Tamilnadu
தமிழின் எந்த அகராதியிலும் பதிவாகாத... : பூமணி மறைவுக்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
2014 ஆம் ஆண்டு ‘அஞ்ஞாடி’ நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது 79.
இந்நிலையில் ’வெக்கை’ நாவல் அசுரன் திரைப்படமாக மாறியபோது, மேலும் பல இளம் வாசகர்களும் பூமணியின் எழுத்துகளைப் படிக்கத் தொடங்கினர் என கழக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரிசல் நிலத்தின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான பூமணி அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு வேதனையடைந்தேன்.
கரிசல்காட்டு மக்களின் வாழ்க்கையையும் சமூகத்தில் நிலவிய கட்டமைப்புகளையும் மிக எளிமையான மொழியில் வெளிப்படுத்திய படைப்பாளராகத் பூமணி அவர்கள் திகழ்ந்தார். தமிழின் எந்த அகராதியிலும் பதிவாகாத பல வட்டார வழக்குச் சொற்கள் அவரது படைப்புகள் மூலமாக ஆவணப்படுத்தப்பட்டன. பூமணி அவர்களுக்கு சாகித்திய அகாதமி விருதினைப் பெற்றுத் தந்த 'அஞ்ஞாடி' எனும் புதினத்தின் தலைப்பும் கூட அத்தகையதே.
எழுத்தாளராக மட்டுமின்றி, கருவேலம்பூக்கள் எனும் திரைப்படத்தையும் எழுதி இயக்கித் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றிருக்கிறார். அவரது வெக்கை நாவல் அசுரன் திரைப்படமாக மாறியபோது, மேலும் பல இளம் வாசகர்களும் பூமணியின் எழுத்துகளைப் படிக்கத் தொடங்கினர்.
அவரது எழுத்துப் பணிகளைப் போற்றும் வகையில், திராவிட மாடல் ஆட்சியில் 2022-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளில் பூமணி அவர்களுக்குக் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணையை வழங்கி மகிழ்ந்ததையும் நினைவு கூர்கிறேன்.
இயல்பான நடையில் வீரியமான படைப்புகளைத் தந்து தமிழ் இலக்கியத்துக்குப் பெரும் பங்காற்றிய பூமணி அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
சாதி பெயரை கூறி இழிவு செய்யப்பட்ட Delivery Boy : புகார் கொடுக்க சென்ற இளைஞரை தாக்கிய போலீஸ்!
-
மதுரை அருகே அதிகாலையில் நடந்த பயங்கரம் : நேருக்கு நேர் மோதிக் கொண்ட பேருந்துகள் - 6 பேர் பலி!
-
கரூர் கொடுந்துயரம் : சாட்சிகளை அச்சுறுத்தும் விஜய் - உச்சநீதிமன்ற கண்காணிப்புக் குழுவிடம் தி.மு.க. மனு!
-
41 பேர் பச்சைப் படுகொலைக்கு காரணமாக இருந்து விட்டு... : வஞ்சக விஜய்யின் பேச்சுக்கு முரசொலி கடும் தாக்கு!
-
“ஓடி ஒளியும் அவசியம் தி.மு.க.வினருக்கு என்றுமே கிடையாது!” : சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எ.வ.வேலு!