Tamilnadu

200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!

முரசொலி தலையங்கம் (26-06-2026)

விஜய்யின் மூன்றாவது பித்தலாட்டம்!

வாக்குறுதியை நிறைவேற்றுகிறேன் என்று கணக்குக் காட்டுவதற்காக முதலமைச்சர் விஜய் செய்யும் அறிவிப்புகள் பித்தலாட்டமானதாக இருக்கின்றன.

•முதல் பித்தலாட்டமான அறிவிப்பு, 200 யூனிட்டுகள் வரை மின்சாரம் இலவசம்.

•இரண்டாவது பித்தலாட்டமான அறிவிப்பு, பயிர்க்கடன் ரத்து.

•மூன்றாவது பித்தலாட்டம், பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் திட்டம் – இப்படி வரிசையாக அறிவிக்கும் அத்தனை திட்டங்களும் அவர் கொடுத்த வாக்குறுதிகளை அவரே மீறுவதாக அமைந்துள்ளன.

இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் வரை மின்சாரத்துக்கு கட்டணமில்லை என்று அரசாணை வெளியிட்டார் விஜய். இதுதான் அவரது முதல் கையெழுத்து ஆகும். ஆனால் தேர்தலுக்கு முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தகுதி வாய்ந்த வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. தேர்தல் அறிக்கையில் சொன்னது வேறு. வெற்றி பெற்றதற்குப் பிறகு செய்தது வேறு.

‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம்’ என்பதுதான் அவரது வாக்குறுதி ஆகும். 500 யூனிட்டுக்குள், 500 யூனிட்டுக்கு மேல் என்று முதலமைச்சர் விஜய் தனது அறிக்கையில் சொல்லவில்லை. இப்போது செய்திருப்பது முதல் பித்தலாட்டம் ஆகும்.

அடுத்ததாக ஒட்டுமொத்த உழவர்கள் தலையில் மிளகாய் அரைத்தார் விஜய். ‘’5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு அதிகமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு அவர்கள் வைத்திருக்கும் பயிர்க்கடனில் 50 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும்” என்று விஜய் அள்ளி விட்டார்.

முதலமைச்சர் ஆனதும் விஜய் போட்டுள்ள உத்தரவு இதற்கு மாறானது ஆகும். கூட்டுறவு வங்கிகளில் 50 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். அதற்கு மேல் இருந்தால் அந்தக் கடனில் 50 விழுக்காடு வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார் விஜய். இது ஒட்டுமொத்த உழவர்களை ஏமாற்றியது. அவர்கள் கடுமையாக போராடத் தொடங்கியதும், 75 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி என்று அறிவித்துள்ளார். இதுவும் அவரது வாக்குறுதியை அமல்படுத்துவது ஆகாது. இது முதலமைச்சர் விஜய்யின் இரண்டாவது பித்தலாட்டம் ஆகும்.

முதலில் பொதுமக்களை ஏமாற்றினார் விஜய். அடுத்ததாக உழவர்களை ஏய்த்தார். அடுத்து மூன்றாவதாகச் செய்துள்ள பித்தலாட்டம், பிறக்கப் போகும் குழந்தைகளை ஏமாற்றுவது ஆகும்.

தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார் விஜய். ஆனால், தற்போது, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டும் தங்க மோதிரம் வழங்கப்படும் என அரசாணை வெளியிட்டுள்ளது த.வெ.க. அரசு.

‘தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் வரவேற்கும் விதமாக தங்க மோதிரம் வழங்கப்படும்’ என தேர்தல் பிரச்சாரத்தில் விஜய் பேசிய வீடியோ ஆதாரம் இருக்கிறது.

