Tamilnadu
தெற்காசியாவின் மாடல் மாநிலமாகத் தமிழ்நாட்டை நான் மாற்றிக் காட்டுவேன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை, கொளத்தூரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரை நிறைவுப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை விவரம்:-
என்னதான் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்கும் நான் முதலமைச்சராக இருந்தாலும், சென்னை - நான் பாசமாக வளர்த்த குழந்தை போன்று! ஏனென்றால் நான் அந்தளவிற்கு உங்களோடு ஒன்றி இருப்பவன். அதுமட்டுமல்ல, சென்னைக்கு மாநகரத் தந்தையாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயராக இருந்தவன் நான். சென்னை – பல கனவுகளுடன் நான் உருவாக்கிய திட்டங்களால் வளர்ந்திருக்கும் மாநகரம்! அதனால்தான் அப்படிச் சொல்கிறேன். அதிலும், இந்த நம்முடைய கொளத்தூர் என்னுடைய செல்லக் குழந்தை!
பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் எனப் பண்டிகைகளைக்கூட, நான் உங்களுடன்தான் கொண்டாடி இருக்கிறேன். முதலமைச்சர் பொறுப்பில் இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்திற்கும் சுற்றுப்பயணம் சென்றாலும், பத்து நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூருக்கு வராமல் என்னால் இருக்கவே முடியாது. ஒரு வாரம் ஆனால், நம்முடைய சேகர்பாபுவிடம், “எப்போது தொகுதிக்குச் செல்லலாம்? தொகுதியில் என்ன வேலை நடக்கிறது?” என்று நானே கேட்க ஆரம்பித்துவிடுவேன்.
தேர்தல் அறிவித்ததும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தேன்; அடுத்து இப்போதுதான் பிரச்சாரத்தின் கடைசி நாள் உங்களிடம் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். ஏனென்றால், அந்த அளவிற்கு இந்தத் தொகுதிக்குத் தொடர்ந்து வந்து அனைத்துப் பணிகளையும் செய்து கொடுத்திருக்கிறேன். நான் செய்து கொடுத்த திட்டப் பணிகள்தான் எனக்காக இங்கு ஓட்டு கேட்டிருக்கின்றன. மற்ற வேட்பாளர்களுக்காகத் தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்த நான், என்னுடைய தொகுதியில் மொத்தமாகவே ஒரு மணி நேரம்தான் சுற்றியிருக்கிறேன். கொளத்தூர் மக்கள் என் மேல் காட்டும் அன்பு அப்படிப்பட்டது.
வருடம் முழுவதும் நன்றாகப் படித்த மாணவன் தேர்வுக்கு முன்பு சிறியதாக ‘revise’ செய்தாலே போதும். அதுபோன்று, இத்தனை ஆண்டு உங்களுக்காக உழைத்திருக்கிறேன். நான் செய்த திட்டங்களே எனக்காகப் பேசும். நான் சொல்வது சரிதானே?
ஒவ்வொரு ஊருக்கும் சென்றபோது, அங்கு போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தேன். கொளத்தூரில் எனக்கு நானே ‘intro’ கொடுத்துக் கொள்கிறேன். உங்களுக்காக உழைத்து இத்தனை திட்டங்களைக் கொளத்தூருக்குக் கொண்டு வந்த உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு மூன்று முறை வாய்ப்பு கொடுத்தீர்கள். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து இன்னொரு முறையும் எனக்கு வாய்ப்பு கொடுங்கள். கொடுப்பீர்களா? கொளத்தூர் வேட்பாளர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் வெற்றி உறுதியா? நன்றி!
