Tamilnadu
மக்களை மட்டுமல்ல யானைகளின் உயிரிழப்பை தடுத்தள்ள தி.மு.க- வின் தொலைநோக்கு திட்டம் : நடந்தது என்ன?
கோவை மதுக்கரை வனப்பகுதிக்கு உட்பட்ட 694 சதுர கிலோ மீட்டர்பரப்பளவில், சுமார் 200 யானைகள் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 2008-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை இப்பகுதியில் உள்ள கோவை - பாலக்காடு ரயில் வழித்தடத்தில், எட்டிமடை - வாழையார் இடையே உள்ள 'ஏ' மற்றும் 'பி' (A & B) ஆகிய இரு தண்டவாளங்களைக் கடக்க முயன்ற 11 யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்தன.
இந்த வழித்தடங்களில் வாரத்திற்கு சுமார் 120 ரயில்கள் இயக்கப்படுகின்றன.யானைகளின் இறப்பைத் தவிர்க்கும் வகையில், மதுக்கரை பகுதியில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக கடந்த தி.மு.க ஆட்சியில் 7.24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
இரு தண்டவாள வழித்தடங்களிலும் 7.05 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 12 உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டு தானியங்கி (ஆட்டோமேட்டிக்) சுழல் வசதி கொண்ட அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கேமராவும் குறைந்தபட்சம் 150 மீட்டர் தொலைவிற்குள் தண்டவாளத்தின் அருகே யானைகள் வருவதை, அவற்றின் உடல் வெப்பநிலை மற்றும் நடமாட்டத்தைக் கொண்டு கண்டறிந்து கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்கும்.
அங்கிருந்து ரயில்வே மற்றும் வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், மற்றும் ரயிலை இயக்கும் லோகோ பைலட்டுகளுக்கு அலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் உடனுக்குடன் தகவல்கள் அனுப்பப்படும்.
கண்காணிப்புக் கோபுரங்களைச் சுற்றி 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறை ஊழியர்கள், யானைகள் தண்டவாளத்தை நெருங்கும்போது விரைந்து சென்று அவற்றை ரயில்கள் வரும் நேரத்தில் தற்காலிகமாகத் திசைதிருப்பிப் பாதுகாப்பாகக் கடக்க வழிவகை செய்கின்றனர்.
ரயில்கள் சென்ற பின்பு, அவை தங்களின் வழக்கமான பாதை வழியே செல்கின்றன. மேலும், ஆங்காங்கே தடுப்புப் பாதைகள் அமைக்கப்பட்டு, அதன் வழியாகவும், ரயில்வே தண்டவாளத்தின் அடியில் உள்ள சுரங்கப்பாதைகள் வழியாகவும் யானைகள் செல்வதற்கு மடைமாற்றம் செய்யப்படுகிறது. சில நேரங்களில் யானைகள் தண்டவாளத்தின் மிக அருகில் வந்துவிட்டால், ரயில்கள் உடனடியாக நிறுத்தப்படுகின்றன.
இத்திட்டம் தொடங்கப்பட்ட 2024 பிப்ரவரி முதல் தற்போது (2026) வரை, கட்டுப்பாட்டு அறை மூலம் 7,116-க்கும் அதிகமான எச்சரிக்கைகள் (Alerts) வழங்கப்பட்டு, அதன் மூலம் தனியாகவோ அல்லது கூட்டமாகவோ தண்டவாளத்தைக் கடந்த 9,481-க்கும் மேற்பட்ட யானைகள் பாதுகாப்பாகக் கண்டறியப்பட்டு மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்தச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பின், இப்பகுதியில் ஒரு யானை கூட ரயிலில் அடிபட்டு உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மற்றும் மனித உழைப்பின் ஒருங்கிணைப்பால் யானைகள் பாதுகாக்கப்பட்டதை, தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, IAS அவர்கள், களத்தில் பணியாற்றும் வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
Also Read
-
‘உரிமைத்தொகை’யால் உருவான மிகப்பெரிய பொருளாதார மாற்றம்! : பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தகவல்!
-
அமைச்சர் கீர்த்தனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : குழந்தை உரிமைகள் தேசிய ஆணையத்திற்கு சல்மா MP கடிதம்!
-
கரூர் விவகாரம் : ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் - சிபிஐக்கு திமுக புகார் மனு!
-
கரூர் வழக்கு முதல் அடிதடிகள் வரை ; அடுத்தடுத்து சிக்கும் த.வெ.க அமைச்சர்கள் : முரசொலி தலையங்கம்!
-
‘பிரான்ஸ் கேப்டன் எம்பாப்பே மீது இனவெறி தாக்குதல்.. பராகுவேவின் இழி மனநிலையா? குவியும் கண்டனங்கள்’