Tamilnadu
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் அரசியல் விவாதங்களில் பங்கேற்பது சரியா? என்றும் திராவிட மாடல் ஆட்சி தொடர்ந் திருந்தால் 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை கொண்டு வந்திருப்போம் என்றும் சட்டப்பேரவையில் தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய நாகர் கோவில் சட்டமன்றக் கழக உறுப்பினர் எஸ். ஆஸ்டின் குறிப்பிட்டார்.
சட்டப்பேரவையில் கழக உறுப்பினர் எஸ். ஆஸ்டின் பேசியதாவது:–
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, நவீன தமிழ்நாட்டைச் செதுக்கிய சிற்பி, எங்களுடைய தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் இருக்கும் திசைநோக்கி என்னுடைய முதல் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) திராவிட மாடல் அரசினுடைய நாயகர், தன்னுடைய நிர்வாகத் திறமையால் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்திய ஓய்வறியா உதயசூரியன், திட்டங்கள்மூலம் மக்கள் உள்ளங்களில் நிரந்தரமாகக் குடியிருக்கக்கூடிய எங்கள் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை வணங்குகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)
பேரவைத் தலைவர் அவர்களே, நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தில் கலந்துகொள்வதை எப்படியும் தடுத்து விடவேண்டும் என்ற நோக்கத்தில், சில சதி காரர்களால் விரிக்கப்பட்ட சதிவலையைக் கிழித் தெறிந்துவிட்டு, அனைத்துத் தடைகளையும் தகர்த் தெறிந்துவிட்டு, சதிகாரர்களின் முகத்தில் கரியைப் பூசிவிட்டு, இன்று கம்பீரமாக சிங்கமென இந்த அவையில் வீற்றிருக்கும் எங்களுடைய இளைய தலைவர், (மேசையைத் தட்டும் ஒலி) இந்த அவையில் எங்களை வழிநடத்திக் கொண்டிருக்கும் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர், எங்களுடைய இளைய கலைஞர், அன்புச் சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை வணங்குகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)
பேரவைத் தலைவர் அவர்களே, இந்த அவையில், இன்று மானியக் கோரிக்கைகளின்மீது பேசுவதற்கான வாய்ப்பினை எனக்கு வழங்கிய தங்களுக்கு என்னுடைய பணிவான நன்றியையும், என்னுடைய தொகுதி மக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
பதவியிலிருந்து நீக்கிட வேண்டும்!
பேரவைத் தலைவர் அவர்களே, இங்கு நடைபெறக்கூடிய விவாதங்கள் எல்லாவற்றையும் இன்றைக்கு நேரலையில் அனைத்து மக்களும் பார்க்கக்கூடிய வகையில் நாம் ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றோம். எனவே, நம்முடைய விவாதங்களைப் பற்றியும், நம்முடைய நடைமுறைகளைப் பற்றியும் மக்கள் மனதில் பல்வேறு கருத்துக்கள் எழுகின்றன. எனவே, மக்கள் மனதில் இருக்கக்கூடிய ஒரு சில கருத்துக்களை என்னுடைய மக்களுடைய குரலாகத்தான் நான் இங்கே ஒலிக்க வேண்டும். நாம் அவர்களுடைய பிரதிநிதிகள். அந்த ஒரு சில கருத்துக்களை என்னுடைய கருத்துக்களாக, இந்த அவையில் சற்றே குறைந்த நேரத்தில் எடுத்துவைத்துவிட்டு, அதற்குப் பிறகு மானியக் கோரிக்கைகளின்மீது நான் பேசலாம் என்று கருதுகின்றேன். அதற்கு முன்பாக இந்த அவைக்கு இன்னொரு கருத்தினை உங்கள்மூலமாகச் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன். Tamil Nadu State Minorities Commission-உடைய Chairman ஆக மரியாதைக்குரிய ஃபெலிக்ஸ் ஜெரால்டு அவர்களை இந்த அரசாங்கம் நியமித்திருக்கின்றது. அந்த post, ஒரு statutory post ஆக இன்றைக்கு