Tamilnadu

NDA-வை புறக்கணிக்க வேண்டும்! அதுதான் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (01-04-2026) மாலை கரூரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய உரையின் விவரம்:

காலையில் தீரர்கள் கோட்டமான திருச்சியில் பரப்புரையை முடித்துவிட்டு, கரூருக்கு வருகை தந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கரூர் என்றால் கழக ஊர். செப்டம்பர் மாதம் நடந்த முப்பெரும் விழா எழுச்சியை மீண்டும் இன்று நான் பார்க்கிறேன். ஏன், அதைவிடப் பன்மடங்கு கூடியிருக்கும் எழுச்சியையும் நான் காண்கிறேன். அடுத்த மாதத்தில் திராவிட மாடல் 2.0 வெற்றி விழாவிற்கு தயாரா? இதோ உங்களைப் போன்றே தயாராக நான்கு வேட்பாளர்கள் நிற்கிறார்கள்.

முதலில் அரவக்குறிச்சி தொகுதி, நமது வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ அவர்கள். அரவக்குறிச்சியில் கடந்த 5 ஆண்டு காலமாக அவர் ஆற்றிய பணி மறக்க முடியாத ஒன்று. சென்ற முறை போன்றே, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதற்கு அரவக்குறிச்சி மக்கள் உங்கள் வாக்குளை உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் எல்லாம் வழங்க வேண்டும்.

அடுத்து கிருஷ்ணராயபுரம் தொகுதி, நமது வெற்றி வேட்பாளர் சி.கே. ராஜா அவர்கள். மாவட்ட இளைஞரணியின் துணை அமைப்பாளராக கழகப் பணியைச் சிறப்பாகச் செய்யக் கூடியவர். இப்போது கிருஷ்ணராயபுரம் தொகுதி மக்களுக்காகப் பணியாற்ற உங்கள் ஆதரவைக் கோரி நிற்கும் அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் உங்கள் பொன்னான வாக்குகளை வழங்க வேண்டும்.

அடுத்து குளித்தலை தொகுதி, நமது வெற்றி வேட்பாளர் சூரியனூர் சந்திரன் அவர்கள். ஒன்றியச் செயலாளராக தன்னுடைய பணியைச் சிறப்பாகச் செய்யக் கூடியவர். தலைவர் கலைஞர் அவர்கள் முதன்முதலில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்ற தொகுதி. இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் சூரியனூர் சந்திரன் நிற்கிறார். அவருக்குக் குளித்தலை தொகுதி மக்கள் உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் வழங்க வேண்டும்.

அடுத்து கரூர் தொகுதி, நம்முடைய வெற்றி வேட்பாளர் ஆசி.எம். தியாகராஜன் அவர்கள். உப்பிடமங்கலம் நுண் நீரேற்று விவசாயிகள் சங்கத்தினரின் தலைவராகப் பொறுப்பேற்று விவசாயிகளுக்காக அரும்பணியாற்றியவர். இப்போது நம்முடைய செந்தில் பாலாஜி அவர்கள் செய்த பணிகளை அவர் தொடரப் போகிறார். கடந்த முறை செந்தில் பாலாஜி அவர்கள் பெற்ற வெற்றி போன்றே ஆசி.எம். தியாகராஜன் அவர்களுக்கும் உங்கள் வெற்றியை வழங்க உதயசூரியன் சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை நீங்கள் வழங்க வேண்டும்.

இவர்கள் நான்கு பேரையும் உங்களின் பிரதிநிதிகளாக - உங்களின் உரிமைக்குரலாக சட்டமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள் என்று கேட்கத்தான் உங்களால் உருவாக்கப்பட்ட இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வந்திருக்கிறேன். இவர்களுக்கு வெற்றி உறுதியா? நன்றி! வெற்றி உறுதியாகிவிட்டது. வேட்பாளர்கள் உட்காரலாம்.

