Tamilnadu
தவெக ஆட்சியில் மின்சாரத்துறையின் அவலம் - பேரவையில் புட்டுப்புட்டு வைத்த செந்தில் பாலாஜி!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மின்சாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி” திராவிட மாடல் ஆட்சியில் கோவை மாவட்டத்திற்கு செம்மொழி பூங்கா, மேற்கு புறவழிச்சாலை, தொழில்வளர்ச்சி, மக்கள் வளர்ச்சி திட்டங்கள் என ரூ.20,000 கோடி மதிப்பிலான திட்டங்களையும், கரூர் மாவட்டத்திற்கு ரூ.5,000 கோடி மதிப்பிலான மக்கள் நலத் திட்டங்கள் என தந்த திராவிட நாயகர், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.
2021-22ம் ஆண்டில் தமிழ்நாட்டின் மின் நுகர்வோர் 3.16 கோடி இருந்த நிலையில், 2026-27ம் ஆண்டில் 3.51 கோடியாக உயர்ந்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் 35 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கி வரலாற்றுச் சாதனை. 2021ம் ஆண்டு தமிழ்நாட்டின் மின் நிறுவுதிறன் 32,595 மெகாவாட்-ஆக் இருந்தது. இன்று அது 46,846 மெ.வாட்டாக உயர்ந்துள்ளது.
இந்த அளவுக்கு மின் தேவை இருந்த போதும் அதற்கான உள்கட்டமைப்பை உருவாக்கி, அடிப்படைத் தேவைகளை திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.
3 மாத த.வெ.க ஆட்சியில் லட்சக்கணக்கான மின் நுகர்வோர்கள் மின் கட்டணம் உயர்ந்துள்ளதாக கூறுகின்றனர். இதுகுறித்து துறை அமைச்சர் குறை சரிசெய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஆனால், மின்வாரியம் வெளியிட்ட செய்தியில் 3.70 லட்சம் நுகர்வோருக்கு மறுஆய்வு என தெரிவித்துள்ளார்கள். அமைச்சர் ஒரு கருத்தையும், துறை ரீதியாக வேறு கருத்தும் உள்ளது. அமைச்சரும் துறையும் முறையாக ஒருங்கிணைந்து செயல்பட்டு ஏழை எளிய மக்களின் மின்கட்டண உயர்வுக்கு தீர்வு காண வேண்டும்.
மின் துறையில் மின் விநியோகம் செய்வதற்கான இயக்குனர் பணியிடம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணியிடங்கள் காலியாக உள்ளது. அனைத்திலும் வெளிப்படை எனக் கூறும் இந்த அரசு, இதில் சிறப்பு அரசு கவனம் செலுத்தி வெளிப்படையான பணி நியமனத்தை செய்ய வேண்டும். மின் துறையில் பணியிட மாறுதலின்போது கணவர், மனைவிக்கு வேறு வேறு இடத்தில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையை மாற்றி சரியான முறையில் பணியிட மாறுதல் வழங்கப்பட வேண்டும்.
ஒரு வார்த்தை பேசினால், மறுவார்த்தை பேச எங்களுக்கும் தெரியும். தவறாக பேசிவிட்டு அதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவீர்கள் எனக் கூறிய உடன், அமைதியாக செல்வதற்கு இந்த அவைக்கு நாங்கள் வரவில்லை. மக்கள் பிரச்சனையை பேசுவதற்காகத் தான் பேரவைக்கு வருகிறோம்.
திராவிட மாடல் ஆட்சியில் 423 துணை மின் நிலையங்கள் அறிவிக்கப்பட்டு, 122 துணை மின் நிலையங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தவெக அரசு வெளியிட்ட வெள்ளையறிக்கையில், 122 துணை மின் நிலையங்கள் ரூ.10,109 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளீர்கள்.
கடந்த 5 ஆண்டுகளில் மின் உற்பத்தி அதிகரிப்பதற்கும், புதிய மின் வழித்தடங்களுக்கான அடிப்படை கட்டமைப்புகளையும் உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான்.
மின் துறையின் 2025-26ம் ஆண்டின் கொள்கை விளக்கக் குறிப்பில் உள்ள புள்ளி விவரங்களை நீக்கிவிட்டு சரத்துகள், வரிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. புதிய மாற்றங்கள் ஒன்றுமில்லை. புள்ளிவிவரங்கள் இல்லாத கொள்கை விளக்க குறிப்புதான் இப்போது கொடுக்கப்பட்டுள்ளது.
தவெக அரசில் 5 ஆண்டுகளில் மின் துறையில் கடனே வாங்க மாட்டீர்களா? கடன் அதிகரிக்காதா? புதிய திட்டங்களுக்கு அரசு நிதிகளை கொடுக்குமா? அல்லது முதலமைச்சரிடம் நிதிகளை கேட்டு மின்வாரியத்தில் கடன் சுமை ஏறாமல் பார்த்துக்கொள்வீர்களா?
திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் மின் துறைக்கு 4 அமைச்சர்கள் மாற்றப்பட்டது என கூறினார். தவெக அரசில் மாற்றமே இருக்காதா? என்பதை பார்க்கலாம். அமைச்சரை மாற்றுவது முதலமைச்சரின் விருப்பம். பேசும்போது கவனமாகப் பேச வேண்டும். மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தவெக அரசில் இதுவரை மின் விநியோகம் செய்வதற்கான துறை ரீதியான கூட்டமே நடத்தவில்லை. லேசான மழைக்கு சென்னையில் மின்வெட்டு ஏற்படுகிறது. இதுதான் இன்றைய நிலைமை.
திராவிட மாடல் ஆட்சியில், கடந்த 5 ஆண்டுகளில் மின்சாரத் துறையில் துணை மின் நிலையங்கள், மின் கட்டமைப்பு, மின் மாற்றிகள் மற்றும் அனல் மின் திட்டங்கள் ஆகியவை எவ்வளவு அமைக்கப்பட்டுள்ளன என்பதற்கு நீங்கள் வெளியிட்ட வெள்ளை அறிக்கையே சாட்சியாகும்” என தெரிவித்தார்.
Also Read
-
“உங்கள் பூச்சாண்டி வேலைகள் எல்லாம் தி.மு.க.விடம் பலிக்காது” : அமைச்சர் ரமேஷிற்கு சேகர் பாபு பதிலடி!
-
சாணியைக் கரைத்துத் தலையில் ஊற்றிக்கொண்டிருக்கிறது தவெக அரசு : கழக பொதுச் செயலாளர் துரைமுருகன் விமர்சனம்!
-
தவெக அரசு அறிவித்த குறுவை சிறப்புத்தொகுப்பு விவசாயிகளை சென்றடையவில்லை! : உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
அந்த 3 கோப்புகளையும் திறந்து பாருங்கள் : பேரவையில் முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் Open Challenge!
-
400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார் : சோகத்தில் திரையுலகம்!