மதிக்கப்படுகின்றது. Statutory post-ல் இருக்கக்கூடியவர்கள் அரசியல் தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு, தங்கள் கருத்துக்களை மற்றவர்களை abuse செய்யக்கூடிய வகையில் பேசக்கூடாது, பங்கெடுக்கக்கூடாது என்பது சட்டப்படியானது. நம்முடைய Tamil Nadu State Minorities Commission Act, 2010 அதைத்தான் சொல்கிறது. அதில், ஓர் உறுப்பினர் தகுதி நீக்கம் அல்லது தலைவர் தகுதி நீக்கம் என்று சொன்னால், Chapter-II-ல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது: “In the opinion of the Government, has so abused the position of Chairperson or member, as the case may be, as to render that person’s continuance in office detrimental to the public interest.” எனவே, நான் உங்கள்மூலமாக இந்த அரசைக் கேட்டுக்கொள்வதெல்லாம், அவரை நியமித்திருக்கின்றீர்கள். நாங்கள் அதில் தலையிடக்கூடிய தேவையில்லை. இருந்தாலும் இதுபோன்ற அரசியல் விவாதங்களில் அவர் பங்கு கொள்வதை, இந்தச் சட்டத்தின்படி தடுக்க வேண்டும் அல்லது அது தொடர வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்று உங்கள்மூலமாக இந்த அரசை நான் கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
பேரவைத் தலைவர் அவர்களே, இது என்னுடைய கருத்து. இதில் முடிவு எடுக்க வேண்டியது பேரவைத் தலைவர் அவர்கள். பேரவைத் தலைவர் அவர்களே, 1977 ஆம் ஆண்டிலிருந்து நான் என்னுடைய அரசியல் பணியைத் தொடங்கியவன். 1978-ல் மாணவர் தி.மு.க.-வில் நான் உறுப்பினராக இருந்தவன். பலருக்கு இதெல்லாம் தெரியாது.
1986 ஆம் ஆண்டில் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று, அண்ணன் கே.என். நேரு அவர்களைப் போல, அவர் Chairman ஆக இருந்தார், நான் ஊராட்சி மன்றத்தினுடைய தலைவராக 1986 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றதிலிருந்து, 40 ஆண்டு காலமாக இந்த மாவட்டத்தில் பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பொதுப் பணியை, மக்கள் பணியை நான் ஆற்றிக் கொண்டு வருவது பலருக்கும், உங்களுக்கும் தெரியும். அதேபோல், நம்முடைய அண்ணன் கே.என். நேரு அவர்கள், அண்ணன் எ.வ.வேலு அவர்கள் எல்லாம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுப் பணியில், அரசியல் பணியில் ஈடுபட்டு, இந்த அவையில் பல ஆண்டுகாலம் இருந்தவர்கள்.
அதேபோல், நம்முடைய அவை முன்னவர் அவர்கள் இங்கு இருக்கின்றார், அண்ணன் கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் 1977 ஆம் ஆண்டிலிருந்து இந்த அவையில் இருக்கின்றார்கள். ஏன்? பேரவைத் தலைவர் நீங்களேகூட, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய காலத்திலிருந்து 1980 ஆம் ஆண்டிலே இந்த அவைக்கு வந்து, பொதுச் சேவையில் உங்களை ஈடுபடுத்திக்கொண்டு, இந்த அவையினுடைய நடவடிக்கைகளையெல்லாம் உன்னிப்பாக நீங்கள் பார்த்த காரணத்தினால்தான், இன்றைக்கு ஓரளவு balance செய்து கொண்டிருக்கிறீர்கள். முழுமையாக balance செய்வீர்கள் என்று சொல்ல முடியாது, இவ்வளவுதான் உங்களால் செய்ய முடியும். ஓரளவு balance செய்து, இந்தப் பக்கமும் பார்க்கிறீர்கள், அந்தப் பக்கமும் பார்க்கிறீர்கள். இரண்டு பக்கங்களிலும் பிரச்சினை இல்லாத அளவிற்கு இந்த அவையை கொண்டுபோக வேண்டும். அமைதியாக நடத்த வேண்டுமென்று நீங்கள் விரும்புகின்றீர்கள். அதற்கு முழுமையாக எங்களுடைய தலைவருடைய தலைமையில், நாங்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கின்றோம்.