கரூரைப் பொறுத்தவரைக்கும் எனக்கு எந்தக் கவலையும் இல்லை! ஏன் என்று உங்களுக்கே தெரியும். என்னுடைய இனிய சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களுடைய மாவட்டம் இது. நிச்சயம் நூறு சதவீதம் வெற்றி உறுதி! கரூரில் கழகக் கூட்டணியின் வெற்றியை அவர் எப்போதோ உறுதி செய்த காரணத்தினால்தான், கோவை மாவட்டத்தில் நிற்கச் சொல்லி அவருக்குப் பொறுப்பு கொடுத்திருக்கிறேன். நீங்கள் யாரும் கவலைப்படாதீர்கள். அவர் புகுந்த வீடுதான் கோவை. அவர் பிறந்த கரூரை என்றும் மறக்கமாட்டார். அடுமட்டுமல்ல, பல சோதனைகளைத் தாண்டி, சாதனை படைப்பவர் செந்தில் பாலாஜி அவர்கள். இந்த முறை கரூர், கோவை இரண்டுமே நம் வசம்தான்! ஏன், தமிழ்நாடு மொத்தமும் நாம்தான்! மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 200 தொகுதிகளுக்குக் குறையாத வெற்றி பெறப்போகிறது! சாதிக்க நான் ரெடி… நீங்கள் ரெடியா?

பத்தாண்டு காலமாக, தமிழ்நாட்டை இருளுக்குள் தள்ளி, வளர்ச்சியை நாசப்படுத்தி, உரிமைகளை அடகு வைத்த அ.தி.மு.க. ஆட்சியை நாம் அகற்றி, 2021-இல் புதிய விடியலாக திராவிட மாடல் ஆட்சியை அமைத்தோம். தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மட்டுமல்ல, எந்தவொரு மாநில அரசும் இந்தளவிற்குச் சாதனைகளைச் செய்ய முடியாது என்று கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்திச் சொல்லும் அளவிற்கு, ஏராளமான திட்டங்களை திராவிட மாடல் ஆட்சியில் செய்திருக்கிறோம்!

நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் இந்தக் கரூருக்கு மட்டும் ஐந்தாயிரம் கோடி ரூபாய் அளவிற்கான திட்டங்களைச் செய்திருக்கிறோம். நேரத்தின் அருமை கருதி, அதில் முக்கியமான சிலவற்றை மட்டும் சுருக்கமாகத் தலைப்புச் செய்திகளாக உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

கரூர் மாவட்டம், நெரூரையும் - திருச்சி மாவட்டம், உன்னியூரையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 101 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்டப் பாலம் கட்டியிருக்கிறோம்!

கரூர் தொகுதி மக்களின் 25 ஆண்டுகாலக் கோரிக்கையான புதிய பேருந்து நிலையத்தை 40 கோடி ரூபாய் மதிப்பில் அமைத்திருக்கிறோம். 38 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பில் மினி டைடல் பார்க்கிற்கு அடிக்கல் நாட்டிப் பணிகளை தொடங்கியிருக்கிறோம்!

கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம், கரூர் - திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் மாவட்ட மைய நூலகத்திற்குப் புதிய கட்டடம், அரவக்குறிச்சியில் புதிய அரசு கலைக் கல்லூரி, புதிய வேளாண்மைக் கல்லூரி, குளித்தலையில் புதிய அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் கூடுதல் கட்டடம், கரூர் - ஈரோடு சாலை விரிவாக்கம், கிருஷ்ணராயபுரத்தில் முருங்கைப் பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடக்கம்,

கரூர் மாநகராட்சியில் புதிய நீச்சல் குளம், கிருஷ்ணராயபுரத்தில் சிப்காட் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு, பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது! இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்! அதுமட்டுமல்ல, இன்னும் நிறைய பணிகள் வரப் போகிறது.

கரூர் மாவட்டத்தில் திருக்கோயில்கள் நிலம் சம்பந்தமாகச் சட்டப் பிரச்சினைகள் இருக்கிறது. இதற்காக நம்முடைய செந்தில் பாலாஜி அவர்கள் இந்தப் பகுதி மக்களோடு சேர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறார். இதற்காக அமைக்கப்பட்டிருக்கும் குழு வழங்க இருக்கும் அறிக்கையைக் கொண்டு நிச்சயமாக முழுத் தீர்வு காணப்படும்.