ஏற்கனவே ஒரு மாடல் தொகுதியாகக் கொளத்தூரை மாற்றி வைத்திருக்கிறேன். இன்னும் சிறப்பாக உயர்ந்த கொளத்தூராக, உறுதியாக மேம்படுத்துவேன். நிறைய பேர் என்னிடம், “மற்ற ஊர்களைவிட நீங்கள் சென்னைக்கு நிறையத் திட்டங்களைக் கொண்டு வருவது போன்று இருக்கிறது” என்று சொல்வார்கள். நான் அனைத்து ஊர்களையும் சமமாகத்தான் பார்க்கிறேன். அனைத்து மாவட்டங்களுக்குமே அந்தந்தப் பகுதிகளின் மக்கள் தொகைக்கேற்பத் திட்டங்களைச் செய்து கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
இருந்தாலும், ஏன் நிறையப் பேருக்கு அப்படித் தோன்றுகிறது என்று யோசித்துப் பார்த்தேன். அப்போதுதான் புரிந்தது, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பத்தாண்டுகாலமாகச் சென்னை முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு இருந்தது. மாநிலத்தில் அ.தி.மு.க. ஆட்சியே இருந்தாலும்கூட, சென்னை வளர வேண்டும் என்றால், தி.மு.க.தான் வேண்டும் என்று, சென்னையின் தீர்ப்பு எப்போதுமே சாலிடாக தி.மு.க. பக்கம்தான் இருக்கும்! அதனாலேயே சென்னையைப் பழிவாங்குவது போன்று அ.தி.மு.க. ஆட்சியில் பாராமுகமாக வைத்திருப்பார்கள். நம்முடைய தலைநகரையே தவிக்கவிட்ட ஆட்சிதான் அ.தி.மு.க. ஆட்சி! சிறிய மழைக்கே வெள்ளத்தில் உங்களைத் தத்தளிக்கவிட்ட ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி!
புதிதாக எதையும் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை; முந்தைய தி.மு.க. அரசில் நாம் உருவாக்கிய கட்டமைப்புகளைக் கூடச் சீர்குலைத்து வைத்திருந்தார்கள். சென்னையைத் தேங்கவும், வளர்ச்சிக்காக ஏங்கவும் வைத்துவிட்டுப் போய்விட்டார்கள். சென்னைக்குச் சமமாக இருந்த மற்ற நகரங்கள் அனைத்தும் பத்தாண்டு அ.தி.மு.க. ஆட்சியில், வேறு லெவலுக்குப் போயிருந்தார்கள். அதைச் சரிசெய்வது போன்று, இப்போது நம்முடைய கடந்த 5 ஆண்டு ஆட்சியில், மளமளவெனச் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும், மேம்பாலங்கள், மெட்ரோ பணிகள், பூங்காக்கள், நூலகங்கள், முதல்வர் படைப்பகங்கள், மழைநீர் வடிகால்கள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக ஏழைகளுக்கு நகரின் மையப்பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள், விளையாட்டு மைதானங்கள், குத்துச்சண்டை அகாடெமி, நவீன பேருந்து நிலையங்கள், தாழ்தள பேருந்துகள், மின் பேருந்துகள், AC பேருந்துகள் எனப் பட்டியல் போட்டால் போய்க் கொண்டே இருக்கும்... அந்த அளவிற்கு வேலை பார்த்திருக்கிறோம்.
அதுவும் வடசென்னை வளர்ச்சித் திட்டம் எனக் கொண்டு வந்து, 8 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி, உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி, வடசென்னையின் இமேஜையே மாற்றிவிட்டோம். நிறைய பேர், இப்படி நாம் உருவாக்கிய இடங்களுக்குச் சென்று பார்க்கும்போது, “நம்முடைய சென்னையில் இப்படி ஒரு வசதியா? எப்படி இருந்த இடம் இப்படி மாறிவிட்டது?” என்று கேட்டு reels போடுகிறார்கள். அதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு ஏற்படும் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
இப்படியாக, அ.தி.மு.க.-வின் 10 ஆண்டு ஆட்சியில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த சென்னைக்கு, தலைநகருக்குரிய கவனம் இப்போதுதான் கிடைக்கிறது. நம்முடைய ஆட்சியில் தலைநகரைத் தலைசிறந்த நகராக மாற்றி இருக்கிறோம்.