ஆனால், இங்கு நிலை என்னவென்று சொன்னால், live-ல் ஒளிபரப்பப்படுவதை மக்கள் பார்த்து என்ன சொல்கிறார்கள் என்றால், பொதுவாக, எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கக்கூடிய நிலையில் வருவார்கள். நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் பார்த்திருப்பீர்கள், இத்தனை ஆண்டு காலம் நடந்த சட்டமன்றத்தை பார்க்கின்றபொழுது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஆளுங்கட்சியைப் பார்த்து என்ன கேள்வியைக் கேட்பார்கள்? மக்களுக்குத் தேவையானதை, மக்கள் என்ன கேட்க வேண்டுமென்று விரும்புகின்றார்களோ! மக்கள் என்ன பிரச்சினையில் இருக்கின்றார்களோ! அந்தப் பிரச்சினையை கேள்வியாக ஆளுங்கட்சியிடத்தில் கேட்பார்கள். ஆளுங்கட்சி உறுப்பினருடைய கடமை என்னவென்று சொன்னால், எதிர்க்கட்சிக்காரர்கள் என்ன கேள்வி கேட்கின்றார்களோ, அந்தக் கேள்விக்கு சரியான பதிலைச் சொல்லி, அவர்களை convince செய்து, இந்த அவையை அமைதி யாக நடத்துவதற்கு முயலக் கூடியவர்கள்தான் ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்கள். இந்த நடைமுறைதான் அப்போதெல்லாம் இருந்திருக்கிறது. சில நேரங்களில் சலசலப்பு வருவது சாதாரணம்.
பிரச்சினைக்குப் பதில்தராத த.வெ.க. அரசு
ஆனால், இப்போது இந்த 2 கூட்டத்தொடர்களை நாம் பார்க்கின்றபொழுது, மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்றால், நம்முடைய பிரச்சினையை எதிர்க்கட்சிகள் பேசுகிறார்கள், எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறார். ஆனால், பிரச்சினை என்று என்ன கேள்வியைக் கேட்கின்றார்களோ அந்தக் கேள்விக்கான பதிலை ஆளுங்கட்சி தருவதில்லை. ஆனால், ஆளுங்கட்சி என்ன செய்கிறது? ஏதாவது தேவையில்லாத சில பிரச்சினைகளை சுற்றி வளைத்துக்கொண்டு வந்து, கடைசியில் எதிர்க்கேள்வியை கேட்கின்றார்கள் எதிர்க்கட்சியிடம். எதிர்க்கேள்விகளைக் கேட் கின்றபோது, சில வார்த்தைகளை எதிர்க்கட்சியில் இருக்கக்கூடிய உறுப்பினர்களை, அவர்களுடைய உணர்வுகளைத் தூண்டக்கூடிய வகையில், provoke செய்கிற வகையில் சில வார்த்தை களை பயன்படுத்துகின்ற காரணத்தினால், உங்களை அவர்கள் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கு கிறார்கள் என்பதுதான் என்னுடைய பதில்.
பேரவைத் தலைவர் அவர்களே, அவை முன்னவர் அவர்கள் இங்கே ஒரு கருத்தைச் சொன்னார்கள். நீங்கள் பேசுகின்றபொழுது மானியக் கோரிக்கையில் பேசுங்கள் என்று சொன்னார்கள். மானியக் கோரிக்கையில்தான் பேச வேண்டும். இருந்தாலும்கூட, பலபேர், பல உறுப்பினர்கள், அன்றைக்கு நம்முடைய ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள்கூட மானியக் கோரிக்கையிலான விவாதத்திற்கான பதிலுரையில், பதிலுரையே இல்லாமல் ஒரு மணிநேரம் ஏதோ பொதுக் குழுவில் பேசுவதுபோல் பல்வேறு கருத்துகளை சுவாரஸ்யமாக சொன்னார்கள். நாங்களும் அந்த ஒரு மணிநேரம் கேட்டுக்கொண்டுதான் இருந்தோம். எல்லாம் முடித்துவிட்டு பதிலுரை சொல்வார்கள் என்று பார்த்தால் பதிலுரை இல்லை.