திராவிட மாடல் ஆட்சியில் நடந்து கொண்டிருக்கும் உட்கட்டமைப்பு வளர்ச்சிகளை மக்களான நீங்களே அனைத்து இடங்களிலும் பார்க்கிறீர்கள். இந்த வளர்ச்சியைச் சாத்தியப்படுத்தியிருக்கும் தெம்போடுதான் தமிழ்நாட்டிற்கான எதிர்காலத்தை வடிவமைக்கும் தொலைநோக்குப் பார்வையோடுதான் உங்கள் முன்னால் உரிமையுடன் நான் வாக்கு கேட்க வந்திருக்கிறேன்!

முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடனேயே, மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பயணத்திற்குக் கையெழுத்திட்டவன்தான், உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கும் இந்த ஸ்டாலின்! இங்கு இருக்கும் மகளிரைக் கேட்கிறேன்... நீங்கள் அனைவரும் இன்றைக்கு வரைக்கும் விடியல் பயணம் செய்து கொண்டிருக்கிறீர்களா?

மகளிர் உரிமைத்தொகை கொடுப்பேன் என்று சொன்னேன். சொன்னது போன்று உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாதாமாதம் வந்துகொண்டிருக்கிறதா? இது அனைத்தும் சொன்னது... இதுமட்டுமல்ல, சொல்லாததையும் செய்தவன்தான், இந்த ஸ்டாலின்!

நம்முடைய தமிழ்நாட்டுப் பிள்ளைகள் எல்லாம், நம்முடைய எதிர்காலம் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எதிர்காலம்! நாட்டின் எதிர்காலம்! அதற்காகத்தான் பள்ளி மாணவர்களுக்கு சூடான - சுவையான உணவை கொடுக்க காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்தேன். நம்முடைய குழந்தைகள் இப்போது வயிறார சாப்பிட்டு நன்றாக படிக்கிறார்களா?

நம்முடைய தமிழ்நாட்டு இளைஞர்கள், எந்தப் போட்டித் தேர்வு என்றாலும் உயரத்திற்கு வர வேண்டும்; எந்த இண்டர்வியூவிற்குச் சென்றாலும் உடனே தேர்வாக வேண்டும் என்று நினைத்தேன். அதற்கான திட்டம்தான், நான் முதல்வன் திட்டம்! இதனால், இன்றைக்கு ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ் தேர்வாகின்றவர்கள் எண்ணிக்கை அதிகமாயிருக்கிறது!

அடுத்து, கல்லூரி கனவுக்கு காசு தடையாக இருக்கக் கூடாது என்று நினைத்தேன். அதற்காகக் கொண்டுவந்ததுதான் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டமும், தமிழ்ப்புதல்வன் திட்டமும்!

நம்முடைய ஊரில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். அதனால்தான், தமிழர் திருநாளான பொங்கலுக்கு, மூன்றாயிரம் ரூபாய் கொடுத்தோம்!

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஒரு திட்டத்தை அதிரடியாக செய்தேன்... அதிலும் குறிப்பாக, அ.தி.மு.க. - பா.ஜ.க போட்ட சூழ்ச்சிகளை முறியடிக்க, அதை செய்தேன். அதுதான், கடந்த பிப்ரவரி மாதம் மகளிர் உரிமைத்தொகையாகவும், கோடைக்கால சிறப்பு நிதியாகவும், உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்த ஐந்தாயிரம் ரூபாய்! ஐந்தாயிரம் வந்ததா?

பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு வஞ்சனை செய்தார்கள். அவர்கள் சம்பளம் வாங்குவதைக்கூட கிண்டல் செய்து பழனிசாமியே பேசினார். ஆனால், நான் முதலமைச்சரானவுடனே முறையாக கமிட்டி போட்டு, அரசு ஊழியர்கள் 22 ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருந்த கோரிக்கையை, ஒரே கையெழுத்தில் நிறைவேற்றியவன்தான் இந்த ஸ்டாலின். அன்றைக்கு அரசு ஊழியர்கள் என்னைக் கோட்டையில் சந்தித்து, தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்த காட்சி, தமிழ்நாட்டு வரலாற்றில் யாரும் பார்த்திடாத காட்சி!

இப்படி, ஒருபக்கம் சாதனைகள், இன்னொரு பக்கம் புதிய புதிய மக்கள்நலத் திட்டங்கள், இதுதான் திராவிட மாடல்!