அடுத்தகட்டமாக, நேற்று முன்தினம் ‘சென்னை சூப்பர் சிக்ஸ்’ என்ற பெயரில் ஒரு சிறப்புச் செயல்திட்டத்தையும் அறிவித்திருக்கிறேன். ராபின்சன் பூங்காவில் கட்சி தொடங்கிய நாளிலிருந்தே சென்னை தி.மு.க.-வின் கோட்டை! யாராலும் உடைக்க முடியாத கோட்டை! 2021-இல் முழு வெற்றியைத் தந்து, நம்மை அரியணையில் ஏற்றிய கோட்டை. அந்த வெற்றி இந்த முறையும் தொடர வேண்டும்! கடந்த முறையைவிட, அதிக வாக்கு வித்தியாசத்தில் இந்த முறை வெற்றி பெற வேண்டும். எத்தனை பேர் வந்தாலும், சென்னைக்காக உழைக்கும் தி.மு.க. கொடி மட்டும்தான் சென்னையில் பறக்க வேண்டும்! பறக்கும்! இது உறுதி!
உங்களுக்கான திட்டங்களையும் வளர்ச்சிப் பணிகளையும் கொண்டு வந்திருக்கிறோம். எடுத்துக்காட்டிற்கு இந்த கொளத்தூர் தொகுதியையே எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஏன் நான் மாடல் தொகுதி என்று சொல்கிறேன் தெரியுமா? கடந்த 5 ஆண்டில் தமிழ்நாட்டில் முதல் முறையாக முதல்வர் படைப்பகங்கள், முதல்வர் கல்விச் சோலை அமைத்திருக்கிறோம். கொளத்தூருக்குத் தேவையான மேம்பாலங்கள் கட்டித் திறந்திருக்கிறோம். அதிக அளவிலான ஏரி, குளங்களைத் தூர்வாரிச் சீரமைத்திருக்கிறோம். நவீன பேருந்து நிலையங்கள், தரமான மருத்துவமனை, வசதியான திருமண மாளிகை, பூங்காக்கள், இளைஞர்களுக்கான மினி ஸ்டேடியம், விளையாட்டுத் திடல்களை அமைத்திருக்கிறோம். புதிதாகக் கல்லூரியைத் தொடங்கியிருக்கிறோம். வண்ணமீன்கள் வர்த்தக மையம் திறந்திருக்கிறோம். கொளத்தூரில்தான் அதிக அளவிலான அரசுப் பள்ளி புதிய கட்டடங்களைக் கட்டிக் கொடுத்து, smart வகுப்பறைகளை அமைத்திருக்கிறோம். இப்படி கொளத்தூரில் திரும்பும் பக்கமெல்லாம், புதிய புதிய கட்டமைப்புகளை உருவாக்கியிருக்கிறோம்!
கொளத்தூர் மாடல் தொகுதி என்றால், திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாடே ஒரு மாடல் state தான்!
தமிழ்நாடு முழுவதும் என்னுடைய இந்த பிரச்சார நிறைவு உரையைப் பார்க்கும் என்னுயிர் மக்களே... நாங்கள் ஆட்சிக்கு வந்து முதல் மூன்று ஆண்டுகளில் செய்த சாதனைகளைப் பார்த்தே, நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவிலேயே யாரும் பெற முடியாத நாற்பதுக்கு நாற்பது என்ற முழு வெற்றியைப் கொடுத்தீர்கள். அதே போன்று சட்டமன்றத் தேர்தலிலும் நாம் வரலாறு படைக்க வேண்டும். தமிழ்நாட்டின் தொடர் வளர்ச்சிக்காக எங்களுக்குத் தொடர்ச்சியான வெற்றியைத் தர வேண்டும்.
நம்முடைய சாதனைத் திட்டங்களுடைய பெயர்களை மட்டும் சொன்னாலே, இன்றைக்கு ஒருநாள் போதாது. அதனால் ஒரு சில திட்டங்களை மட்டும் சொல்லி அது எப்படி மக்களோடு நெருங்கி இருக்கிறது, அந்தத் திட்டங்களால் பயனடையும் பயனாளிகள் இந்த ஸ்டாலினை எப்படிப் பார்க்கிறார்கள் என்று சொல்கிறேன்.
