
முரசொலி தலையங்கம் (13-07-2026)
மனித உயிர் வேட்டைக்காரன்!
41பேர் பச்சைப் படுகொலைக்கு காரணமாக இருந்து விட்டு எப்படித்தான் வெட்கமில்லாமல், கூச்சமில்லாமல் இன்னமும் பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறார் விஜய் எனத் தெரியவில்லை. விஜய் எவ்வளவு குரூரமானவர் என்பதற்கு உதாரணம்தான் அவரது கரூர் பேச்சு.
-”ஓடு... ஓடு.. வர்றான் பாரு வேட்டைக்காரன்” என்று பாடி ஆடியதற்கு பதிலாக“வர்றான் பாரு மனித உயிர் வேட்டைக்காரன்” என்று பாடி ஆடி இருக்கலாம். ”வர்றான் பாரு நரபலி வேட்டைக்காரன்” என்று பாடி ஆடி இருக்கலாம். ஏனென்றால் கரூரில் நடந்தது அதுதான்.
அவரது விளம்பர வெறிக்காகவும், புகழ் அரிப்புக்காகவும், தான் இத்தனை உயிர்கள் பலியானார்கள். சூட்டிங் எடுப்பதற்காக, காட்சியில் தத்ரூபத்தை உருவாக்குவதற்காகத்தான் மக்களைக் காத்திருக்க வைத்து அந்த வெறித்தனமான காட்சியை எடுக்க நினைத்தார்கள். ஃபயர் விடும் காட்சியை எடுப்பதற்காகத்தான் 41 உயிர்கள் பலியானது.
ஒரு வீட்டில் ஒரு துக்கம் நடந்து விட்டால், அதுவும் மிகமிக சோகமான துக்கமாக அமைந்துவிட்டால் அதனை தன் வீட்டுச் சோகங்களைப் போல நெஞ்சில் ஈரமுள்ள அனைவரும் பல ஆண்டுகள் நடந்து கொள்வார்கள். இதெல்லாம் நெஞ்சில் ஈரம் உள்ளவர்களுக்குத்தான் பொருந்தும். நெஞ்சில் வஞ்சகத்துடன் வாழும் விஜய் போன்றவர்களுக்கு பொருந்தாது. ரசிகனின் வியர்வையால் ஹீரோவாகி, ரசிகனின் ரத்தத்தால் கட்சி நடத்த நினைக்கும் வஞ்சக விஜய்யிடம் இது போன்ற குரூரமான, கொடூரமான, வன்மமான பேச்சுகள்தான் வாயில் இருந்து வரும்.
‘எனக்கு வாயில வந்திறப் போகுது' என்று திருச்சியில் நர மொழி உதிர்த்த விஜய், ‘ஒரு ...... ம் கிடையாது” என்று கரூரில் அது என்ன வார்த்தை என்பதைச் சொல்லி இருக்கிறார். அடுத்து சென்னையில் பேசும் போது 'சென்னையின் புகழ் மிக்க சொல்லை 'உதிர்ப்பார். அதையும் எழுதிக் கொடுப்பார்கள். டயலாக் விடுவார். தான் இப்போது விசிலடிச்சான் குஞ்சுகளின் தலைவன் அல்ல, தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பதை அவர் முதலில் உணர வேண்டும். எவ்வளவு பெரிய பெரிய தலைவர்கள் இருந்த நாற்காலி, எத்தகைய தலைக்கனம் கொண்ட மனிதன் கையில் சிக்கி இருக்கிறது என்பதுதான் வேதனைக்குரியது.
கரூரில் மனித உயிர்கள் செத்து விழுந்த போது தலைதெறிக்க கரூரை விட்டு திருச்சிக்கு ‘ஓடு ஓடு' என ஓடிவந்தது விஜய். மரணங்களின் எண்ணிக்கை 30 ஐ தாண்டிவிட்டது என்று சொல்லப்பட்ட பிறகும் திருச்சியை விட்டு ‘ஓடு ஓடு' என்று ஓடி வந்தது விஜய். 41 பேர் இறந்து போனார்கள் என்று சொன்ன பிறகும் சென்னை வீட்டுக்குள் பதுங்கியது யார் விஜய்.
புஸ்சி ஆனந்த் ஓடிவிட்டார். ஆதவ் அர்ஜூனா ஓடி விட்டார். நிர்மல் குமார் ஓடிவிட்டார். த.வெ.க.வின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஓடிவிட்டார். சி.பி.ஐ.க்கு வழக்கு மாறாமல் இருந்திருந்தால் இவர்கள் அனைவரும் இன்று வரை தலைமறைவாகவே இருந்திருப்பார்கள்.
இப்படி ஒரு சோகம் தனது ஊருக்குள் நடந்துவிட்டது என்று அறிந்ததும் அடுத்த நிமிடமே மருத்துவமனைக்கு வந்தவர் செந்தில் பாலாஜி. அவரை உடனடியாகச் செல்ல உத்தரவிட்டவர் மனிதாபிமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். எந்தக் கட்சிக் கூட்டத்தில் நடந்தது என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் நடவடிக்கை எடுக்கச் சொன்னார் அன்றைய முதலமைச்சர் அவர்கள். அரசு இயந்திரம் உரிய வகையில் செயல்படாமல் இருந்தால் இன்னும் பல உயிர்கள் போயிருக்கும். நூற்றுக்கும் மேற்பட்டவர்களை மருத்துவ மனையில் சேர்த்து காப்பாற்றியவர் செந்தில் பாலாஜி. மனித உயிர்களைக் காப்பாற்றியவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். ஆனால் நரபலி வேட்டையை நடத்திக் கொண்டிருப்பவர் கையில் இன்றைய அதிகாரம் சிக்கி இருக்கிறது.