இந்த திராவிட மாடல் ஆட்சியில், சாதிக் கலவரம் இல்லை! மதக் கலவரம் இல்லை! கும்பல் வன்முறை இல்லை! தொடர் வன்முறைகள் இல்லை! தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது! மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்! இதைப் பார்த்து அ.தி.மு.க.வும் - பா.ஜ.க.வும்தான் டென்ஷனாக இருக்கிறார்கள்! ஏன் என்றால், இந்த அமைதியை கெடுக்க அவர்கள் பரப்பும் பொய்ச் செய்திகள் அனைத்தும் புஸ்வாணமாக ஆகிவிட்டது! அவர்களின் சதித் திட்டங்கள் அனைத்தும் சந்தி சிரித்துவிட்டது! அவர்களின் அவதூறு பிரச்சாரங்கள் அனைத்தும் தவிடுபொடியாகிவிட்டது! அனைத்திற்கும் காரணம் இந்த தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல; இந்த ஸ்டாலினுக்குப் பக்கபலமாக இருக்கும் நீங்கள்தான் அதற்குக் காரணம்!

தமிழ்நாட்டு மக்களான நீங்கள் என்னுடன் இருக்கும் வரைக்கும், டபுள் எஞ்சின் - டப்பா எஞ்சின் என்று யாரும் தமிழ்நாட்டைச் சீரழிக்க உள்ளே வர முடியாது! அதைத் தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை சூப்பர் ஃபாஸ்டாகத் தொடரத்தான், திராவிட மாடல் 2.0-வுக்கான சூப்பர் ஸ்டார் களத்திற்கு வந்திருக்கிறார். அதுதான், என்.டி.ஏ.வின் தூக்கத்தை கெடுத்து பழனிசாமிக்கு பதட்டத்தை கொடுத்திருக்கும் தி.மு.க. தேர்தல் அறிக்கை! அதில் நான் சொல்லியிருக்கும் அறிவிப்புகளை எல்லாம் நீங்கள் செய்திகளில் பாத்திருப்பீர்கள். ஹைலைட்டாக, பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் சில முத்தான வாக்குறுதிகளை மட்டும் நான் சொல்லப் போகிறேன்.

மாதம்தோறும் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை என்பதை டபுள் மடங்காக இனி 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப் போகிறோம்! என்ன மகிழ்ச்சிதானே? மகிழ்ச்சி (மக்கள்).

புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கு இப்போது மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம். இனி அது ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

அதேபோன்று, ஏற்கெனவே 5-ஆம் வகுப்பு வரை இருந்து காலை உணவுத் திட்டத்தை 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப் போகிறோம்! மேலும், 15 இலட்சம் மாணவர்கள் பயன்பெறப்போகிறார்கள். இன்னும் அதிகமான தாய்மார்கள் காலையில் சீக்கிரம் எழுந்து சமையல் செய்யும் சுமை குறையப் போகிறது.

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி தரும் இன்னொரு சூப்பர் டூப்பர் வாக்குறுதியையும் கொடுத்திருக்கிறோம். இல்லத்தரசிகள் தங்களின் வீட்டிற்குத் தேவையான வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்டர், மிக்சி, மைக்ரோ-வேவ் அவன், மின் அடுப்பு போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை புதிதாக வாங்கவும் அல்லது ஏற்கெனவே பயன்படுத்தி வரும் இத்தகைய பொருட்களைக் கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக வேறு வாங்கிக் கொள்ளவும், ‘இல்லத்தரசி’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். அதுவும் நீங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள உங்களுக்குப் பிடித்த கடைகளிலேயே உங்களுக்குப் பிடித்த கம்பெனி, உங்களுக்கு பிடித்த மாடலாக பார்த்து, இந்தப் பொருட்களை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பன் கொடுத்துவிடுவோம். இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் இந்தத் திட்டத்தைப் பற்றிதான் ஒரே பேச்சாக இருக்கிறது. நம்முடைய பெண்கள் ஒரு சேலை வாங்கினால் கூட, அவர்களுக்குப் பிடித்த கடையில், அவர்களுக்குப் பிடித்த டிசைனில், அவர்களுக்குப் பிடித்த கலரில் வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதை மனதில் வைத்துதான் இந்தத் திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். இல்லத்தரசி திட்டத்தில் என்ன வாங்க வேண்டும், எப்படி வாங்க வேண்டும், எல்லாமே ‘உங்கள் சாய்ஸ்’!