‘’தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம். உலகத்துல மனுஷனா பிறக்கிறதே பெரிய விஷயம். அதுவும் நம்ம தாய்நாடான தமிழ்நாட்டுல பிறக்கிறது மிகப்பெரிய வரம். அப்படி நம்ம தமிழ்நாட்டுல பிறக்கிற குழந்தைகளை வரவேற்கிற திட்டம் தான் ‘தாய்மாமன் தங்கமோதிரம்’ திட்டம். தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசாங்கத்தின் ஆசீர்வாதமாக ஒரு தங்கமோதிரம் வழங்கப்படும். கூடவே ஒரு ‘பேபி வெல்கம் கிட்டும்’ வழங்கப்படும்.” – இதுதான் விஜய் பயன்படுத்திய வார்த்தைகள் ஆகும்.

ஆனால் இப்போது அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் என்று சுருக்கிவிட்டார் விஜய். தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் என்றும் விதிமுறை சேர்க்கப்பட்டுள்ளது. முன்பு எத்தனை கிராம் என்று சொல்லவில்லை. இப்போது ஒரு கிராம் என்று சொல்லப்பட்டுள்ளது.

200 யூனிட் மின்சாரத்திலும் பயிர்க்கடன் ரத்திலும் செய்யப்பட்ட அதே பித்தலாட்டம்தான் இதிலும் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பரப்புரையின் போது என்ன சொன்னார் விஜய்? ‘மற்றவர்களைப் போல வாக்குறுதிகளை நான் அள்ளிவிட மாட்டேன். நிறைவேற்றக் கூடிய சாத்தியமான வாக்குறுதிகளைத்தான் சொல்வேன்’ என்றார். இப்போது ஏன் அவரால் செய்ய முடியவில்லை? ஏன் சாத்தியம் ஆகவில்லை? அவர் சொன்னவை அனைத்தும் கப்சாக்கள். வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதியாகக் கொடுத்தார்.

இன்னும் கேட்டால், ‘நீங்கதான் கஜானாவுக்குப் பணம் வரும் வழிகளை எல்லாம் அடைத்து வைத்துவிட்டீர்களே’ என்பார். தமிழ்நாடு இரண்டாவது பொருளாதார மாநிலமாக வளர்ந்து விட்டது என்ற சாதனையை தனது நெற்றியில் ஒட்டிக் கொள்வதும் அவர்தான்.

கடந்த கால ஆட்சியின் சாதனைகள் தொடரும் என்பார். ஆனால் ‘நான் முதல்வன்’ போன்ற திட்டங்களின் பயனை மறைப்பார்.

‘திராவிட மாடல்’ ஆட்சியில், தனது கனவுத் திட்டமாக ‘நான் முதல்வன்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்கள். இதையே உல்டா பண்ணி செயல்படுத்தத் தொடங்கி இருக்கிறார் விஜய். பிரதமர் மோடியைச் சந்தித்த போது, ‘’ஆண்டுதோறும் ஐந்து இலட்சம் இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய பணியிடைப் பயிற்சிகள் (Internships) மற்றும் தொழில்துறையுடன் இணைந்த திறன் பயிற்சிகளை வழங்கும் “இளைஞர் திறன் மற்றும் வேலைவாய்ப்பு இயக்கத்தை” (Youth Skill and Employment Mission) செயல்படுத்த விழைகிறேன்” என்று சொல்லி இருக்கிறார் விஜய். அதே திட்டம்தான், பெயர்தான் வேறு. கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் இதைச் செய்துள்ளார்.

அதைப் பற்றி எல்லாம் அவர் கவலைப்படும் ரகம் அல்ல. கோட், சூட் போட்டுக் கொண்டு பித்தலாட்டம் செய்தால் யாரும் கேட்க மாட்டார்கள். கதை சொல்லி, சைகை காட்டி ‘ரீல்ஸ்’ விட்டு மக்களைத் திசை திருப்பி நாட்களை கடத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறார் விஜய்.

Also Read: “மேகதாது அணை விவகாரம்.. ஏற்கப்பட்ட எதிர்க்கட்சி திருத்தம்.. தமிழ்நாடு ஒற்றுமையை காட்ட வேண்டும்”- முரசொலி!