Tamilnadu
TARGET செய்யும் தவெக அரசு? : “Mental Torture பண்ணாதீங்க..” - கண்ணீருடன் VIDEO வெளியிட்ட மாணவர் பாரதிதாசன்
கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று படிப்பதற்கு அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் தலித் சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு சென்று உயர்கல்வியும் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மலேசியாவில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வரும் மாணவர் பாரதிதாசன், தனக்கு எந்தவித நிதி உதவியும் கிடைக்கவில்லை எனவும், இது குறித்து அரசுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பி உள்ளதாகவும், ஆனால் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், தன்னால் பல்கலை. கட்டணத்தை கட்ட முடியவில்லை என்றும் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி வீடியோ வெளியிட்டார்.
அதோடு தான் 5 மாதங்களாக பல முறை இதுகுறித்து அரசுக்கு இ-மெயில் அனுப்பியதாகவும் அரசு பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றும், இது தொடர்பாக அமைச்சர் வன்னியரசையும் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அது முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், மாணவர் எந்த வித மெயிலும் அனுப்பவில்லை என்றும், மாணவர் அவர் தொடர்பான தகவலை அரசுக்கு கொடுக்கவில்லை என்றும் அமைச்சர் வன்னியரசு குற்றஞ்சாட்டினார்.
வன்னியரசின் குற்றச்சாட்டை மறுத்த பாதிக்கப்பட்ட மாணவர் பாரதிதாசன், தான் அரசுக்கு அனுப்பிய மெயிலை தேதி வாரியாக வெளியிட்டு தவெக அரசின் அஜாக்கிரதையையும் பொய்யையும் அம்பலப்படுத்தினார். அதோடு தனக்கு தேவையான நிதியை தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த சூழலில் மாணவர் வீடியோ மூலம் கோரிக்கை வைத்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், தற்போது வரை இந்த அரசு மாணவரின் கல்வி உதவித்தொகையை விடுவிக்காமல் வேண்டுமென்றே பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் மாணவர் பாரதிதாசன் பேசியதாவது :-
நான் மிகவும் மனவேதனையுடன் பேசுகிறேன். இது கண்டிப்பாக எனது நல விரும்பிகளை பாதிக்கும். சாரி சார். சார், நான் ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த விஷயத்தை பற்றி பேசி வருகிறேன். அண்ணல் அம்பேத்கர் உயர்கல்வித் திட்டத்தில் கடந்தாண்டிற்கான நிதி வந்துவிட்டது. நடப்பாண்டு நிதி வரவில்லை என்ற பதிவை கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தேன்.
எனது நிலையை சட்டப்பேரவையிலும் பேசினார்கள். சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு மறுப்புத் தொிவித்தார். அதற்கான ஆவணங்களை நானும் வெளியில் கொடுத்தேன். சில ஆவணங்களை ரகசியமாக வைக்க வேண்டியவை. அது எனக்கு தெரியும். அதனை வெளியே கொடுக்க முடியாது.
ஆனால், சட்டப்பேரவையில் இந்த விவகாரம் குறித்து பேசிய பின்னர் , சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு எனக்கு ஒரு இமெயில் அனுப்பி, அனைத்து ஆவணங்களையும் அனுப்புமாறு கூறியிருந்தார். அதன் அடிப்படையில் நானும் அனுப்பி வைத்தேன். ஆனால் இன்று வரை எனக்கு நிதி வரவில்லை. இப்போது என்னை கல்லூரியில் இருந்து நீக்க போகிறார்கள்.
வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், எய்ம்ஸ் கல்லூரியில் ஆய்வு கட்டுரையை சமர்பிக்க வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால் என்னிடம் நிதி இல்லாததால் அதற்கும் செல்ல முடியவில்லை. மேலும் கடந்த 6 மாதமாக ஆராய்ச்சிகளையும் செய்ய முடியவில்லை. ஆராய்ச்சி செய்வதற்காக நிதிக் கேட்டேன். ஆனால் உங்கள் மீது உள்ள எல்லா தவறுகளையும் என் மீது கூறி, என்னை ஒடுக்க நினைக்கிறீர்கள்.
எனது கடைசி மெயிலில், எனது ஆராய்ச்சி குறித்தும், அதற்கான நெறிமுறைக் குறியீட்டையும் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் நீங்கள் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறீர்கள். மேலும், இந்த ஆராய்ச்சிக்காகதான் இந்த பொருட்களை வாங்கினீர்களா என்று எங்களுக்கு சந்தேகம் உள்ளது எனக் கூறி மீண்டும் ஒரு இமெயில் அனுப்பியுள்ளீர்கள்.
மீண்டும் இப்படி ஒரு மெயில் அனுப்பி இங்குள்ள பேராசிரியர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை உடைத்து விட்டீர்கள். காலம் காலமாக படிக்காமல் இருந்த கிராமத்தில் இருந்து வந்து முதல் ஆளாக ஆராய்ச்சி படிப்பில் படிக்கிறேன். 'நீ ஏன் படிக்கிறாய், படிக்காதே' என கூற வேண்டும் என்றால், அதனையும் நேரடியாகவே கூறிவிடுங்கள்.
'நீ அடிமையாகத்தானே இருந்தாய். அப்படியே இரு' என்று சொல்லிவிடுங்கள். தயவு செய்து மன அழுத்தம் கொடுக்காதீங்க. நிதி கொடுக்க முடியாது என்றால் சொல்லி விடுங்கள். இந்தியாவிலேயோ வேறு எங்கேயோ எனது கல்வியை தொடர்கிறேன்.
வரலாற்றில் ரோகித் வெமுலாவிற்கு என்ன நடந்தோ, அந்த அமைச்சரவை என்ன செய்ததோ, இந்த அமைச்சரவையும் அவ்வாறே செய்கிறது என்பதை குற்றச்சாட்டாகவே இங்கு வைக்கிறேன்" - என்று கண்ணீருடன் பேசியுள்ளார்.
Also Read
-
“தி.மு.க படிக்க வைக்கும்” : மாணவர் பாரதிதாசனுக்காக குரல் கொடுத்த மு.க.ஸ்டாலின்!
-
சமூகநீதி நாளில் சமூக அநீதி : மாணவர் பாரதிதாசனுக்கு நெருக்கடி தருவது கேவலத்தின் உச்சம் - உதயநிதி ஆவேசம்!
-
லண்டன் பயணம் : செய்தியாளர்களைச் சந்திக்காமல் சென்ற முதலமைச்சர் விஜய்!
-
மும்மொழி திட்டத்தைக் கைவிட வேண்டும் : ஒன்றிய அரசுக்கு, உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது என்ன?
-
தமிழ்நாட்டில் தொடர்கதையாகும் விலைவாசி உயர்வு! - த.வெ.க.வின் நிர்வாகத் தோல்விக்கு எழும் கண்டனங்கள்!