அதேபோன்று, உலகிற்கே உணவு அளிக்கும் உழவர்களை மகிழ்விக்க ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம். இலவச மின்சாரம் பெறும் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, எந்த வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரப் பம்பு செட்டுகள் வழங்கப்படும். அனைவரும் பழைய பம்பு செட்டு வைத்திருப்பீர்கள். சில பம்புசெட்டுகள் அடிக்கடி ரிப்பேர் ஆகும். அதிக விலை கொடுத்து வாங்க முடியாத நிலையில் இருப்பீர்கள். அதை நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் அரசே இனி வாங்கித் தரும்.

நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.

முதியோர் உதவித்தொகை இனி மாதம் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

இன்னும் இருக்கிறது,

மீன்பிடித் தடைக்காலச் சிறப்பு நிவாரணத் தொகை 8 ஆயிரம் ரூபாயிலிருந்து 12 ஆயிரம் ரூபாயாக, மீன்பிடிக் குறைவுக்காலச் சிறப்பு நிவாரணத் தொகை 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

மகளிர் சுய உதவிக்குழுவைச் சார்ந்த சகோதரிகள் நிறைய பேர் இங்கு வந்திருப்பீர்கள். உங்களை எல்லாம் பிசினஸ்-வுமனாக முன்னேற்றும் வகையில் பிணை எதுவும் இல்லாமலேயே, 5 இலட்சம் ரூபாய் வரை மானியத்துடன் வங்கிக் கடனுதவி வழங்கப்படும்.

பேரிடர் கால இழப்பீடுகளாக இறவைப் பாசன பயிர்கள் மற்றும் நெல் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாயும் நீண்டகாலப் பயிர்களுக்கு 27 ஆயிரம் ரூபாயும், மானாவாரிப் பயிர்களுக்கு 12 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

உயர்கல்வி படிக்கும் 35 இலட்சம் மாணவர்களுக்கும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் லேப்டாப் வழங்கப்படும்.

10 ஆயிரம் புதிய பேருந்துகள் இயக்கப்படும்.

அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் முதல்வர் படைப்பகங்கள் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனியாக சிறப்பு வளர்ச்சி திட்டங்கள்!

இப்படி ஏராளமான வாக்குறுதிகளை இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறோம். நாங்கள் சொன்னால் செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம். நான் கலைஞரின் மகன். சொன்ன வாக்குறுதிகளை மறக்கவும் மாட்டேன், மறுக்கவும் மாட்டேன். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் நிதி நிலையைச் சீராக்கி, ஒவ்வொன்றாக நாங்கள் நிறைவேற்றி வரும் திட்டங்களே அதற்கு சாட்சி! அந்தச் சாதனைகள்தான் திராவிட மாடல் ஆட்சி!

ஆனால், மக்களுக்கு வேதனைகளும் சோதனைகளும் தந்ததுதான், அ.தி.மு.க. ஆட்சி! அ.தி.மு.க.விற்குப் போட்டி போட்டு கொண்டு தமிழ்நாட்டை வஞ்சிப்பதுதான் இன்றைக்கு இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி! எம்.பி. தேர்தலில் ஒரு சீட் கூட வெற்றிபெற வைக்கவில்லையே என்ற விரக்தியில், இன்றைக்கு வரைக்கும் தமிழ்நாட்டைப் பழிவாங்கி கொண்டிருப்பதுதான் பா.ஜ.க. ஆட்சி! இப்படிப்பட்ட தமிழ்நாட்டிற்கு விரோதமான கூட்டணிக்கு, தக்கப்பாடம் புகட்டுவதற்கான நாள்தான், ஏப்ரல் 23.