அதனால் மக்களுடைய கருத்துகளை மட்டும் ஒன்றிரண்டு எடுத்து வைத்துவிட்டு, (குறுக்கீடு) இந்த அவையினுடைய கவனத்தை ஈர்த்துவிட்டு நான் செல்கிறேன்.
இந்த அவையைப் பொறுத்தவரையில் 234 உறுப்பினர்களை உள்ளடக்கிய ஓர் அவை இது.
மக்களுக்குப் புரிகின்றது!
ஆனால், இன்று இருப்பது 227 பேர் இங்கே இருக்கின்றார்கள். நம்முடைய முதலமைச்சர் அவர்கள், இரண்டு தொகுதியில் போட்டியிட்ட காரணத்தினால், ஒரு தொகுதியை அவர் இராஜினாமா செய்துவிட்டார். அதுபோக, 6 உறுப்பினர்களுடைய பணியிடம் இன்றைக்கு இங்கே காலியாக இருக்கிறது. 6 உறுப்பினர்கள் பதவியேற்ற ஒரு மாதத்திலேயே தங்களுடைய பதவியை இராஜினாமா செய்துவிட்டார்கள். என்ன காரணம் என்பது இன்று முழுமையாக, வெட்ட வெளிச்சமாக யாருக்கும் தெரியவில்லை; ஆனால், மக்களுக்கு புரிகின்றது.
நம்பிக்கை பொய்த்துவிட்டது!
பேரவைத் தலைவர் அவர்களே, என்னுடைய கோரிக்கை என்னவென்றால், 6 தொகுதியின் மக்களுடைய குரல் இந்த அவையில் இன்றைக்கு முடக்கப்பட்டிருக்கின்றது. அவர்களுக்கு குரல் கொடுப்பதற்கு இன்றைக்கு ஆள் இல்லை. கிட்டத்தட்ட 3 மாத காலம் ஆகிவிட்டது. ஒரு தேர்தலில் போட்டியிடுவது, வெற்றி பெறுவது என்பது எவ்வளவு சிரமம் என்பது எங்களுக்கெல்லாம் தெரியும். ஒரு மாத காலம் கடுமையாக அந்த 6 உறுப்பினர்களும் அங்கே பணியாற்றியிருப்பார்கள். வாக்களித்த மக்கள், 60 வயது, 70 வயது, 80 வயது தாண்டியவர்களெல்லாம் நடக்க முடியாத அளவிலேகூட அந்த வாக்குச்சாவடிக்கு வந்து, இவருக்கு ஓட்டு போட வேண்டும்; இவருக்கு ஓட்டுப் போட்டால், இந்தப் தொகுதி மக்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கை; அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான், அவர்கள் அங்கு வந்து வாக்களிக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய நம்பிக்கையெல்லாம் இன்றைக்கு பொய்த்து போய்விட்டது. அதுபோல், வெற்றி பெறக்கூடிய நேரத்தில் மிகப்பெரிய ஒரு களிப்பு இருக்கும். சட்டமன்ற உறுப்பினரும் சரி, அவருடைய குடும்பத்தாரும் சரி, அவருடைய நண்பர்களும் சரி, அவருக்கு வாக்களித்த தொகுதி மக்களுக்கும் மிகப் பெரிய மகிழ்ச்சி, மிகப் பெரிய கொண்டாட்டம் இருக்கும். 5 ஆண்டு காலம், அந்த MLA பதவி என்பது மிகப் பெரிய ஓர் அந்தஸ்து; மிகப் பெரிய ஒரு மரியாதை. இதையெல்லாம் ஒருவர் இழந்துவிட்டு, வெற்றி பெற்று, பதவியேற்ற ஒரே மாதக் காலத்திற்குள்ளாக ஒரு கூட்டத்தொடரிலேகூட கலந்துகொள்ளாமல் . . .