மகளிர் மேம்பாடு என்று எடுத்துக் கொண்டால், மாதம் ஆயிரம் ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வாங்கும் சகோதரிகள், இந்த ஸ்டாலினை நினைத்துப் பார்ப்பார்கள்.
ஒவ்வொரு முறையும் விடியல் பேருந்தில் சுதந்திரமாகப் பயணிக்கும் போதும் என்னை நினைத்துப் பார்ப்பீர்கள்!
அதேபோன்று தோழி விடுதிகள் திட்டம், pink ஆட்டோக்கள், கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்கும் திட்டம் என நிறைய இருக்கின்றன.
கல்வி வளர்ச்சி என்று எடுத்துக் கொண்டால், காலை உணவுத் திட்டத்தில் சுவையான உணவைச் சாப்பிடும் குழந்தைகளும், காலையில் சீக்கிரமே எழுந்து வேலைக்குச் செல்லும் பெண்களும், என்னை நன்றியோடு நினைத்துப் பார்ப்பார்கள்.
புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ஆயிரம் வருகிறது என்று கல்லூரிக்குச் செல்லும் மாணவிகள் அனைவரும் இந்த ஸ்டாலினுக்கு thanks சொல்லுவார்கள்.
அப்படித்தான் ஒரு பெண் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சியில் மேடையில் நின்று கண்ணீரோடு இந்தத் திட்டம் எப்படி உதவியாக இருக்கிறது என்று நன்றி சொன்னார். நெகிழ்ந்துபோன நான் அவர்களை அழைத்து உச்சந்தலையில் அன்போடு முத்தம் தந்து, என் பேனாவை அன்பளிப்பாகத் தந்தேன். அந்தக்காட்சியை என்னால் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் யாராலும் மறக்க முடியாது.
அதேபோன்றுதான், தமிழ்ப்புதல்வன் திட்டம்,
'உலகம் உங்கள் கையில்' லேப்டாப் வழங்கும் திட்டம்,
மாவட்டம்தோறும் மாடல் பள்ளிகள்,
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் என இன்னும் நிறைய இருக்கின்றன!
நலன் காக்கும் ஸ்டாலின் முகாம்கள், ‘இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48’ இப்படி பல பட்டியலை நான் சொல்லிக் கொண்டே இருக்க முடியும்.
தொழில்துறை என்று எடுத்துக் கொண்டால், தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு அனைத்து மாவட்டங்களிலும் சிப்காட் தொழிற்பூங்கா, சிறிய மாநகரங்களில் கூட டைடல் பூங்காக்கள் என்று தமிழ்நாடு இப்படி வளர்ந்து வருகிறது.
விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் திட்டம்.
வீட்டுவசதியை எடுத்துக் கொண்டால், ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தில் சொந்த வீடு எனும் கனவு நனவான யாராலும் ஸ்டாலினை நிச்சயமாக மறக்க முடியாது;
அதோடு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக ஏழை மக்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள், பல ஆண்டு கனவாக இருந்த 23 லட்சம் பேருக்கு இலவச பட்டா. வயதானவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ‘தாயுமானவர்’ திட்டத்தில் வீடு தேடி ரேஷன் பொருள் சேரும்போது, அவர்கள் நிச்சயம் இந்த ஸ்டாலினை வாழ்த்துவார்கள்.
ஆன்மீகமா? சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
அதேபோன்று, அரசு ஊழியர்களுக்கு எப்படிப்பட்டக் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்தோம் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். இப்படி துறை வாரியாக நிறைய இருக்கிறது.