இந்த கரூர் மாவட்டத்திற்குட்பட்ட வாக்காளர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு வாக்காளர்களும், அடிமை அ.தி.மு.க.விற்கும் ஆணவ பா.ஜ.க.விற்கும் பதிலடி கொடுக்கும் நாள்தான், ஏப்ரல் 23. அன்றைக்கு, பழனிசாமியின் ‘அமித்ஷா அ.தி.மு.க’-வை மட்டுமல்ல; ஆர்.எஸ்.எஸ் இயக்கும் பா.ஜ.க.வையும் சேர்த்து விரட்டியடிக்க முடிவு செய்துவிட்டார்கள்!

தேர்தல் ரிசல்ட்டை இப்போதே தெரிந்துகொண்ட காரணத்தினால்தான் அதிகமாகப் புலம்ப ஆரம்பித்துவிட்டார் பழனிசாமி! அதிலும் தன்னைத் தானே பெரிய புலனாய்வுப் புலி என்று நினைத்துக் கொண்டு, இப்போது காமெடி செய்து கொண்டிருக்கிறார்!

கலைஞரும் - வாஜ்பாயும் இருக்கும் புகைப்படத்தைக் காண்பித்து, நீங்கள் கூட்டணி வைக்கவில்லையா என்று கேட்கிறார். நாங்கள் கூட்டணி வைத்தோமே தவிர; பழனிசாமி மாதிரி அடகு வைக்கவில்லை! அதைப் புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் கூட்டணி வைத்தபோது, தி.மு.க., தலைவர் கலைஞரிடம்தான் இருந்தது. ஆனால், இப்போது அ.தி.மு.க. அமித்ஷாவிடம்தானே இருக்கிறது? நாங்கள் குறைந்தபட்ச செயல்திட்டம் வகுத்து, வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசின் கடிவாளத்தைக் கலைஞர் கையில் வைத்திருந்தோம். ஆனால், இப்போது, அ.தி.மு.க. மட்டுமல்ல, என்.டி.ஏ.வில் இணைந்திருக்கும் அத்தனை ஊழல் கட்சிகளின் குடுமிப்பிடியும் அமித்ஷாவிடம்தான் இருக்கிறது! நாங்கள் கூட்டணி வைத்தபோது தமிழ்நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்தோம். ஆனால், பழனிசாமி கூட்டணி வைத்து, நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டு, தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்ததுதான் மிச்சம்! இந்த லட்சணத்தில், ஊருக்கே தெரிந்த செய்தியை, அதைப் புகைப்படமாகக் கொண்டுவந்து, இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படத்தில் சொல்வது போன்று, மணிக்கொரு முறை தான் ஒரு மங்குனி என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமல்ல, பெயரளவிற்காவது திராவிட கட்சியாக இருந்த அ.தி.மு.க.வை மொத்த அழிவுப்பாதையில் அழைத்துச் செல்லும் பழனிசாமி, நம்மைப் பார்த்து, இதுதான் நமக்கு கடைசி தேர்தல் என்று சொல்லியிருக்கிறார். வழக்கமாக அமாவாசையை பார்த்து ஆருடம் சொல்லும் பழனிசாமி, இந்த முறையும் தவறான ஆருடத்தையே சொல்லியிருக்கிறார்.

சகோதரர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் தொடங்கி, அம்மையார் சசிகலா வரைக்கும் துரோகங்களை செய்து, முதுகில் குத்தி கைப்பற்றிய அ.தி.மு.க.வை பா.ஜ.க.வுக்கு வாடகைக்கு விட்டுவிட்டு எகத்தாளமாக பேசிக் கொண்டிருக்கிறார். தன்னிலை உணராமல் ஆணவத்தில் ஆடினால் என்ன நிலைமை என்று பழனிசாமி இன்னும் உணரவே இல்லை!

அ.தி.மு.க.வை நான் உடைக்க நினைத்தேன் என்று அபாண்டமாகப் பேசியிருக்கிறார், அ.தி.மு.க.விற்கு வாய்த்த அழிவுசக்தியான பழனிசாமி! தலைமைப் பண்பும், அடக்கமும் இல்லாமல் சொந்தக் கட்சியினரையே துரத்திவிட்டுவிட்டு, சந்தர்ப்பவாதத்திற்காகக் கூட்டணிக் கட்சிகளுக்குக்கூட துரோகங்கள் செய்த பழனிசாமி, இப்படி பேசவில்லை என்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும்!