அந்த சூழலிலும் விஜய்யை குறைசொல்லவில்லை அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 'எந்த அரசியல் கட்சித் தலைவரும் தனது தொண்டர்கள் பலியாவதை விரும்ப மாட்டார்கள்’என்று விஜய்க்கு ஆதரவாக தான் அன்றைய முதல்மைச்சர் பேசினார். அந்தப் பெருந்தன்மை மனிதரைத்தான் விஜய் இன்று திட்டித் தீர்க்கிறார்.
நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர்
பண்பறிந்தாற்றாக் கடை - என்கிறார் திருவள்ளுவர்.
ஒருவருக்கு நன்மை செய்யும் போது அவரின் குணநலன்களை முழுமையாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செய்யாவிட்டால், அந்த நன்மையும் தீமையாகவே முடிந்துவிடும் என்று அன்றே சொல்லி இருக்கிறார் வள்ளுவர். விஜய் போன்றவர்களின் குணம் அறிந்து செயல்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் காலம் நமக்குக் கற்றுத்தரும் பாடம் ஆகும்.
எஃப். ஐ. ஆரில் விஜய் பெயரைச் சேர்த்திருந்தால், ‘ஜனநாயகன்' படத்துக்கு டான்ஸ் ஆடி இருக்க முடியாது. இவர் சோகமாக இருந்தாராம், வலியோடு இருந்தாராம். அந்த நேரத்தில் இவர் மீது பழி போட்டு விட்டார்களாம். இவரது சோகத்தைத் தான் மலேசியாவில் பார்த்தோமே. 41 பேர் மரணத்துக்குத் தான் சோகமாக மலேசியாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் டான்ஸ் போட்டு கொண்டாடினாரே! படத்தில்தான் சோகக் காட்சி முடிந்ததும், சம்பந்தமில்லாமல் குத்துப்பாட்டு வரும். அப்படிக் கொண்டாடியவர் விஜய். அவர் 18 மாதம் கழித்து சோகத்தோடு கருப்புச் சட்டை போட்டுக் கொண்டு சோகமான முகத்தை வைத்துக் கொண்டு குரூரமான பேச்சை பேசுகிறார்.
சி.பி. ஐ. க்கு மட்டும் வழக்கு மாறாமல் இருந்திருந்தால் விஜய், தலைமறை வாகத்தான் ஓடிக் கொண்டு இருந்திருப்பார். ஓடு ஓடு ஓடு என ஓடிக் கொண்டு இருந்திருப்பார்.
கரூரில் 41 பேர் பலியானதை, ‘மனிதப் பேரிடர்' என்று சொன்னது சென்னை உயர்நீதிமன்றம். 'இதற்கு விஜய்யும், விஜய் கட்சி நிர்வாகிகளும் தான் பொறுப்பேற்க வேண்டும்' என்றும் சொன்னது சென்னை உயர்நீதிமன்றம். இந்த பலிக்கு யார் காரணம் என்பதை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் இது நடக்க வேண்டும் என்று சொன்னது உச்சநீதிமன்றம்.
அந்த பிரச்சினை பற்றி பொதுவெளியில் பேசுவதே நீதிமன்ற அவமதிப்பு ஆகும். விசாரணையைப் பாதிக்கும் செயல் ஆகும். பாதிக்கப்பட்டோர் குடும்பத்துக்கு அழுத்தம் கொடுக்கும் செயல்களைச் செய்தது தவறு ஆகும். பிரச்சினையில் தொடர்புடைய 19 காவல் துறை அதிகாரிகள், அலுவலர்களை பல்வேறு ஊர்களுக்கு மொத்தமாக தூக்கியடித்ததும் தவறு ஆகும். அதாவதுதன்னைக் காப்பாற்றிக் கொள்ள துடிக்கிறார் விஜய்.
தனது தவறுகளை மறைக்க செந்தில் பாலாஜி ஓடுகிறார், முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு சிங்கப்பூர் போய்விட்டார் என்று கீழ்த்தரமான பேச்சுகளைப் பேசி திசை திருப்புகிறார். செந்தில் பாலாஜி எங்கும் ஓடவில்லை. உள்ளூரில்தான் இருக்கிறார். மருத்துவச் சிகிச்சைக்காகத் தான் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு சென்றுள்ளாரே தவிர வேறல்ல. இது போன்ற திசை திருப்பல்கள், அரைமணி நேர பிரேக்கிங் மட்டுமே!
விஜய் ஆட்சி நடத்தவில்லை. ஆட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார். அது அருவெறுப்பாக இருக்கிறது என்பதை அவருக்கு வாக்களித்தவர்களே உணரத் தொடங்கி விட்டார்கள்.






