
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய தி.மு.க முன்னாள் அமைச்சர் சேகர்பாபு” சுதந்திர தினத்தில் கோட்டைக் கொத்தளத்தில், 2021-ம் ஆண்டு கொடியேற்றிப் பேசிய முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் நெஞ்சில் தைத்த முள், கலைஞர் அவர்கள் போராடிப் பெற்ற தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கினோம். அன்னைத் தமிழில் அர்ச்சனை என பறைசாற்றினார். இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் முதல் 100 நாள் சாதனைகள்.
சுதந்திர தின விழாவில் கொடியேற்றிய முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கினோம் என்றும், ‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’ என்றும் பறைசாற்றினார். தற்போது முதலமைச்சர் விஜய், துறையின் அனைத்து நடவடிக்கைகளும் டிஜிட்டல் ஆக்கப்படும் என அறிவித்துள்ளார். ஆனால், கடந்த ஆட்சியிலேயே 200 ஆண்டுகளுக்கு பழமையான துறை சார்ந்த 4,000 பக்கங்கள் டிஜிட்டல் ஆக்கப்பட்டுள்ளன.
திராவிட மாடல் ஆட்சியில் அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகள் கட்டப்படும் என அறிவித்து, அதில் 4 கல்லூரிகளைத் திறந்துவைத்தோம். கோவில் பணத்தில் கல்லூரிகள் கட்டக்கூடாது என வழக்குத் தொடர்ந்து தடுக்க நினைத்தவர்களின் எண்ணம் முறியடிக்கப்பட்டு, 4 கல்லூரிகளைக் கட்டி முடித்துள்ளோம். மீதமுள்ள கல்லூரிகளையும் கட்டி முடிக்க த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்குமா?
சட்டப்பேரவையில் அடிக்கடி ‘காணோம்... காணோம்...’ என்ற வார்த்தையை சிலர் பயன்படுத்துவதை கேட்க முடிகிறது. அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, சூரியனை வானத்தில் காணலாம்; சந்திரனை நட்சத்திரங்களுக்கு நடுவில் காணலாம். ஆண்டவன் எங்கே என்றால், ‘தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்’ என்பார்கள். அதுபோல், பசி போக்கும் அன்னதானத் திட்டம், கட்டணமில்லா இலவச திருமணம், விளக்குப் பூஜை, மருத்துவமனை வசதிகள் என எங்கெல்லாம் லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் பயன்பெற்றார்களோ, அங்கெல்லாம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களைக் காணலாம்
தி.மு.க. ஆட்சியில் 4,930 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இந்த திராவிட மாடல் ஆட்சியில் விதைக்கப்பட்ட விதைகள்தான் இன்று மரமாக வளர்ந்து குடமுழுக்கு கண்டிருக்கின்றன. த.வெ.க. நிதிநிலை அறிக்கையில் 3,000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தி.மு.க. ஆட்சியில் 12,000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கியுள்ளோம். நீங்கள் அறிவித்துள்ள 3,000 கோயில்கள், ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள 12,000 கோயில்களில் அடங்குமா?
ஒரு ஆட்சி நிறைவுற்றபோது, அதில் தொடங்கப்பட்ட பணிகள் அடுத்த ஆட்சியில் நிலுவையில் இருந்தால், அவற்றைத் தொடர்ந்து செயல்படுத்தி நிறைவேற்றுவதுதான் திறமையான ஆட்சிக்கு அடையாளம். திராவிட மாடல் ஆட்சியின் மீது இருந்த நம்பிக்கையால் உபயதாரர்கள் மூலம் ரூ.2,000 கோடி நிதி கிடைத்தது. நிலுவையில் இருந்த ரூ.570 கோடி வாடகை பாக்கியை வசூலித்து திருக்கோயில்களுக்கு கொண்டு சென்ற பெருமை எங்களுக்கு உண்டு. அதேபோல், அன்னதானத் திட்டத்திற்காக பொதுமக்கள் அளித்த நிதி ரூ.300 கோடி.
19,000 கோயில்களில் விளக்கேற்றி வைத்து, அந்தக் கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்கிய அரசு திராவிட மாடல் அரசு. ஒருகால பூஜைத் திட்டத்தின் கீழ் 2,000 அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.10,000 வழங்கப்பட்டது. மேலும், ரூ.8,000 கோடி மதிப்பிலான 8,147 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் காலையிலேயே பசியாறும் குழந்தைகள் உண்ணும் ஒவ்வொரு சோற்றுப் பருக்கையிலும் திராவிட மாடல் நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நினைவுகூரப்படுவார். எங்களுக்கு இந்த இடைவேளை முடிந்து தொடர் வேளை வரும்... இமயம் வரை எங்கள் அறம் படரும். மீண்டும் வருவோம்... மீண்டும் வருவோம்
உங்கள் பூச்சாண்டி வேலைகள் எல்லாம் தி.மு.க.விடம் பலிக்காது. இந்து சமய அறநிலையத்துறையின் பல புகார்களைத் தோண்டிப் பார்த்தீர்கள்; அதில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை, பூஜ்யமே மிஞ்சியது. எனவே, 'வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ' என்று அமைச்சர் பேசக் கூடாது" என தெரிவித்தார்.






