Tamilnadu

Chief Minister விஜய் - Cheap Minister : தாராபுரத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!

இன்று (02-10-2026) தாராபுரத்தில் நடைபெற்ற பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் வழக்கறிஞர் எஸ். சுகன்யா அவர்களுக்கு ஆதரவாக நிகழ்த்திய உரையின் விவரம்:

அமராவதி ஆற்றின் அழகும் வரலாற்றுச் சிறப்பும் கொண்டிருக்கும் தாராபுரம் மக்களுக்கு என் அன்பான வணக்கம்! தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர் என்றால், அந்தத் தஞ்சைக்கே விதைநெல்லை விநியோகம் செய்யும் விதைக்களஞ்சியம், நம் தாராபுரம்! தென்னை, மஞ்சள் உற்பத்தியிலும் சிறந்து விளங்கும் சுறுசுறுப்பான ஊர், இந்த தாராபுரம்! உழைப்பையும் உண்மையையும் மதிக்கும் தாராபுரம் மக்களான உங்களிடம் வாக்கு கேட்டு மட்டும் நான் வரவில்லை; நியாயம் கேட்டு வந்திருக்கிறேன்!

ஒருவரிடம் பெட்டி பெட்டியாகப் பணத்தைத் திணித்ததால், மக்களான உங்கள் மீது இந்த இடைத்தேர்தல் திணிக்கப்பட்டிருக்கிறது. பெட்டியைக் கொடுத்தது யார்? பெட்டியை வாங்கியது யார்? உங்களுக்கு நன்றாக, உளப்பூர்வமாக தெரியும். இன்னொன்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் கட்டிய வரிப்பணத்தில்தான் இந்த இடைத்தேர்தல் நடக்கப்போகிறது. ஐந்து மாதங்களுக்கு முன்னால் நீங்கள் போட்ட வாக்கினைச் செல்லாத வாக்காக்கிவிட்டார்கள்! அந்த மக்கள் விரோதிக்கு, அந்தத் துரோகிக்கு நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். துரோகத்தை முறியடிப்பது மட்டுமில்லை — விலைபோகாத ஒருவரை, உங்களுக்கு விசுவாசமானவரை வெற்றி பெற வைக்கவும் உங்களை நாடி நான் வந்திருக்கிறேன். இதோ உங்களிடத்தில் இருகரம் கூப்பி, ஆதரவைக் கேட்டு, வாக்கு கேட்டு நிற்கிறார், நம்முடைய அருமைத் தங்கை வழக்கறிஞர் சுகன்யா. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர், நம்முடைய சுகன்யா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, நீங்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

தங்கை சுகன்யா துடிப்பான இளம் வேட்பாளர்! அடிப்படையிலேயே வழக்கறிஞர்! அதனால், சட்டமன்றத்திலும் உங்களுக்காக நன்றாக வாதாடுவார்! எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களிடம் வாங்கும் வாக்குகளை வேறு கட்சியிடம் விலைபேசி விற்கமாட்டார்!

பொதுத்தேர்தல் நடந்து ஐந்து மாதம்கூட ஆகவில்லை… அதற்குள் இந்த இடைத்தேர்தல். இது எதனால் வந்தது? இதற்கு காரணமானவர்கள் யார்? என்று தயவுசெய்து சிந்தித்துப் பாருங்கள்… சத்தியத்திற்கு விரோதமாகச் செயல்பட்ட அந்த வேட்பாளரை மக்களான நீங்களே இப்போது என்ன சொல்லி அழைக்கிறீர்கள்? "பெட்டி பாமா", "பல்டி பாமா" என்றுதான் சொல்கிறீர்கள். சட்டமன்ற உறுப்பினர் இறந்தால்தான், அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் வரும். அவ்வாறு வந்த தேர்தல் இது அல்ல! நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர் ஜனநாயகத்தைச் சாகடித்ததால் வரும் இடைத்தேர்தல் இது! ஆட்டம் காணும் ஆளுங்கட்சிக்குத் துணைபோக விலைபோனதால் இந்தத் தேர்தல் வந்திருக்கிறது! வாக்களித்த உங்கள் மீது துளிகூட மதிப்பே இல்லாமல், உங்கள் விரலில் இருக்கும் மை அழிவதற்கு முன்னாடியே வேறு கட்சிக்கு ஓடிப்போன அவர்களுடைய செயலில் என்ன கொள்கை இருக்கிறது? யாருடைய நலன் இருக்கிறது? உங்கள் வாக்குகளை விற்ற ஒரு வேட்பாளர், அதை விலைபேசி வாங்கிய ஒரு கட்சி — இதற்கு யாராவது மீண்டும் வாக்களிப்பீர்களா?

பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களைக்கூட வெல்ல முடியாத, மக்களின் ஆதரவு இல்லாத முதலமைச்சர், தன்னுடைய சுயலாபத்திற்காக மக்களின் தீர்ப்பை விலைக்கு வாங்க வரவழைத்திருக்கும் தேர்தல்தான், இந்தத் இடைத்தேர்தல்! புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கும் அவர், ஆட்சி செய்வது எப்படி என்று கற்றுக்கொள்ள முயற்சி செய்வார் என்று பார்த்தால், அதைவிட்டுவிட்டு அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிக்கொண்டிருக்கிறார்! இதுதான் நிர்வாகமா? இதுதான் மாற்றமா? "ஜனநாயகன்" என்று தன்னுடைய திரைப்படத்திற்குப் பெயர் வைத்த முதலமைச்சர், ஜனநாயகத்தின் வில்லனாகக் குதிரைபேரம் செய்து இந்த இடைத்தேர்தலை வரவழைத்திருக்கிறார்!

மக்களின் பெரும்பான்மை ஆதரவு இல்லாத இந்த ரீல் முதலமைச்சர், முதலில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்து ஆதரவை வாங்கினார். ஆளுநர் ஆட்சி வரக்கூடாது என்ற எண்ணத்தில் கம்யூனிஸ்டுகளும் ஆதரவு தந்தார்கள். இவர்களை யாரையும் நம்பாமல், அப்போதே சோபா அனுப்பி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாதி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை வாங்கினார். அது போதாதென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உடைத்து, பல சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ராஜினாமாவும் செய்ய வைத்து, தன்னுடைய கட்சியில் இணைத்துக்கொண்டு இந்த இடைத்தேர்தலை வரவழைத்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் இதற்கு முன்னால் இப்படி ஒரு இடைத்தேர்தல் வந்திருக்கிறதா? இல்லை. ஆணவத்தின் உச்சத்திலிருந்து தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைக் கொச்சைப்படுத்தும் முதலமைச்சர் விஜய்க்கு, தாராபுரம் மக்களாகிய நீங்கள் கொடுக்கப்போகும் அடி மறக்க முடியாத பாடமாக – மரண அடியாக இருக்க வேண்டும்! இல்லையென்றால், தமிழ்நாடு முழுவதும் இதுவே வேலையாக இறங்கிவிடுவார்கள். அதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இப்போதே எந்த அமைச்சரும் எந்த வேலையும் செய்யவில்லை; அவர்களுடைய துறையைக்கூட கவனிக்கவில்லை; எந்தத் துறையென்று அவர்களுக்கே தெரியாது. மின்சாரம் இல்லை, பால் கிடைக்கவில்லை, ரேஷன் கடையில் பாமாயில் கிடைக்கவில்லை என்று மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் — அமைச்சர்கள் எல்லாம் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் டேரா போட்டு உட்கார்ந்திருக்கிறார்கள். அரசாங்கம் செயல்படாமல் இருக்கிறது. இதெல்லாம் தெரிந்ததால்தான், துரோகத்தின் உருவமாக வரும் ஆளுங்கட்சி வேட்பாளருக்கு மக்களான நீங்கள் தரமான வரவேற்பு தந்து விரட்டியடிக்கிறீர்கள்… பல ஊர்களில் ஆளுங்கட்சியினரால் நுழையக்கூட முடியவில்லை… இதை தொலைக்காட்சியில், பத்திரிகைகளில் பார்க்கிறோம். இது, ஆளுங்கட்சி வேட்பாளர் மற்றும் அமைச்சர்களுக்கான எதிர்ப்பு மட்டும் கிடையாது; போலி பிம்பத்தைக் காட்டி ஏமாற்றும் முதலமைச்சர் விஜய்க்கான எதிர்ப்பு! அதை மறந்துவிடக் கூடாது.

