
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்துள்ள கே.ஜி.கண்டிகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்புப் பிரச்சார இயக்க நிறைவுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய பெ.சண்முகம் " சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தில், 'மக்கள் அரிசியைச் சோறாக ஆக்கிச் சாப்பிடுவதில்லை; இட்லி, தோசையாகத்தான் செய்து சாப்பிடுகிறார்கள்' என்று கூறுகிறார்கள். மக்கள் யாரும் சாப்பிடுவதே இல்லை என்கிறார்கள். சாப்பிடும் தரத்தில் இருந்தால் மக்கள் ஏன் சாப்பிடப்போவதில்லை? அதில் உங்களுக்கு என்ன பெருமை வேண்டி இருக்கிறது?
அமைச்சர் செங்கோட்டையன் அவர்களே, நான் உங்களிடம் கேட்க விரும்புவது என்னவென்றால், சாப்பிடும் தரத்தில் அரிசி இருந்தால் கட்டாயமாகத் மக்கள் அதை வாங்கிச் சாப்பிடுவார்கள். தமிழ்நாட்டு மக்களின் பிரதான உணவே அரிசிதானே? பிறகு ஏன் மக்கள் அதைச் சாப்பிட மறுக்கிறார்கள்? அது சாப்பிடும் படியாக இல்லாததால்தான் மக்கள் சாப்பிடுவதில்லை. நீங்கள் கோழி சாப்பிடும் தரத்தில்தான் அரிசி வழங்குகிறீர்கள். நல்ல அரிசியாகக் கொடுத்தால் மக்கள் ஏன் சாப்பிட மாட்டார்கள்?
எனக்கு என்ன சந்தேகம் என்றால்—'இந்த அரிசியை யாரும் வாங்குவதில்லை' என்று ஒருவர் சொல்கிறார்; 'மக்கள் யாரும் சாப்பிடுவதில்லை' என்று ஒருத்தர் சொல்கிறார்; 'மக்கள் யாரும் சோறு ஆக்குவதில்லை' என்று இன்னொருவர் சொல்கிறார். இந்தத் தரமற்ற காரணங்கள் அனைத்தையும் கூறி, 'ஆகவே, இனிமேல் ரேஷன் கடைகளில் அரிசி வழங்கத் தேவையில்லை' என்ற ஒரு முடிவை நோக்கி இந்த அரசு சென்றுவிடுமோ என்கிற பதற்றம் நமக்கு ஏற்படுகிறது.
"தற்போது ரேஷன் கடைகளில் 20 கிலோ அரிசி என்பது விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. பல லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் இந்த அரிசியை நம்பித்தான் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, தனித்து வாழக்கூடிய ஏராளமான பெண்கள் மற்றும் முதியவர்களின் உயிரைக் காப்பதே இந்த ரேஷன் அரிசிதான். இவையெல்லாம் தமிழக அமைச்சர்களுக்குத் தெரியுமா, தெரியாதா என்று எனக்குத் தெரியவில்லை.
அமைச்சர்களுக்கு இது தெரியவில்லை என்றால், நீங்கள் தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்டு வீதி வீதியாகப் போவீர்களே, அதேபோல இப்போது இந்த ரேஷன் அரிசியை யார் யாரெல்லாம் வாங்குகிறார்கள், அதை வைத்து என்ன செய்கிறார்கள் என்று வீடு வீடாகச் சென்று கொஞ்சம் மக்களிடம் கேட்டுப் பாருங்கள். அப்படி நீங்கள் நேரில் சென்று கேட்டால், அதன் முக்கியத்துவத்தை மக்கள் உங்களுக்கு விளக்குவார்கள்.
நீங்கள் சட்டமன்ற அவையில் உட்கார்ந்து கொண்டு கற்பனையாகப் பேசுவதை விட, நேரடியாகத் தெருவில் இறங்கி மக்களிடம் கேட்டு உண்மைகளைத் தெரிந்து கொண்டு பேசினால் மிகச் சிறப்பாக இருக்கும். ஆகவே, ஏழை எளிய மக்களின் பிரதான உணவாக இருக்கும் ரேஷன் அரிசி விநியோகத்தில் தப்பித்தவறி நீங்கள் கை வைத்தீர்கள் என்றால், உங்கள் ஆட்சிக்கும் அரசியல் கதைக்கும் முடிவுரை எழுதப்படும் என்பதைத் தமிழக அரசுக்கு எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.