அதனால்தான் சொல்கிறேன்... சிறந்த உட்கட்டமைப்புக்குத் தமிழ்நாடுதான்! சிறந்த கல்விக்குத் தமிழ்நாடுதான்! மருத்துவத்திற்குத் தமிழ்நாடுதான்! தொழில் முதலீட்டுக்குத் தமிழ்நாடுதான்! சட்டம் - ஒழுங்குக்குத் தமிழ்நாடுதான்! அமைதிக்கும் மதநல்லிணக்கத்திற்கும் தமிழ்நாடுதான்! இப்படி எல்லாத் துறையிலும் சிறக்க உழைப்பவன்தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
இப்போது நான் இந்த அளவிற்குத் திட்டங்களைப் பட்டியல் போட்டுச் சொன்னேன் இல்லையா? இது எதையும் நான் ஏதோ நினைத்ததும் செய்துவிடவில்லை. ஒவ்வொன்றுக்கும் எத்தனையோ சோதனைகள் வந்தன. கொரோனா அலை உச்சத்தில் இருக்கும்போதுதான் நாம் ஆட்சிக்கே வந்தோம். ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் ஒருபக்கம், தமிழ்நாட்டுக்குரிய நிதியைத் தராமல் ஒன்றிய பா.ஜ.க. அரசு உருவாக்கியது. அது ஒரு கொடுமை. ஆளுநர் மூலமாக நிர்வாகத்தில் நெருக்கடி என இப்படி அனைத்துத் தடைகளையும் கடந்துதான், நான் சொன்ன சாதனைகளையெல்லாம் செய்திருக்கிறோம்.
அந்தச் சீரழிவிலிருந்து தமிழ்நாட்டை மீட்டு, 11.19 விழுக்காடு சாதனை வளர்ச்சியை, இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் அடையாத இரட்டை இலக்க வளர்ச்சியைச் சாதித்துக் காட்டியிருக்கிறோம்.
உலகம் முழுவதும் வெளியாகும் ‘எக்கனாமிஸ்ட்’ பத்திரிகையே, தமிழ்நாட்டைப் புகழ்ந்து ‘Superstar State’ என எழுதுகிறார்கள். இப்படி தமிழ்நாட்டைச் சூப்பர்ஸ்டார் ஆக்கிய இந்த முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சி தொடர வேண்டுமா? வேண்டாமா? சொல்லுங்கள்.
திராவிட மாடல் தமிழ்நாட்டில் நிறைவேற்றும் திட்டங்கள் அனைத்தும், இன்றைக்கு மற்ற மாநிலங்களுக்கும் மாடலாக அமைந்திருக்கின்றன. தமிழ்நாட்டுக்கு வந்து பார்த்து, அவர்கள் மாநிலங்களிலும் இதை செயல்படுத்துகிறார்கள்.
அதேபோன்று, நான் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி செயல்படுத்திய மாடல் பள்ளிகள், நகர்ப்புற கிளினிக்குகள் உள்ளிட்ட திட்டங்களை ஆய்வு செய்து, நம் ஊரில் அதை இன்னும் மேம்படுத்திச் செயல்படுத்துகிறோம். இப்படி ஒரு ஆரோக்கியமான வளர்ச்சி அரசியலுக்கு வித்திட்டிருக்கிறோம். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இன்று எதிர்க்கட்சிகளே நாம் இப்போது நிறைவேற்றிக் கொண்டு வரும் திட்டங்களைத்தான், பெயரை மட்டும் மாற்றி அவர்களுடைய தேர்தல் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை!
ஆனால், நம்மை எதிர்த்து நிற்பவர்கள் யார் என்று பார்த்தீர்களா? “பா.ஜ.க.-வால்தான் 2021 சட்டமன்றத் தேர்தலில் தோற்றோம், இனி அவர்களோடு கூட்டணி இல்லை” என்று சொன்னவர் எடப்பாடி பழனிசாமி! டெல்லியிலிருந்து இரண்டு ரெய்டு நடந்தவுடனேயே பயந்துபோய், கர்ச்சிப்பால் முகத்தை மறைத்துக் கொண்டே, சட்டமன்றத்தைக்கூட விட்டுவிட்டு, வேறு வேறு காரில் டெல்லி சென்று, கூட்டணி வைத்துவிட்டு வந்தார். சரி, அந்தக் கூட்டணிக்காவது இவர்தான் தலைமையா என்று கேட்டால் அதுவும் கிடையாது!