பொதுவாக, ஓர் ஆட்சியின் முதல் ஆறு மாதத்தை "ஹனிமூன் பீரியட்" என்று சொல்வார்கள். ஆனால், நான்கே மாதத்தில் நாறிப்போனது, இந்த ஆட்சி. த.வெ.க.விற்கு வாக்களிக்காத மக்கள் மட்டுமில்லை, அவர்களுக்கு வாக்களித்த மக்களுமே இப்போது நாள்தோறும் புலம்பும் நிலைக்கு வந்துவிட்டார்கள்… உள்ளூரில் பெயர் ரிப்பேர் என்று தெரிந்ததும் இவர்கள் என்ன பண்ணினார்கள் தெரியுமா? கோடிக்கணக்கில் காசு கொடுத்து, பக்கத்து மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களில் எல்லாம் "டல்பதி விஜயின் சாதனைகள்" என்று அந்தந்த மாநில மொழிகளில் பொய்ச்செய்திகளைப் பரப்ப ஆரம்பித்துவிட்டார்கள். டிசைன் டிசைனாகப் பொய்ச்செய்தி! பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழ்நாட்டில் எல்லாத் தெருவிலும் முதலமைச்சர் ட்ரோன் மூலமாகக் கண்காணிக்கிறார்களாம். யோசித்துப் பாருங்கள்… இதெல்லாம் பொய் என்று தெரிந்தவர்கள் தமிழ்நாட்டை எவ்வளவு கேவலமாக நினைப்பார்கள்! இதெல்லாம் ஏன் செய்கிறார்கள் தெரியுமா? நான்கு மாதத்தில் சாதனை என்று சொல்ல என்ன இருக்கிறது? மின்வெட்டா? அரிவாள் வெட்டா? சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் கொடுமைக்கு ஆளாவதைச் சொல்வதா? அரிசி விலை உயர்வா? ஷாக் அடிக்கும் மின்சாரக் கட்டணத்தைப் பற்றிச் சொல்வதா? கடன் தள்ளுபடி என்று சொல்லி விவசாயிகளை ஏமாற்றியதைச் சொல்வதா? அதனால்தான் எல்லாமே ரீல்ஸ்!

சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு, முதலமைச்சர் இப்போது மக்கள் முன்னால் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது லேட்டஸ்டாகப் பிரச்சாரத்தில் கூட இருப்பவர்களையும் ஆர்ட்டிஸ்ட்டாக மாற்றிக் கொண்டிருக்கிறார். தாராபுரத்தில் அந்த நாடகத்தை எல்லாம் பார்த்தோம். "நீங்கள் அழாதீர்கள்! உங்களுக்கு வாக்களித்ததால் நாங்கள்தான் அழ வேண்டும்" என்று இப்போது மக்கள் சொல்கிறார்கள். பிரச்சார மேடையில் மைக் கிடைத்தால் போதும் என்று மனப்பாடம் செய்த வசனங்களைக் கத்துகிறார்! அவர் பேசுவதே கிடையாது, எல்லாவற்றுக்கும் கத்துவதுதான். அது சட்டமன்றமாக இருந்தாலும் சரி, தெருவாக இருந்தாலும் சரி, எங்கும் கத்துவதுதான். ஆனால், ஊடகங்களின் மைக்கைப் பார்த்தால் மட்டும் அவருக்கு அலர்ஜி! மேடையில் அவ்வாறு கத்துகிறீர்களே, சட்டமன்றத்தில் அவ்வாறு கத்துகிறீர்களே, மீடியா மைக்கைப் பார்த்து கொஞ்சம் பேசவாவது கூடாதா! அவருக்கு அலர்ஜி. அவரிடம் மேட்டூரில் கூலிங் கிளாஸ் வாங்கிய பாட்டி, அவர் காலை உணவு பரிமாறிய சிறுமி, இவர்கள் கூட தைரியமாக ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கிறார்கள்; கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார்கள். ஆனால், இந்த ரீல்ஸ் முதலமைச்சர் ஊடகம் என்று சொன்னாலே பயப்படுகிறார்.

