Tamilnadu

தமிழ்நாட்டில் மேலும் 37.79 இலட்சம் மக்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிதி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அசத்தல்!

தமிழ்நாட்டில் ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்பதற்கு இணங்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் சமூக - பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கல்லூரி மாணாக்கர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்கள்; மகளிருக்காக மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் மற்றும் விடியல் பயணம் திட்டம்; முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தாயுமானவர் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற சமூகநீதி திட்டங்கள் செயல்படுத்தப்படுவதன் மூலம் விளிம்புநிலை மக்களின் பொருளாதார நிலை வளர்ச்சி கண்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த பிப்ரவரி மாதம் மகளிரின் மனங்களை குளிர்ச்சிப்படுத்தும் வகையில் சிறப்பு நிதியாக ரூ.5,000 உரிமைத் தொகை, தமிழ்நாடு முழுவதும் 1.31 கோடி மகளிரின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.

இந்த செயல் திட்டத்திற்கு மகளிர் பெரும் ஆதரவளித்த நிலையில், தற்போது விளிம்புநிலையில் இருக்கும் சுமார் 37.79 இலட்சம் மக்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2,000 வரவு வைத்து, அனைவருக்குமான தலைவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது,

விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி!

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன.

நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம்! நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2,000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்!

இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29 இலட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3,200 ரூபாயும்,

5 இலட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3,500 ரூபாயும்,

பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 இலட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா 4,000 ரூபாயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம்.

அதுமட்டுமின்றி,

மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.

இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன் - தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம்!”

Also Read: “இன்னொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதை அமெரிக்காவும் இஸ்ரேலும் எப்போது நிறுத்தும்?”: முரசொலி காட்டம்!