சினிமாவில் வருவதுபோல், “மாப்பிள்ளை இவர்தான், ஆனால் இவர் போட்டிருக்கும் சட்டை இன்னொருவருடையது” எனச் சொல்வது போன்று, இவர்களின் குடுமி டெல்லியிடம் இருக்கிறது. அனைத்து முடிவுகளும் அங்கிருந்துதான் எடுக்கப்படுகிறது.
அதனால்தான், இந்தத் தேர்தலையே ‘தமிழ்நாடு versus NDA’ - ‘தமிழ்நாடு அணி versus டெல்லி அணி’ எனச் சொன்னேன். நிறைய பேர்கூட, “ஏன் டெல்லி என்று சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். இவர்களிடம் திரும்ப ஆட்சி சென்றால், டெல்லி ரிமோட் கன்ட்ரோல் ஆட்சிதான் தமிழ்நாட்டில் மறுபடியும் நடக்கும். நம்முடைய அனைத்துத் திட்டங்களும் நின்று போய்விடும். ஏற்கனவே அரசு தந்த காசைக்கூடத் திரும்பக் கேட்பார்கள்.
ஆனால், நாம் இப்போது இருக்கும் திட்டங்களோடு சேர்த்து, புதுத் திட்டங்களையும் நம்முடைய சூப்பர் ஸ்டார் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறோம். ‘இல்லத்தரசி’ என்ற ஒரு வாக்குறுதியிலேயே எதிரிகள் எல்லாம் பார்த்து இன்றைக்கு புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள். இந்தத் திட்டத்தில் எவ்வளவு வழங்கப் போகிறோம்? எட்டாயிரம் ரூபாய்… இந்த கூப்பனை வைத்து, வீட்டிற்குத் தேவையான பொருட்களை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடனே உங்களின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு என்று அனைவரும் கேட்கிறார்கள்... இல்லத்தரசி திட்டத்திற்குதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் முதல் கையெழுத்து இருக்கும்! மகிழ்ச்சியா?
அதேபோன்று, உங்களுடைய மகளிர் உரிமைத்தொகை இனி மாதம் ஆயிரம் இல்லை, இரண்டாயிரம் ரூபாய்! விடுபட்ட மகளிரையும் இணைத்து, உரிமைத்தொகையை கொடுக்கப் போகிறோம்! இந்த ஸ்டாலின் சொன்னால் செய்வான் என்பதற்கு ‘டிரெய்லராகத்தான்’ பிப்ரவரியில் சொல்லாமலே 5 ஆயிரம் ரூபாய் வழங்கினேன்.
முதியோர் ஓய்வூதியமும் இனி மாதம் 2 ஆயிரம், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை இனி மாதம் 2 ஆயிரத்து 500 ரூபாய்.
புதுமைப்பெண், தமிழ்ப்பெண் கல்வி உதவித்தொகை இனி மாதம் ஆயிரத்து 500 ரூபாய்.
கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் அடுத்த 5 ஆண்டுகளில் லேப்டாப்.
‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப் போகிறோம்.
காலை உணவுத் திட்டத்தை எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப் போகிறோம்.
மகளிர் தொழில் தொடங்க நிறையக் கடனுதவித் திட்டங்கள்.
மீன்பிடி தடைக்கால சிறப்பு நிவாரணம் இனி 12 ஆயிரம் ரூபாய்.
மீன்பிடி குறைவுக்கால சிறப்பு நிவாரணம் இனி 9 ஆயிரம் ரூபாய்.
இதெல்லாம் ஒரு சில சூப்பர்ஹிட் வாக்குறுதிகள் மட்டும்தான். மொத்தம் 50 பிரிவுகளில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொண்ட தொலைநோக்கு ஆவணமாக நம்முடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறேன். அடுத்த 5 ஆண்டில் அதையெல்லாம் நிறைவேற்றிவிட்டு, உங்களிடம் 2031 தேர்தலின்போது வாக்கு கேட்டு நான்தான் மீண்டும் வருவேன். இது இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் சத்தியம்!