இந்த லட்சணத்தில் இவர் என்னைப் பார்த்து, "வாயைத் திறங்கள் ஸ்டாலின் சார்" என்று காட்டுக் கத்தல் கத்துகிறார். நானும் கத்துகிறேன், சி.எம். சார்! ப்ரோ, சி.எம். சார்! நான் எல்லாவற்றிற்கும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். தலைமைத் தேர்தல் ஆணையர் விவகாரத்தில் ஏன் சார் பேசமாட்டேன் என்கிறீர்கள்? இதை நான் கேட்கவில்லை. உங்களுக்கு ஆதரவு கொடுத்த கட்சிகளே கேட்கிறார்கள் சார்… சி.எம். சார் என்ன பயம்? இந்தியா முழுவதும் எல்லாத் தலைவர்களும் பேசிக்கொண்டிருக்கும் விஷயத்தில் கூட, உங்களால் வாயைத் திறக்க முடியவில்லையே, என்ன காரணம் சி.எம். சார்… பா.ஜ.க. என்றால் அவ்வளவு பயமா சி.எம். சார்? இங்கே தாராபுரத்தில் பிரச்சாரத்திற்கு வந்தபோது அவரே ஒரு உண்மையையும் சொல்லிவிட்டார்! த.வெ.க. - பா.ஜ.க.வின் கிளைதான் என்று ஒத்துக்கொண்டார்! அந்த உண்மையைச் சொன்னதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்!

மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டிய சட்டமன்றத்தின் மாண்பையும் இந்த முதலமைச்சர் கெடுத்துவிட்டார். கண்ட கண்ட சைகைகளைக் காட்டி, நான் மிசா சிறைவாசத்தில் சந்தித்த கொடுமைகளைக் கிண்டல் செய்யும் இடமாகச் சட்டமன்றத்தை மாற்றியிருக்கிறார். மக்கள் "மாண்புமிகு முதலமைச்சர்" என்று கூப்பிடும் தராதரத்தோடு அவர் நடந்துகொள்ள வேண்டும். சுருக்கமாகச் சொல்கிறேன், Chief Minister-ஆக நடந்து கொள்ளுங்கள்; Cheap Minister-ஆக நடந்துகொள்ளாதீர்கள். நீங்கள் நடத்தும் த.வெ.க. என்பது ஒரு அரசியல் கட்சியே இல்லை… அது ஒரு கார்ப்பரேட் மாஃபியா... அதில் 'இன்வெஸ்டிங் பார்ட்னர்', 'வொர்க்கிங் பார்ட்னர்', 'ஸ்லீப்பிங் பார்ட்னர்', 'சீக்ரெட் பார்ட்னர்' என்று பெரிய கும்பலே இருக்கிறது… அந்த பார்ட்னர் எல்லாம் யார் என்று உங்களுக்கும் தெரியும். தமிழ்நாட்டைச் அம்பேல் ஆக்க வேண்டும் என்பதுதான் அந்த கார்ப்பரேட் மாஃபியா கும்பலின் இலக்கு!

த.வெ.க. ஆட்சி அமைந்த இந்த நான்கு மாதத்தில் நாட்டில் நடப்பது என்ன? பயிர்க்கடன் தள்ளுபடி செய்யாததால் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்! மீனவர்கள் வாழும் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டப்போவதால் மீனவர்கள் போராட்டம்! மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு அனுமதிச்சீட்டுகள் எல்லாவற்றையும் பழக்கதோஷத்தில் கறுப்புச் சந்தையில் விற்றதால் பக்தர்கள் போராட்டம்! வாரக்கடைசியில் ஊருக்குப் போகப் பேருந்துகள் இல்லாமல் பயணிகள் போராட்டம்! தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்! செவிலியர்கள் போராட்டம்! மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்! ஆவின் பால் கிடைக்காமல் போராட்டம்! இது எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்த மாதிரி, முதலமைச்சர் தொகுதி தொடங்கி அனைத்துத் தொகுதியிலும் மின்வெட்டுக்கு எதிராகப் போராட்டம்! ஏழு மணி நேரம் மின்சாரம் இல்லை; எட்டு மணி நேரம் மின்சாரம் இல்லை. வீட்டை விட்டுவிட்டு மக்கள் எல்லாம் இரவில் சாலையில் நின்று சாலை மறியல் செய்கிறார்கள். இப்படி, மக்களின் நிம்மதியைக் கெடுத்து அலையவிட்டுவிட்டு, முதலமைச்சர் மட்டும் பண்ணையார் மாதிரி பட்டுவேட்டி சட்டையில் பந்தா பண்ணிக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு டிரஸ், ஜோசியர் சொல்லி இருக்கிறார். வெள்ளிக் கிழமை என்றால் பட்டு வேஷ்டி.

தமிழ்நாடு விவசாயிகளின் உயிர்ப்பிரச்சினையான காவிரி விவகாரத்தில் கூட, கர்நாடகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மௌனமாக இருக்கிறார். கர்நாடகத்தின் செயலுக்குக் கூட எதிர்ப்புத் தெரிவிக்க உங்களுக்கு என்ன பயம்? என்ன தயக்கம்? மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வறட்சிப் பாதிப்பை அரசு அங்கீகரித்துச் சிறப்பு நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். குறுவை சிறப்புத் தொகுப்பிற்கும் - வறட்சி நிவாரணத்திற்கும் வித்தியாசம் தெரியாத முதலமைச்சர், இதையெல்லாம் நாளிதழ்களைப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். படித்த பிறகாவது விவசாயிகளுக்கு ஏதாவது செய்யுங்கள்! அடுத்து, 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று சொன்னார். இப்போது உங்கள் மின்சாரக் கட்டணம் குறைந்திருக்கிறதா? ஏறியிருக்கிறதா? பெரும்பாலான இடத்தில் ஏறியிருக்கிறது. அதுமட்டுமா? விலைவாசி எல்லாமே தாறுமாறாக ஏறிவிட்டது. தேர்தலுக்கு முன்னால் என்ன விலை? இன்றைக்கு என்ன விலை?

இன்று காலையில், தாராபுரம் நகரத்தில் நான் சாலைவலம் சென்றேன். அப்போது ஒரு மளிகைக் கடையில் போய் கேட்டேன். அரிசி, சர்க்கரை, எண்ணெய், காய்கறிகள் எல்லா விலையும் என்ன என்று கேட்டேன். கன்னாபின்னாவென ஏறியிருக்கிறது என்று சொன்னார்கள். நான்கு மாதங்களுக்கு முன்னால் அரிசி, சர்க்கரை, மளிகைப் பொருள், காய்கறி விலை என்ன? இப்போது விலை என்ன? முதலமைச்சருக்கு இதெல்லாம் தெரியுமா? விலைவாசியைக் கட்டுப்படுத்த ஆய்வுக் கூட்டம் நடத்துவார் என்று பார்த்தால், வெளிநாட்டிற்குப் படப்பிடிப்பிற்குப் புறப்பட்டுவிட்டார். இப்போது தமிழ்நாட்டில் என்ன உயர்வு தெரியுமா? ஒரு பக்கம் விலை உயர்வு! மறுபக்கம் கொலை உயர்வு! அதுவும் செய்தியைப் பார்த்தாலே, ஒரே நாளில் ஐந்து கொலை, எட்டு கொலை என்று கொத்துக் கொத்தாகத்தான் கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன! போதைப்பொருள் பற்றிப் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தால், தகவல் கொடுத்தவர்கள்தான் கொல்லப்படுகிறார்கள்; போதைப்பொருளை வைத்திருப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

கடந்த சில மாதங்களில் இருநூறிற்கும் மேற்பட்ட கொலைகள், முந்நூறிற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், ஏராளமான காவல் மரணங்கள், ஆணவக் கொலைகள் என வரலாறு காணாத வேகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுப்போய் இருக்கிறது. உண்மையிலேயே நல்லாட்சி நடந்தால் "நடப்பது எங்கள் ஆட்சி" என்று மக்கள்தானே பெருமையாகச் சொல்ல வேண்டும்? ஆனால், இப்போது யார் அப்படிப் பெருமையாகச் சொல்கிறார்கள் தெரியுமா? குற்றவாளிகள்தான் கெத்தாக "இது எங்கள் ஆட்சி" என்று சொல்லிக்கொண்டு சுற்றுகிறார்கள். அந்த அளவுக்குத்தான் சட்டம்-ஒழுங்கு இருக்கிறது. சிங்கப்பெண் அதிரடிப்படை எல்லாம் எங்கே போயிற்று? கடந்த காலங்களில் நடந்ததை விடப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை இப்போதுதான் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இதைப் பற்றியெல்லாம் காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சருக்குத் துளிகூடக் கவலையே இல்லை… சட்டம்-ஒழுங்கு பற்றிக் கேள்வி கேட்டால் பதில் சொல்லும் பொறுப்பைக் கூட மற்ற அமைச்சர்களிடம் கொடுத்துவிட்டார்.