(குறுக்கீடுகள்)
எங்களுடைய தலைவர் அவர்கள் சொல்லிவிட்டார்கள். மேற்கொண்டு பேசவேண்டாம். நீங்கள் மானியக் கோரிக்கையில் பேசுங்கள் என்று எங்கள் தலைவர் அவர்கள் சொல்லிவிட்டார்கள். ஆனால் மக்கள் கருத்துகள் இன்னும் நிறைய இருக்கிறது. இந்த அவையினுடைய நடவடிக்கைகள் குறித்து மக்களுடைய கருத்து நிறைய இருக்கிறது. அதையெல்லாம் இங்கு என்னுடைய குரலாக ஒலிக்க வேண்டுமென்று சொன்னால், ஒருமணி நேரம் இருந்தால்கூட போதாது. இருந்தாலும், எங்களுடைய தலைவர் அவர்களுடைய கட்டளையை ஏற்று, மானியக் கோரிக்கைகளில் என்னுடைய கருத்துகளை எடுத்துவைக்கின்றேன்.
பேரவைத் தலைவர் அவர்களே, தொழில் துறையின் வளர்ச்சிதான் ஒரு நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான ஓர் அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கின்றது. உற்பத்தி, ஏற்றுமதி, முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய அனைத்துத் துறைகளிலும் இன்றைக்கு தமிழ்நாடு தனது தனித்துவமான இடத்தை கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பெற்றுள்ளதை நாம் அத்தனை நபர்களும் இன்றைக்கு அறிவோம்.
இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் அதிகளவிலான வேலைவாய்ப்பு. 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டுமென்ற இலக்கை நோக்கிய எங்களுடைய தொழில்துறை பயணமானது,
2024-–2025 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் எங்கும் சாதிக்க முடியாத ஒரு சாதனையாக, 11.19 சதவிகிதம் என்ற பொருளாதார இரட்டை இலக்கு வளர்ச்சியைச் சாதித்துக் காட்டியது திராவிட மாடல் அரசு. (மேசையைத் தட்டும் ஒலி)
முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்ல, அவற்றை வேலைவாய்ப்புகளாக மாற்றுவது, தொழில் வளர்ச்சியை மாவட்டங்கள்தோறும் விரிவுபடுத்து வது, எதிர்காலத்தில் தொழில்களுக்கு வேண்டிய, தேவையான உட்கட்டமைப்புகளை உருவாக்குவது போன்ற ஒருங்கிணைந்த அணுகுமுறையின் காரணமாகத்தான், கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாடு தொழில்துறையில் உச்சத்தை எட்டியது. பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு, கிட்டத்தட்ட ரூ.12.37 இலட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழ்நாடு அரசு. அந்தச் சாதனையைப் புரிந்தது எங்களுடைய திராவிட மாடல் ஆட்சியினுடைய அரசர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள். (மேசையைத் தட்டும் ஒலி)
இதன்மூலமாக, கிட்டத்தட்ட 36 இலட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, மோட்டார் வாகன உற்பத்தியில் முதலிடம்; ஆடைகள் உற்பத்தியில் முதலிடம்; தோல் மற்றும் தோல் சார்ந்த பொருட்களின் உற்பத்தியில் முதலிடம்; கணினி மற்றும் ஒலிக் கருவிகள் உற்பத்தியில் இரண்டாமிடம்; இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் உற்பத்தியில் இரண்டாமிடம்; பிற போக்குவரத்து சாதனங்களின் உற்பத்தியில் இரண்டாமிடம். மின்னணுவியல் ஏற்றுமதியில் இந்தியா வில், தமிழ்நாட்டினுடைய பங்களிப்பு மட்டும் 41.23 சதவிகிதம். இவ்வாறு தொழில்துறையில், தமிழ்நாடு மிகப்பெரிய சாதனைகளை, கடந்த ஐந்தாண்டுகளில் உருவாக்கியிருக்கின்றது.