சின்ன வயதிலிருந்தே என்னைச் சுற்றி இருந்ததும் எனக்குத் தெரிந்ததும் அரசியல், அரசியல், அரசியல் மட்டும்தான். தலைவர் கலைஞரைப் பார்க்க, எங்கள் வீட்டிற்குப் பேரறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நாவலர், இனமானப் பேராசிரியர் இப்படிப்பட்ட பெருந்தலைவர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்ட சூழலில் வளர்ந்ததால் மக்கள் பணி செய்யும் ஆர்வம் சின்ன வயதிலிருந்தே எனக்கு வந்துவிட்டது.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள்கூட என்னைப் பார்த்து, “நீ என்ன இந்த சின்ன வயதிலேயே கட்சி வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறாய்? ஒழுங்காகப் படிப்பில் மட்டும் கவனம் செலுத்து. நான் உன் பெரியப்பாவாகச் சொல்கிறேன்” என்று எனக்கு அட்வைஸ் செய்தார். ஆனால், அவர் சொன்னபடி படித்து முடித்தாலுமே, என்னுடைய அரசியல் ஆர்வம் குறையவே இல்லை. ஒரு கட்டத்திற்கு மேல் வீட்டிலும் என்னுடைய அரசியல் ஈடுபாட்டைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால்தான் இந்தியா முழுவதும் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டு இருந்தபோது, 23 வயது இளைஞனாக அதை எதிர்த்து ஊர் ஊராக நாடகங்கள் நடத்தினேன். தமிழ்நாட்டில் மிசா கொடுஞ்சட்டத்தில் கைதான 500 பேரில் நானும் ஒருவன் என்றால், கலைஞரின் மகன் என்பதற்காக நான் கைது செய்யப்படவில்லை; கட்சிக்காக நான் அப்போதே செய்த என்னுடைய பரப்புரை காரணமாகத்தான் கைது செய்யப்பட்டேன்.
இப்படி, அடிமட்டத்திலிருந்து களத்தில் உழைத்து, அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி, அடி உதை பட்டுத்தான் அரசியலில் வளர்ந்தேன். இன்றைக்கும் அந்தத் தழும்புகள் அனைத்தும் என் உடம்பில் அப்படியேதான் இருக்கின்றன. கோபாலபுரம் இளைஞர் தி.மு.க.-வில் தொடங்கி, சென்னை மேயர், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர், இளைஞரணி செயலாளர், உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதலமைச்சர், தி.மு.க. பொருளாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எனப் படிப்படியாக, 60 ஆண்டுகாலம் போராட்டம் நிறைந்த பொதுவாழ்க்கையில் பயணித்துதான் நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்.
தமிழ்நாட்டு மக்களுக்காக மனசாட்சிக்கு உண்மையாக, என் சக்தியையும் மீறி உழைத்திருக்கிறேன். கொடுக்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்பிலும் என்னை நிரூபித்திருக்கிறேன். நான் மிகுந்த பணிவோடு சொல்கிறேன், இதுவரை தமிழ்நாட்டில் இருந்த முதலமைச்சர்களில், இந்த ஸ்டாலின் அளவிற்கு அதிக நிகழ்ச்சிகள், மாவட்ட பயணங்கள், கள ஆய்வுகள், கூட்டங்கள், திட்டங்களின் தொடக்கம் என்று யாருமே கலந்துகொண்டிருக்க மாட்டார்கள்! நான் என்னுடைய வீட்டில் இருந்ததைவிட, களத்தில் மக்களுடனும், பயணத்திலும், கோட்டையிலும் இருந்ததுதான் அதிகம். இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்த வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளோடு உழைத்துக் கொண்டிருக்கிறேன்.