அரசுப்பதவியில் ஜோசியர் நியமனம், கம்யூனிஸ்ட் கட்சிகளைக் குறிவைத்து அரசாணை, சொத்துவரி உயர்வு, சட்டம்-ஒழுங்கு தகவல்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தராமல் இருக்க அரசாணை, மாநில நெடுஞ்சாலைகளில் இந்திப் பெயர் பலகைகள் என்று பல விஷயங்களை அறிவித்துவிட்டுத் U-Turn அடிக்கிறார். இதனால் என்ன நடக்கிறது தெரியுமா? நமக்கு வர வேண்டிய முதலீடுகள் எல்லாம் ஆந்திராவிற்குத் U-Turn அடிக்கின்றன. ஆட்சி என்றால் என்னவென்றே தெரியாத ஒரு கூட்டத்திடம் தமிழ்நாடு சிக்கிச் சீரழிகிறது. இதுவே, நம்முடைய கழக ஆட்சி அமைந்த போதெல்லாம் மக்களின் தேவை என்னவென்று தெரிந்துகொண்டு திட்டங்களைத் தீட்டினோம்.

தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதுதான் கொங்கு வேளாள மக்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து, அவர்களுடைய பொருளாதார - கல்வி உரிமையை உறுதி செய்தார். அதேபோல அருந்ததியர் இன மக்களுக்கு உள்ஒதுக்கீடு கொடுத்து உயர்வு கொடுத்தது, கலைஞருடைய ஆட்சி. சிறுபான்மைச் சமுதாய மக்களான இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றியதும் தலைவர் கலைஞருடைய ஆட்சிதான். கண்ணன் நகர் பகுதி உழவர் சந்தை, கொளத்துப்பாளையம் கூட்டுறவு நூற்பாலை வளாகத்தில் சிப்காட் தொழிற்பேட்டை, பழனி - தாராபுரம் சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் எனப் பல சாதனைகள் கழக ஆட்சியில் செய்யப்பட்டன.

கடந்த ஐந்து வருடத்தில் என்னுடைய தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு குடும்பமும் பயனடைகிற வகையில் திட்டங்களைச் செய்தோம். பெருமையாகச் சொல்கிறேன், இந்தத் தாராபுரத்தில் மட்டுமே, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 55,745 பேர் மாதம் 1000 ரூபாய் இன்றைக்கு வரைக்கும் கொடுக்கப்படுகிறது என்றால், அது யாருடைய ஆட்சி? இந்த அடியேன் உங்கள் ஸ்டாலினுடைய ஆட்சி! இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், முதன்முதலில் கட்டணமில்லாத பேருந்துப் பயணத்தை ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே தொடங்கி வைத்தவன்தான் இந்த ஸ்டாலின்! அதுமட்டுமா, படிக்கிற மாணவர்களுக்குப் பணம் தடையாக இருக்கக் கூடாது என்று புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம் கொண்டுவந்து மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்த கரம்தான், இந்த ஸ்டாலினின் கரம். கலைஞர் வீடு வழங்கும் திட்டம், தோழி விடுதி, மக்களைத் தேடி மருத்துவம் என்று சொல்லிக் கொண்டே இருந்தால், இந்த ஒரு நாள் போதாது!

இந்தத் தாராபுரம் பகுதி தொழில் வளர்ச்சிக்காக மட்டும், 87 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறோம். 24 கோடி ரூபாயில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், புதிய பேருந்து நிலையம், ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம், அரசு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் குடிநீர் வசதிகள், ஜவுளிக்கடை மற்றும் பூக்கடை கார்னர் பகுதிகளில் மழைநீர் வடிகால் வசதிகள், புதிய சாலைகள், நல்லதங்காள் ஓடையில் பொன்னிவாடி கிராமத்தில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கிறது, அணைக்குக் கீழ்ப்புறம் புதிய உயர்மட்டப் பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு என என்னால் சொல்லிக் கொண்டே இருக்க முடியும்.