பேரவைத் தலைவர் அவர்களே, வரலாற்றுச் சிறப்புமிக்க உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை (மேசையைத் தட்டும் ஒலி) 2024 ஆம் ஆண்டு எங்கள் திராவிட மாடல் ஆட்சி நாயகர் தளபதி அவர்கள் நடத்தி, அதன்மூலமாக இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு, அதன்மூலமாக 6 இலட்சத்து 64 ஆயிரத்து 181 கோடி ரூபாய் முதலீடுகளைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்துள்ளார்கள். இதன்மூலம், கிட்டத்தட்ட 14.5 இலட்சம் பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
யாரும் செய்யாத சாதனை!
முதலீடுகளை ஈர்ப்பதற்காக 2021-–2026 வரை கிட்டத்தட்ட 12 முதலீட்டாளர்கள் மாநாடுகளை எங்கள் தலைவர் அவர்கள் நடத்தினார்கள். முன்னாள் முதலமைச்சர், எங்கள் தலைவர் அவர்களே நேரடியாக ஜப்பான், சிங்கப்பூர், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளுக்குச் சென்று, அங்குள்ள முதலீட்டாளர்களைச் சந்தித்து, அவர்களுடன் பேசி, மிகப்பெரிய முதலீடுகளைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்துள்ளார்கள். அவருடைய வெளிநாட்டு பயணங்கள் மூலமாக மட்டும் 69 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, ரூ.34,013 கோடி முதலீடுகள் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 526 முதலீடுகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்படுவதோடு அந்தத் துறை நின்று விடக்கூடாது. அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முதலீடாக மாற்றுவதில்தான் ஒரு அரசினுடைய வெற்றி இருக்கிறது. அந்த வெற்றியைத் திராவிட மாடல் அரசு, கடந்த ஐந்தாண்டுகளில் சிறப்பாக செய்துள்ளது. இந்தியாவில் யாரும் செய்ய முடியாத சாதனைகளை, இந்தத் தொழில்துறையில் கடந்த ஐந்தாண்டுகளில் முதலீடுகளைக் கொண்டு வந்தது தி.மு.க. அரசு. (மேசையைத் தட்டும் ஒலி)
கிட்டத்தட்ட 526 முதலீடுகள்; இது கிட்டத்தட்ட 84 சதவிகிதம். அந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கொண்டுவந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் MoU-க்கள் முதலீடுகளாக transfer செய்து, convert செய்யப்பட்டது, 84 சதவிகிதம். மொத்தமாக, 1,192 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்மூலம் 873 முதலீடுகள் convert செய்யப்பட்டிருக்கின்றன. இது கிட்டத்தட்ட 73 சதவிகிதம். இந்தியாவில் எந்த மாநிலமும் இந்தளவிற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முதலீடுகளாக மாற்றியது, வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. இதுதான் அதிகபட்சமானது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டி ருக்கின்றேன்.
அதேபோல், வளர்ந்த புறநகர்ப் பகுதியில் படித்த இளைஞர்களுக்கு IT service மூலம், அவர்களுக்கு வேலைவாய்ப்பும், அங்கு வளர்ச்சியையும் கொண்டு வருவதற்காகத்தான் இந்தியாவில் முதல்முறையாக எங்களுடைய தலைவர் அவர்கள் TIDEL Neo Park என்ற ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். முதன்முதலாக, TIDEL Park திட்டத்தைக் கொண்டு வந்தது, எங்களுடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். இன்றைக்குப் புதிதாக வளர்ந்துவரும் நகரங்களில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கக்கூடிய வகையில் TIDEL Neo Park என்ற ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்து,