அ.தி.மு.க.வில் இருந்து விலகியவர்கள், இன்றைக்குத் தாய்க்கழகமான தி.மு.க.விற்கு வருவதைப் பார்த்து வயிறெரிந்து இப்படி பேசியிருக்கிறார். தி.மு.க.வில் இருந்து பிரிந்ததுதான் அ.தி.மு.க.! திராவிட இயக்க உணர்வில் இருந்து விலகி, அந்த இயக்கத்தைத் தவறான பாதையில் பழனிசாமி கொண்டுபோகும்போது, பலரும் விலகுகிறார்கள்; நம்முடைய தாய்க்கழகத்திற்குத் திரும்புகிறார்கள்! இதில் தவறில்லையே! வழிதவறிச் சென்று, நாட்டிற்கும் - நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்வதுதான், ஏற்றுக் கொள்ள முடியாதது! இதெல்லாம், பா.ஜ.க.வின் பாதமே சரணாகதி என்று இருக்கும் பழனிசாமிக்கு புரியாது!

தடம் மாறிக் கூட்டணி வைத்திருக்கும் பழனிசாமி, செய்த துரோகங்களை சிறிது எண்ணிப் பாருங்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்தது யார்? இந்தியா முழுவதும் அதற்கு எதிராக இஸ்லாமிய பெருமக்கள் போராடியபோது “எந்த முஸ்லிம் பாதிக்கப்பட்டார்” என்று எகத்தாளமாகக் கேட்டது யார்? வெயில், மழை, குளிர் இதெல்லாம் பார்க்காமல் தலைநகர் தில்லியில் விவசாயிகள் மாதக்கணக்கில் போராடியபோது மூன்று வேளாண் சட்டங்களைப் பற்றி எந்த அடிப்படைப் புரிதலும் இல்லாமல் அவர்களை எல்லாம் ‘புரோக்கர்கள்’ என்று கொச்சைப்படுத்தி வாய்கூசாமல் பேசியது யார்? துரோகம் செய்ய வேண்டும். அதையும் டிசைன் டிசைனாக செய்ய வேண்டும் என்று நினைக்கும் பழனிசாமி அவர்கள், ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய துரோகம் செய்ய அமைத்திருப்பதுதான், டப்பா எஞ்சின் NDA கூட்டணி! துரோகத்திற்குத் துரோகமே துணை என்பது போன்று அமைத்திருப்பதுதான், NDA கூட்டணி!

NDA கூட்டணிக்கு ஒரே ஒரு நோக்கம்தான். அது என்ன என்றால், தமிழ்நாட்டு வளர்ச்சியை தடுக்க வேண்டும். திராவிட மாடல் ஏற்படுத்தியிருக்கும் இந்த வளர்ச்சியை தடுக்க வேண்டும், அழிக்க வேண்டும். இதுதான், NDA கூட்டணியின் நோக்கம்!

NDA-வின் தலைமையாக இருக்கும் பா.ஜ.க.விற்கு, தமிழ்நாட்டில் நம்மை எதிர்ப்பதற்கு வலிமை இல்லை என்று, அ.தி.மு.க.வை விலைக்கு வாங்கியிருக்கிறது! பொதுவாக, பா.ஜ.க-வைப் பொறுத்தவரைக்கும் மக்களுக்கு நல்லது செய்யாது; ஆனால், தேர்தல் வந்துவிட்டது என்றால், கண்துடைப்பிற்காக பட்ஜெட்டில் சில மெகா அறிவிப்புகளை கொடுப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டிற்கு அதைக்கூட செய்ய மனமில்லாத, வஞ்சக எண்ணத்தின் முழு உருவம்தான் NDA.

பா.ஜ.க. ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்ததில்லை. எந்தச் சிறப்புத் திட்டத்தையும் செய்ததில்லை; நாம் வைத்த எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை! மதுரையில் ஒரு எய்ம்ஸ் அறிவித்தார்கள்; அதன் நிலைமையை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை! சென்னை மெட்ரோ திட்டத்திற்கு நிதி தரவில்லை! ஓசூர் விமான நிலையத்திற்கு அனுமதி கேட்டிருக்கிறோம்; தரவில்லை! குடிநீர் திட்டத்திற்கான நிதியை தரவில்லை!