த.வெ.க. ஆட்சிக்கு வந்த 5 மாதத்தில் கொண்டு வந்திருக்கும் திட்டங்கள் எல்லாம் என்ன? வெற்றி மின்வெட்டுத் திட்டம், வெற்றி அரிவாள் வெட்டுத் திட்டம், வெற்றி விலைவாசி உயர்வுத் திட்டம், வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம் — இப்படித்தான் இருக்கும்! ஆறு மணிநேரத்தில் டெண்டரையே முடிப்பது… டெண்டர் விடுவதற்கு முன்னாடியே நாமக்கல் கவிஞர் மாளிகையில் பணிகள் நடப்பது, மேட்டூர் அணையைத் திறக்க வரும்போது 5 கோடி ரூபாயில் சாலை ஓரம் தடுப்புகள் அமைப்பது எனப் புதிய விதமான ஊழலை உருவாக்கும் வேலைகள்தான் த.வெ.க. ஆட்சியில் நடக்கிறது.

தப்பித்தவறி, அது நடக்கப் போவதில்லை. தப்பித்தவறி, இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றால் — உங்கள் மின்கட்டணம் உயரும், பால் விலை உயரும், பேருந்துக் கட்டணம் உயரும், பத்திரப்பதிவுக் கட்டணம் உயரும், வரிகள் உயரும். அதனால்தான் சொல்கிறேன், இந்த இடைத்தேர்தலில் சரியான அடி கொடுத்தால்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் ஷாப்பிங்கை நிறுத்திவிட்டு, ஆட்சியில் கொஞ்சமாவது கவனம் செலுத்துவார்கள். அதனால், இந்த இடைத்தேர்தல் தாராபுரம் தொகுதிக்குரியது மட்டும் அல்ல; ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் காப்பாற்றும் பொறுப்பும் இந்த தாராபுரம் பகுதியில் இருக்கும் உங்களிடம்தான் இருக்கிறது.

இதே கொங்கு நாட்டில் வாழ்ந்த வீரர் தீரன் சின்னமலை! அந்த மாவீரனுக்குத் தளபதியாக இருந்தவர்தான் பொல்லான். அந்த இரண்டு பேரும் சேர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடினார்கள். ஆனால், துரோகம்தான் மாவீரன் தீரன் சின்னமலையின் உயிரைப் பறித்தது. அதே துரோகம்தான் தாராபுரம் தொகுதியில் இப்போது இடைத்தேர்தலையும் திணித்திருக்கிறது; ஜனநாயகத்தைச் சாகடித்திருக்கிறது. இந்த இடைத்தேர்தல், தாராபுரம் மக்களான உங்களுடைய வாக்குகளின் கண்ணியத்திற்கு முதலமைச்சர் விட்டிருக்கும் சவால்! இந்த ஆணவத்தை அடக்க நீங்கள் தீர்ப்பெழுதப் போகும் நாள்தான் — அக்டோபர் 6.

"நம் ஒரு வாக்கால் என்ன ஆகிவிடும்?" என்று ஒருவரும் நினைக்காதீர்கள்! "குழந்தைகள் சொல்லிவிட்டார்கள்; அவர்களுக்காக ஒரு வாக்கை மாற்றிப் போடுவோம்" என்று நினைக்காதீர்கள். அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து, உதயசூரியனுக்கு வாக்களியுங்கள். இந்தத் த.வெ.க.வுக்கு நீங்கள் தப்பித்தவறி வாக்களித்தால் கூட, தமிழ்நாடு முழுவதும் திரும்பத் திரும்ப இடைத்தேர்தலை வரவைக்கப் பார்ப்பார்கள். அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது.

ஜனநாயகம் காக்க — உங்கள் கண்ணியம் காக்க — தமிழ்நாட்டைக் காக்க — முக்கியமாக, தாராபுரம் மக்கள் உங்கள் தன்மானத்தைக் காக்க — நமது வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் சுகன்யா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்துச் சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்! குதிரைபேர த.வெ.க. ஆட்சியின் ஆணவத்திற்கு முடிவு கட்ட நீங்கள் தயாரா? ஆணவ ஆட்சிக்கு முடிவு கட்டத் தயாரா? அக்கிரம ஆட்சிக்கு முடிவு கட்டத் தயாரா? அதற்கு நீங்கள் மறக்காமல் அக்டோபர் 6, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Also Read: இந்தியில் ஊர் பெயர்கள்... எச்சரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்... உடனே 'U Turn' எடுத்த த.வெ.க.. - பின்னணி?