தமிழ்நாடு

குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிடப்படவில்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜூன் தெரிவித்துள்ளார்.

குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மானியக்கோரிக்கைக்கு முன்தாக செம்மஞ்சேரி குளோபல் ஸ்போர்ட் சிட்டி கைவிட்டது ஏன் என பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டுவந்தார்.

இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின் " தி.மு.க ஆட்சியில், தமிழ்நாட்டிலிருந்து உலகத் தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்கவும், சென்னையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு கட்டமைப்பை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டது. இதற்காக, செம்மஞ்சேரியில் 128 ஏக்கர் பரப்பளவில், 261 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி' (உலகளாவிய விளையாட்டு நகரம்) அமைப்பதற்கான பணிகளை நாங்கள் தொடங்கியிருந்தோம்.

தற்போதைய அரசு பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்தது போல, இந்த குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டத்தையும் ரத்து செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. எனவே, செம்மஞ்சேரி குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் ஏன் கைவிடப்பட்டது?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூன், "அந்தத் திட்டம் கைவிடப்படவில்லை; ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் தரத்திற்கு சர்வதேச அளவில் அதனை இன்னும் விரிவாக மாற்றியமைக்கவே (மறுசீரமைப்பு) தற்போதைய பணி ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது" என்று விளக்கம் அளித்தார்

இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்"சென்னைக்கு அருகில் இவ்வளவு பெரிய நிலப்பரப்பு கிடைப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. இதற்காக மூன்று இடங்கள் சாத்தியக்கூறுகளாக ஆராயப்பட்டன. நாங்களும் இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வைத்திருந்தோம்.

CMDA சார்பாக ஒரு தனியார் ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டிருந்தது. அந்த ஆலோசனைக் குழுவின் கள ஆய்வின்படிதான் செம்மஞ்சேரியில் 'விளையாட்டு நகரம்' அமைக்கலாம் என்று பரிந்துரை வழங்கப்பட்டது.அதன் பிறகு, விளையாட்டுச் சங்கங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுடன் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினோம். உயர்நிலைக் கள ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வின் அடிப்படையில் வழங்கப்பட்ட பரிந்துரைகளின்படி, 'குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி' அமைக்கும் பணிகளை மூன்று கட்டங்களாக செயல்படுத்த இறுதி முடிவு செய்யப்பட்டது. இதன் முதற்கட்டப் பணிகளை முந்தைய முதலமைச்சர் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி தொடங்கி வைத்தார்.இந்தியாவிலேயே முதன்முறையாக பிஎம்எக்ஸ் சைக்கிளிங் தடம், இந்தியாவிலேயே மிகப்பெரிய நீர்நிலை விளையாட்டு வசதி என 25 வகையான விளையாட்டுகளுக்குத் தேவையான 30-க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்புகள் அங்கே அமையவிருந்தன.

முதற்கட்டப் பணிகளை 18 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்குக் காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது அமைச்சர் அவர்கள், இத்திட்டத்தைக் கைவிடவில்லை என்றும், இதில் சிறு மாற்றங்கள் செய்து மறுசீரமைப்பு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, விளையாட்டு வீரர்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக அமையவிருக்கும் இத்திட்டத்தை அரசு விரைந்து செயல்படுத்தி முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories