
மேட்டூர் அணை திறப்பில் தாமதல், மேகதாது அணைக்கு தடையிடும் வகையில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் மெத்தனம் என உழவர் பெருமக்களை வஞ்சிக்கும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது த.வெ.க அரசு.
இந்த வஞ்சிப்பின் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசு சார்பில் குறுவை சிறப்புத்தொகுப்பு அறிவிக்கப்பட்டு 2 மாதங்களான நிலையில், விவசாயிகள் பயன்பெறுவதில் தாமதம் நீடித்து வருகிறது.
இதனைக் கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனது சமூக வலைதளப் பக்கத்தில், “குறுவை சிறப்புத்தொகுப்பு அறிவிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்ட பிறகும், விவசாயிகளை அது சென்று சேராமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்காத காரணத்தால், குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது - விவசாயிகளுக்கு அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பேரவையில் பேசி இருந்தேன்.

வறட்சி நிவாரணம் பற்றிக் கேட்டதற்கு, குறுவை சிறப்புத்தொகுப்புக்காக நிதி ஒதுக்கியதைப் பற்றி முதலமைச்சர் விளக்கினார்.
ஆனால், அவர் ஒதுக்கியதாக சொன்ன அந்த நிதியும் இன்று வரை விவசாயிகளைச் சென்றடையவில்லை.
இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த Inefficient அரசு கவனித்ததா? அல்லது வழக்கம்போல விவசாயிகள் பிரச்சினையில் அலட்சியம் காட்டுகிறதா?
எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு காட்டியிருக்க வேண்டும்.
விவசாயிகள் நலனில் அக்கறையின்றி தொடர்ந்து மெத்தனப் போக்கோடு நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல.
குறுவை சிறப்புத்தொகுப்பு நிதி விவசாயிகளுக்குச் சென்று சேர இந்த விவசாயிகள் விரோத அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற கண்டனப் பதிவை வெளியிட்டுள்ளார்.