சரி இதெல்லாம்கூட பரவாயில்லை, எப்படியாவது போராடி, திறமையான நிர்வாகத்தால் நாம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இருப்பதிலேயே கொடுமை என்னவென்றால்? அவர்கள் செய்யும் இந்தித் திணிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். அதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்காக என்ன செய்தார்கள்... நம்முடைய வீட்டுக் குழந்தைகள் படிப்பதற்கான கல்வி நிதியைக்கூட கொடுக்காமல் மறுக்கிறார்கள்! இதுவரையில் கொடுக்கவில்லை. இப்படி வஞ்சக எண்ணம் கொண்ட கூட்டத்திடம் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியுமா? சொல்லுங்கள், ஒப்படைக்க முடியுமா? எனவே, NDA-வைத் தமிழ்நாடு புறக்கணிக்க வேண்டும்! அதுதான், தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது!

NDA கூட்டணி என்பது, எப்படிப்பட்ட சந்தர்ப்பவாத கூட்டணி என்று நீங்களே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். கரப்ஷன் - கமிஷன் - கலெக்‌ஷன் என்று ஆட்சி நடத்திய பழனிசாமி அவர்களை மிரட்டிக் கூட்டணி அமைத்து, தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்து, வரிசையாக பல துரோகங்களை செய்து, பிரிந்த மாதிரி நாடகங்களை நடத்தி, கடைசியாக இப்போது, டெல்லியில் தீர்மானித்து, தோற்பதற்காக தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறது NDA! அதனால்தான் சொன்னேன்… இந்த தேர்தல் என்பது, தமிழ்நாடு அணி வெர்சஸ் டெல்லி அணி! தமிழ்நாடு வெர்சஸ் என்.டி.ஏ.!

தமிழ்நாட்டைக் காக்க வேண்டும் என்றால், தி.மு.க.தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்! தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து நடைபோட வேண்டும் என்றால், தி.மு.க. ஆட்சியில் தொடர வேண்டும்! தமிழ்நாடு கலவர பூமியாக மாறாமல் இருக்க வேண்டும் என்றால், பா.ஜ.க. - அ.தி.மு.க கூட்டணியை வேரோடு வீழ்த்த வேண்டும்!

நீங்கள் எல்லோரும் ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்துக் கொள்ள வேண்டும், நாம் போராடுவது தி.மு.க.வின் வெற்றிக்காக மட்டுமல்ல; நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்காக மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக! எனவே, அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, நம்முடைய தாய்த் தமிழ்நாட்டைக் காக்க, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.

பேரறிஞர் அண்ணாவின் தம்பியாக - கலைஞரின் மகனாகக் கேட்கிறேன், உங்களின் பொன்னான வாக்குகளை, திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்குத் தாருங்கள்!

நான் உறுதியாகச் சொல்கிறேன்... அமையவுள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இப்போது நாம் செய்து கொண்டிருக்கும் சாதனைகள் எல்லாம் வெறும் டிரெய்லர்தான் என்று சொல்லும் அளவிற்கு, அடுத்த மாபெரும் ஹிட்டான திட்டங்களை எல்லாம் கொண்டு வருவோம். இனிமேல் நாம்தான். இனிமேல் எப்போதுமே நாம்தான்.

அதற்கு, அரவக்குறிச்சி தொகுதியில் மொஞ்சனூர் இளங்கோ அவர்களுக்கும், கரூர் தொகுதியில் ஆசி.எம். தியாகராஜன் அவர்களுக்கும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில், சி.கே. ராஜா அவர்களுக்கும், குளித்தலை தொகுதியில் சூரியனூர் சந்திரன் அவர்களுக்கும் உங்கள் பொன்னான வாக்குகளை வெற்றிச் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் வழங்குங்கள்.

உதயசூரியன் - அது உங்கள் சூரியன்! உதயசூரியன் - தமிழர்களின் இதய சூரியன்! வெல்வோம் ஒன்றாக!

Also Read: திருநெல்வேலி TO திருமங்கலம்... 33 தொகுதிகளில் முதலமைச்சரின் அடுத்த 3 நாள் பிரச்சாரம்... விவரம் உள்ளே!