Tamilnadu
ஊடகங்களையும் விட்டுவைக்காத த.வெ.க... கண்டுகொள்ளாத விஜய்.. கொந்தளித்த பத்திரிகையாளர் அமைப்புகள்!
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான நல்ல விஷயங்கள் பார்த்து பார்த்து அரசு செய்து வருகிறது. சொன்னதையும் தாண்டி சொல்லாத விஷயங்களையும் செய்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இப்படியான சூழலில் திராவிட மாடல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று பலரும் வேண்டுமென்றே அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர்.
ஆரம்பத்தில் இதனை பாஜக செய்து வந்த நிலையில், பிறகு அதிமுகவும் பொய் செய்தியை பரப்பி வந்தது. ஒவ்வொரு பொய்க்கும் அரசை தாண்டி மக்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். தற்போது அந்த வரிசையில் விஜயின் தவெக கட்சியும் இணைந்துள்ளது. போலி செய்தி மட்டுமின்றி, தவெக-வுக்கு எதிராக பேசும் அனைவரையும் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு ஆபாச சொற்களால் வசைபாடி வருகின்றனர் தவெக-வினர்.
குறிப்பாக பெண்கள், குழந்தைகள், குடும்பங்கள் என தவெக-வுக்கு எதிராக பேசும் அனைவரையும் கேவலமாக சமூக வலைதளங்களில் பேசியும், பதிவு வெளியிட்டும், கமெண்ட் செய்தும் வருகின்றனர் தவெக-வினர். இந்த சூழலில் அந்த வரிசையில் செய்தி நிறுவனங்களையும் சேர்த்துள்ளது தவெக. செய்தி நிறுவனங்கள் பெயரில் போலியாக சமூக வலைதள பக்கத்தை உருவாக்கி, தவெக-வுக்கு ஆதரவாகவும், திமுக-வுக்கு எதிராகவும் பதிவிட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி ஆபாச சொற்களாலும் பயன்படுத்தி போலியாக செய்திகளை வெளியிட்டும் வருகின்றனர். இதனையெல்லாம் அக்கட்சியின் தலைவர் விஜய், கண்டும் காணாததுமாய் இருந்து வருகிறார். தவெக-வின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வெளி வரும் நிலையில், தற்போது சென்னை பத்திரிகையாளர் மன்றம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை வருமாறு :-
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் பல முன்னணி செய்தித் தொலைக்காட்சிகளின் பெயர்களிலும், மேலும் பல கற்பனையான ஊடக நிறுவனங்களின் பெயர்களிலும் பக்கங்களைத் தொடங்கியுள்ளனர். அந்த குறிப்பிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் பல முன்னணி பத்திரிகையாளர்கள் குறித்து உண்மைக்குப் புறம்பான மற்றும் நாகூசும் வகையிலான தகவல்களை திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.
அதேபோல், தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் குறித்தும், உண்மைக்குப் புறம்பான தகவல்களையும், கீழ்த்தரமான விமர்சனங்களையும் திட்டமிட்டு பதிவிட்டு வருகின்றனர்.
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், கட்சி வேறுபாடின்றி இதுபோல் போலியான பக்கங்களை உருவாக்கி ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் மற்றொரு கட்சியை விமர்சிப்பது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த பலர், திட்டமிட்டு பல ஊடகங்களின் பெயரிலேயே போலியான பக்கங்களை உருவாக்கி, ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு எதிராக இதுபோல் கீழ்த்தரமான தாக்குதலை நடத்துவது தமிழகம் இதுவரை கண்டிராத மிகவும் மோசமான மற்றும் அபாயகரமான நடவடிக்கையாகும்.
ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்கள் நடத்தியுள்ள இந்த இணையவழித்தாக்குதல், ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் வெளிப்படையாக மிரட்டுவதற்குச் சமமாகும். இது அப்பட்டமான கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறை மற்றும் மனித உரிமை மீறலுமாகும். மேலும், உண்மைக்குப்புறம்பான இதுபோன்ற செய்திகளை வெளியிடுவது தமிழக மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைத்து சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும்.
ஆகவே, இந்த கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்களை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
Also Read
-
இரண்டரை மாதத்தில் ரூ.20 ஆயிரம் கோடி கடன்.. - முதல்வர் விஜயை விளாசிய முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!
-
நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் தொடரும் போராட்டம்.. ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி.. கடும் தள்ளுமுள்ளு!
-
தர்மேந்திர பிரதான் ராஜினாமா.. முடிவுக்கு வந்த போராட்டம்.. அடிபணிந்த ஒன்றிய பாஜக அரசு.. வரலாற்று நிகழ்வு!
-
“மேகதாது விவகாரம்.. விஷப் பரீட்சை வேண்டாம்” : தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
“நான் விஜய் Fan..” : மாணவர்கள் போராட்டத்தில் பேச்சு.. மூக்குடைபட்டு திரும்பிய சனம் செட்டி - என்ன நடந்தது?