Tamilnadu
சிவகங்கையில் ரூ.5,300 கோடி முதலீடு செய்யும் MRF நிறுவனம்!: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், இன்று (4.03.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், MRF நிறுவனம், 5,300 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில், 1,000 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சிவகங்கை மாவட்டம், சிப்காட் - இலுப்பைக்குடி தொழிற் பூங்காவில் புதிய டயர் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு கப்பல் கட்டுமானக் கொள்கை 2026– யை வெளியிட்டார்.
தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது. சீரான, பரவலான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை நோக்கமாகக்கொண்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. இந்தியாவிலேயே, இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி அடைந்த மாநிலமாகவும் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
MRF நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
MRF நிறுவனம், டயர்கள், டியூப்கள் மற்றும் பாதுகாப்புப் பட்டைகள் (Flaps) ஆகியவற்றைத் தயாரித்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் விநியோகம் செய்து வரும் பாரம்பரியம் மிக்க நிறுவனமாகும்.
இந்நிறுவனம், இந்தியாவில் 10 இடங்களில் தனது ஆலைகளை நிறுவியிருந்தாலும், தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையில், அதாவது திருவொற்றியூர், அரக்கோணம் மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில் தனது உற்பத்தி ஆலைகளைக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
MRF நிறுவனம், தனது வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், அடுத்த 12 ஆண்டுகளில், 5300 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 1000 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சிவகங்கை மாவட்டம், சிப்காட் - இலுப்பைக்குடி தொழிற் பூங்காவில் ஒரு புதிய அதிநவீன டயர் உற்பத்தி ஆலை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு கப்பல் கட்டுமானக் கொள்கை 2026 வெளியீடு
தமிழ்நாட்டை நிலைத்த மற்றும் தொழிற்நுட்ப ரீதியாக மேம்பட்ட கப்பல் கட்டுமானத்தில் உலகளவில் முன்னணி மாநிலமாக நிலைநிறுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தமிழ்நாடு கப்பல் கட்டுமானக் கொள்கை 2026 வடிவமைக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் வெளியிடப்பட்டது.
கப்பல் கட்டுமானம், வடிவமைப்பு, பழுதுபார்த்தல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன் மேம்பாடு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைக்கும் முழுமையான கடல்சார் தொழில் சூழலை உருவாக்குவது இக்கொள்கையின் பிரதான நோக்கமாகும்.
கப்பல் கட்டுமானத் தளம் (Shipyard), பசுமை கப்பல் மறுசுழற்சி (Green Ship Recycling) மற்றும் கப்பல் உதிரிபாகங்கள் உற்பத்தி போன்ற துறைகளில் (Marine Component Manufacturing) முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில், இக்கொள்கை விரிவான ஊக்குவிப்பு கட்டமைப்பை வழங்குகிறது.
முதலீட்டில் பங்களிப்பு (equity participation), சொத்து குத்தகை (asset leasing), மூலதன மானியம் (Capital Subsidy) மற்றும் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகைகள் (Production-linked Incentives) ஆகியவற்றைக் கொண்ட அமைப்புமுறையிலான ஊக்கத் தொகுப்பு (Structured Package of Assistance) வழங்கப்படும்.
மேலும், சர்வதேச சுற்றுச்சூழல் ஒப்பந்தங்களுக்கு இணங்கச் செயல்படும் சான்றளிக்கப்பட்ட மறுசுழற்சி நிலையங்களுக்கு மூலதன மானியம் வழங்கப்படும். கப்பல் உபபாகங்கள் உற்பத்தித் துறைக்கு, வளர்ந்துவரும் துறைக்கான (Sunrise Sector) சிறப்பு அங்கீகாரம் வழங்கி, தமிழ்நாடு தொழில் கொள்கை 2021ன்கீழ் ஊக்கச்சலுகைகள் வழங்கப்படும்.
SIPCOT மற்றும் வ.ஊ.சி துறைமுகம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, NSHIPTN என்ற சிறப்பு நோக்க நிறுவனம் (SPV) அமைத்தல், ஒற்றைச்சாளர இணையதளம் மூலம் அனுமதி (single-window project facilitation) மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்துடன் (Indian Maritime University - IMU) ஒருங்கிணந்து இத்துறைக்குத் தேவையான சிறப்பு படிப்புகள் மற்றும் தொழிற்பயிற்சிநிலையங்கள் (ITIs), பல்தொழிற்நுட்ப கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் மாநில பல்கலைக்கழகங்களின் ஒருங்கிணைப்புடன் பல்நிலை திறன்மேம்பாட்டு அமைப்பு போன்ற நிறுவன ஆதரவுகள் மூலம் இத்துறைவலுப்படுத்தப்படும்.
இதன் மூலம் உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகி, கடற்கரைப் பகுதிகளின் வாழ்வாதாரம் மேம்பட்டு, நீலபொருளாதாரத்தில் உலகளவில் முன்னணி மையமாக தமிழ்நாடு உருவெடுக்கும் வகையில் இந்த தமிழ்நாடு கப்பல் கட்டுமானக் கொள்கை 2026 வெளியிடப்படுகிறது.
Also Read
-
ரூ.10.38 கோடி 2 புதிய ‘தோழி’ விடுதிக் கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
காவல்துறையினருக்கு 2,138 அடுக்குமாடிக் குடியிருப்புகள் : 22 காவல் பயிற்சி மையங்கள்!
-
ஈரானின் உச்ச தலைவர் கொலை… ஈரானை குறிவைத்து தொடர் தாக்குதல் : இஸ்ரேல், அமெரிக்காவின் அட்டூழியம்!
-
“திராவிட மாடல் 2.O-ல் 100% பெண்கள் உயர்கல்வி பெறுவது உறுதி!” : அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம்!
-
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் 2000 பேர் அமரக்கூடிய வகையில் “முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கம்”!