி நடைபெறவில்லை. ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பாகத் தனது வழக்கறிஞரின் இல்லத்தில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, காவல்துறை வழக்கறிஞர் இல்லத்திற்குள்ளேயே புகுந்து அவரைக் கைது செய்துள்ளது. காவல்துறை இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் கண்டித்து அறிவுறுத்த வேண்டும்.

திமுகவினர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு போன்றோரின் இல்லங்களில் சோதனை நடத்துவதெல்லாம் ஒரு நாள் செய்தியோடு கடந்து போய்விடும். தி.மு.க கடந்த 1976-ஆம் ஆண்டு முதலே இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகள் மற்றும் வழக்குகளைச் சந்தித்து வருகிறது. இந்தத் தொடர் கைதுகளும், சோதனைகளும் தவெக அரசின் தோல்விகளைத் திசைதிருப்பும் செயல்களாகும். இதைப் பற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை. அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, வருகிற சனிக்கிழமை திமுக மகளிர் அணி சார்பில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நிச்சயம் நடைபெறும்.

திருச்சி கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் தேர்தல் பணிகளை முன்னின்று நடத்துவார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டுதான் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு, மூன்று மாதங்கள் உள்ளன. அதுவரை அவர்கள் எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடட்டும், அதைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.

பேராசிரியரும், கல்வி நிபுணருமான கலையரசன் சமூக ஊடகத்தில் தவறாகப் பதிவிட்டதாகக் கூறி காவல்துறை அவரைக் கைது செய்து, பின்னர் விடுத்துள்ளது. காவல்துறையின் இந்த அத்துமீறலை நீதிமன்றத்தின் பார்வைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதே நேரத்தில், த.வெ.க ஐ.டி விங், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் குறித்துத் தொடர்ந்து அவதூறான பதிவுகளை வெளியிட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறையிடம் பல்வேறு புகார்கள் அளித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி பேசினார்.

Also Read: அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்த சோதனையில் எந்த ஆவணங்களையும் கைப்பற்றவில்லை! : கே.என்.நேரு பேட்டி!