தமிழ்நாட்டுக்கு என ஒரு தனித்துவம் இருக்கிறது. ஒன்றிய பா.ஜ.க. அனைத்து மாநிலங்களையும் அவர்களால் கண்ட்ரோல் செய்துவிட முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு எப்போதும் ‘Out of Control’-இல் இருக்கும் ஒரே மாநிலம், நம்முடைய தமிழ்நாடுதான்!
ஏனென்றால் நாம், அகர முதல தொட்டு தாடிக்கிழவன் ப்ளட்டு! அகர முதல தொட்டு அறிஞர் அண்ணா ப்ளட்டு! அகர முதல தொட்டு தலைவர் கலைஞர் ப்ளட்டு!
இப்படிப்பட்ட பெருந்தலைவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இந்த ஸ்டாலினும், நம்முடைய தி.மு.க.வும் இந்த மண்ணில் இருக்கும் வரை, N.D.A.-ஆல் தமிழ்நாட்டின் D.N.A.-வைச் சிதைக்க முடியாது! அடுத்த 5 ஆண்டில், இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக மட்டுமல்லாமல், தெற்காசியாவின் மாடல் மாநிலமாகத் தமிழ்நாட்டை நான் நிச்சயம் மாற்றிக் காட்டுவேன்! இது உறுதி... உறுதி... உறுதி..!
இந்தத் தேர்தல் மிக மிக முக்கியமான தேர்தல். அதனால் ஒவ்வொரு குடும்பத்திலும் அனைவருமே நம்முடைய தி.மு.க. கூட்டணிக்குத்தான் வாக்களிக்க வேண்டும்.
உரிமைத்தொகை, விடியல் பயணம் ஆகியவற்றில் பயனடையும் பெண்கள், உங்களுடைய பிள்ளைகளிடம் இதை எடுத்துச் சொல்ல வேண்டும். 'நான் முதல்வன்', லேப்டாப், புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களில் பயனடையும் இளைஞர்கள் - உங்கள் பெற்றோர்களிடம் திராவிட மாடல் ஆட்சி ஏன் தொடர வேண்டும் என்று எடுத்துச் சொல்லுங்கள்.
வீட்டில் இருக்கும் பெரியவர்கள் 'தாயுமானவர்' போன்ற திட்டங்களைச் சொல்லி, உங்களுடைய பேரப்பிள்ளைகளிடம் இந்த ஆட்சிதான் மீண்டும் வர வேண்டும் என்று புரிய வையுங்கள். அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்கள் - மாநில உரிமைகள், சமூக நீதி, மத நல்லிணக்கம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் தி.மு.க. தான் வர வேண்டும் என்று உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பேசுங்கள்.
நீங்கள் பிரச்சாரம் செய்வது ஒரு கட்சிக்காகவோ, கூட்டணிக்காகவோ இல்லை; தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக! எனவே, ஒவ்வொரு வாக்காளரும், குறிப்பாக முதல்முறை வாக்களிக்கப் போகின்ற இளைஞர்கள், உங்கள் வாக்கின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் புரிந்துகொண்டு வாக்களிக்க வேண்டும். உதயசூரியனுக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் உங்கள் ஆதரவை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன். விடைபெறுகிறேன் என்றால், கூட்டத்திலிருந்து விடைபெறுகிறேன் என்று அர்த்தம். எப்போதும் உங்களுடன்தான் இருப்பேன்.
Also Read
-
தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் நிறைவு : நாளை மறுநாள் வாக்குப்பதிவு!
-
கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரச்சாரம் - பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!
-
“தமிழ்நாட்டையும், தமிழர்களையும் பாதுகாத்து நிற்பேன்; இது என்னுடைய உறுதிமொழி!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”கற்பனை உலகத்தில் வாழ்கிறார் மோடி.. இதுதான் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க” : முரசொலி கடும் விமர்சனம்!
-
“உங்கள் வீட்டுப்பிள்ளை வேண்டுமா? எங்கிருந்தோ வந்து நாடகமாடுபவர் வேண்டுமா?” : பெரம்பூரில் முதல்வர் உரை!