பெரிய பெரிய மாநகராட்சிகளில் மட்டுமல்ல, தென் மண்டலங்கள், டெல்டா மண்டலங்கள் என்று சொல்லி தூத்துக்குடி, தென்காசி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், விருதுநகர், விழுப்புரம் உள்ளிட்ட 10 இடங்களில் இந்த TIDEL Neo Park கொண்டுவரப்பட்டு, ஒவ்வொன்றிலும் கிட்டத்தட்ட 600 நபர்களுக்கு இன்றைக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கக்கூடிய அரசு திராவிட முன்னேற்றக் கழக அரசு என்பதை பெருமையோடு நான் இங்கே சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
எனது தொகுதி சார்ந்த ஒரு கேள்வியை தொழில் துறை அமைச்சர் அவர்களிடம் நான் வைக்க விரும்புகிறேன். எங்களுடைய அரசு நாகர்கோவில் பகுதியிலே கொண்டு வந்த TIDEL Neo Park என்கிற திட்டம் ஏற்கெனவே எங்களுடைய முதலமைச்சர் அவர்களால் பிப்ரவரி மாதத்தில் பணிகள் துவங்குவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இந்த அரசு பொறுப்பேற்று இன்றைக்கு மூன்று மாதங்கள் ஆகின்றன; அடிக்கல் நாட்டப்பட்டு ஆறு மாதங்கள் ஆகின்றன. இன்னும் இந்தப் பணிகள் துவங்கப்படவில்லை. TIDCO நிறுவனம்தான் இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டுமென்று நான் கருதுகிறேன். இதுகுறித்து அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டபோது, பணம் இல்லை, எனவே நாங்கள் இன்னும் பணியைத் துவங்க வில்லை, அனைத்து formalities-ம் முடிந்துவிட்டது, அரசாங்கம் என்றைக்கு TIDEL Neo Park-ற்கு பணத்தைக் கொடுக்கிறார்களோ, மறுநாள் உங்கள் பணி இடத்தில் வேலையைத் துவங்கிவிடுவோம் என்று சொன்னார்கள்.
எனவே, நான் உங்கள் மூலமாக இந்த அரசை கேட்டுக்கொள்வதெல்லாம், இது 600 இளைஞர் களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய இடம். நாகர்கோவில் பகுதி, கன்னியாகுமரி மாவட்டம் என்பது எந்தத் தொழிற்சாலையும் வரமுடியாத, இடங்கள் பற்றாக்குறை உள்ள ஒரு மாவட்டம்; எந்தத் தொழிலும் அங்கு வரமுடியாது. இந்த இடத்தை மிகவும் சிரமப்பட்டு, தேர்வு செய்துதான் TIDEL Neo Park-ஐ எங்கள் தலைவர் அவர்கள் கொண்டு வந்திருக் கிறார்கள். எனவே, இதை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, அங்கே எந்த சட்டமன்ற உறுப்பினர்களும் ஆறு தொகுதிகளிலும் எங்களுடைய உறுப்பினர்கள் வெற்றி பெறவில்லை, மாற்றுக் கட்சிதான் வெற்றி பெற்றது என்ற எண்ணத்தையெல்லாம் நீங்கள் விட்டுவிட்டு, இளைஞர்க ளுடைய. . .
நீங்கள் அந்த இளைஞர்களின் வேலை வாய்ப்பையும், எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு அதற்கான நிதியை TIDEL Neo Park-ற்கு TIDCO மூலமாக உடனடியாக ஒதுக்கீடு செய்து, அந்தப் பணியை உடனடியாக துவங்குவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்று நான் அமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
அதேபோல, எங்களுடைய ஆட்சிக் காலத்தில்தான் 13 புதிய கொள்கைகளை தொழில் துறை வெளியிட்டது. அது உங்களுடைய கொள்கை விளக்கக் குறிப்பிலும் இருக்கின்றது. நிதிநுட்பக் கொள்கை, ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை, உயிர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை, காலணி மற்றும் தோல்பொருட்கள் கொள்கை, விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை, சரக்கு போக்குவரத்துக் கொள்கை, பொது தனியார் கூட்டாண்மைக் கொள்கை, பொம்மைகள் உற்பத்தி, சுழற் பொருளாதாரம், சேமிப்புக் கிடங்கு, கடல் போக்குவரத்து உற்பத்தி மற்றும் கடல்சார் உணவுப் பொருட்களை பதப்படுத்துதல் உள்ளிட்ட புதிய கொள்கைகளுடனும் எங்களுடைய அரசு சிறப்பாக தன்னுடைய இலக்கை நோக்கி பயணித்து சாதனையைப் படைத்துள்ளது.
Also Read
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!
-
“மரியாதையும், பாதுகாப்பான கல்விச்சூழலும் கிடைப்பது குழந்தைகளின் உரிமை!” : கனிமொழி எம்.பி!