
"தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை என எந்தப் பொருளை எடுத்தாலும் கடந்த மூன்று மாதங்களாக விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.
குறிப்பாக, இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த மே மாதம் 55 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ அரிசி தற்போது 75 ரூபாய்க்கும், 40 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய்க்கும், 150 ரூபாய்க்கு விற்ற துவரம் பருப்பு 180 ரூபாய்க்கும் உயர்ந்துள்ளன.அதேபோல், மே மாதம் ஒரு கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்ட சர்க்கரை தற்போது ரூ.70 வரை உயர்ந்துள்ளது" என்று சுட்டிக்காட்டினார்.
இந்தத் திடீர் விலை உயர்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மளிகைப் பொருட்கள் வாங்குவதையே குறைத்துக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது என்றார். ஆளுங்கட்சிக் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் அமைப்புகளும் இதைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
விலைவாசி உயர்வைச் சமாளிக்க ரேஷன் கடைகள் மூலம் சர்க்கரை மற்றும் அத்தியாவசியப் பொருட்களைத் தற்போதைய அளவை விட கூடுதல் அளவில் வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். மேலும், 2007-ஆம் ஆண்டு தேசிய அளவில் விலைவாசி உயர்ந்தபோது, அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கொண்டு வந்த 'சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை' நினைவுகூர்ந்த அவர், அதுபோல ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் மளிகைப் பொருட்களை மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
முதலமைச்சர் தலைமையில் நிதி, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி, இந்தச் சிக்கலுக்கு உடனடியாக நல்ல தீர்வு காண வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் கேட்டுக்கொண்டார்."






