Tamilnadu
50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
தமிழ்நாடு அரசின் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை பிப்.17 ஆம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதேபோல் வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் பேரவையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது தெரிவித்த தகவல் வருமாறு:-
மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் கேள்விக்கு
மொடக்குறிச்சி தொகுதி, கொடுமுறை ஒன்றியம், கொளத்துப்பாளையம் ஊராட்சி கொம்பனைப்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் ஒன்று கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மிக விரைவில் கட்டித் தரப்படும்.
உறுப்பினர் அவர்களின் பிரதான கேள்வியில் கேட்கப்பட்டது, கொம்பனைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா என்று கேட்டிருந்தார். ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் அமைத்துத் தரப்படும் என்று தெரிவித்திருக்கிறோம். அதனையடுத்து ஒரு 5,6 மருத்துவமனைகளுக்கு சுற்றுச்சுவர் கட்டித் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். முடிந்தவற்றை அமைத்துத் தரவிருக்கிறோம். அதேநேரத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியை இதற்கு பயன்படுத்தலாம் என்கின்ற விதியும் இருக்கிறது. அவருடைய மேம்பாட்டு நிதியை தரும்பட்சத்தில், அவற்றிற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசு தயாராக இருக்கிறது.
மொடக்குறிச்சி தொகுதி, மொடக்குறிச்சியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சொந்தமான நிலம் சம்மந்தமான ஒரு வழக்கு நிலுவையில் இருந்தது. 2.07 ஏக்கர் நிலத்தில் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இன்றைக்கு 1.69 ஏக்கர் நிலம் சுகாதார நிலையத்திற்கு சொந்தமான இடம் என்று தீர்ப்பாகியிருக்கிறது. சம்மந்தப்பட்ட உரிமையாளர்களுடன் அந்த இடத்தை அரசுத் துறைக்கு மாற்றம் செய்து தருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அது முடிந்தவுடன், மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் சொல்லியிருப்பதைப்போன்று ஏற்கெனவே அதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.1.62 கோடி நிதியைப் பயன்படுத்தி அந்தக் கட்டடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும்.
தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் கேள்விக்கு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வட்டார மருத்துவமனையை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி ரூ.115 கோடியில் பிரம்மாண்டமான கட்டடத்தை முதலமைச்சர் அவர்கள் நேரடியாக திறந்து வைத்து, இன்றைக்கு தினந்தோறும் 2,500 புற மருத்துவ பயனாளிகள் பயன்படுத்தக்கூடிய மருத்துவமனையாக இயங்கி வருகிறது. இந்தநிலையில் நேற்றைக்கு கூட ரூ.30.16 கோடி மதிப்பீட்டில் இந்தியாவில் முதன்முறையாக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு சிகிச்சை மையம் ஒன்று நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. புற்றுநோய் இறுதி சிகிச்சைக்கான ஆதரவு மையம் என்பது இந்தியாவில் முதன்முறையாக தாம்பரம் பகுதியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை ஒட்டி, திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இப்படி பல்வேறு வசதிகள் தாம்பரத்திற்கு குறுகிய கால இடைவெளியில் ரூ.145 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. மாண்புமிகு மன்ற உறுப்பினர் கூறியிருப்பதைப் போல MRI Scan ஒன்று வேண்டும் என்று கேட்டிருக்கிறார். நிச்சயம் அதை அமைத்து தருவதற்குரிய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றி சொல்லியிருக்கிறார். அந்த மருத்துவமனையைப் பொறுத்தவரை sanctioned Strength என்னவோ அதற்குரிய மருத்துவர்களும், செவிலியர்களும் இருக்கிறார்கள். ஒரு காலிப்பணியிடம் கூட இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் கேள்விக்கு
மருத்துவமனையில் பல்வேறு நிலைகள் இருக்கின்றன. துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார மருத்துவமனை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என்று பல்வேறு நிலைகள் இருக்கின்றன. எனவே அவர் கேட்டிருக்கிற அந்த மருத்துவமனையைப் பொறுத்தவரை, multispeciality hospital என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. என்றாலும்கூட, அவர் டயாலிசிஸ் சிகிச்சை வசதி வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இன்றைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 50 மருத்துவமனைகளில் அது அமைக்கப்படும் என்று சொல்லியிருக்கிறோம். அந்த வகையில் மிக விரைவில் டயாலிசிஸ் சிகிச்சைகளுக்கு அந்த அமைப்பு அங்கு நிறுவுவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படும்.
மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் கேள்விக்கு
தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மகப்பேறு மருத்துவச் சேவை என்பது இன்றைக்கு மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் CEmONC என்கிற வகையிலான புதிய மருத்துவக் கட்டமைப்புகளை ஏற்படுத்தி மகப்பேறுக்கு பிரத்யேகமான சிகிச்சைகள் வழங்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதனால்தான் மகப்பேறில் தாய்மார்களின் இறப்பு விகிதமும், குழந்தைகளின் இறப்பு விகிதமும் குறைந்து, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவிலான முன்னேற்றம் ஏற்பட்டு, மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் குறைந்திருக்கின்றன. எனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு சிகிச்சை மையங்களை புதுப்பிப்பதோ அல்லது புதியதாக கட்டித் தருவது என்பதோ சாத்தியமில்லாத ஒன்று. ஏற்கெனவே இருக்கிற கட்டமைப்புகளின் வாயிலாகவும் புதிதாக தொடங்கப்பட்டிருக்கிற CEmONC வாயிலாக மட்டுமே அந்த சிகிச்சைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் கேள்விக்கு
நமது சட்டமன்ற உறுப்பினர் சுற்றுச்சுகூர் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஏற்கெனவே நான் தெரிவித்திருக்கிறேன். இந்த வருடம் நமக்கு ஒரு பெரிய சிறப்பு என்னவென்றால், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ.3 கோடிக்கான GST இல்லையென்ற ஒரு நிலையினை ஏற்படுத்தியிருக்கிறார். இதன்காரணமாக, சுமார் ரூ.50 இலட்சம் Savings ஏற்பட்டிருக்கிறது. அந்த ரூ.50 இலட்சம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் இதற்கு கொடுத்தால், சுற்றுச்சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் கேள்விக்கு
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான Sanction Strength என்று சொல்லக்கூடிய மருத்துவர்களின் எண்ணிக்கை ஒன்று அல்லது இரண்டு தான். இரண்டு மருத்துவர்கள் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அந்த மருத்துவமனையை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டுமேன்று கேட்டிருக்கிறார். 100 ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்திட வேண்டுமென்ற கோரிக்கை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு கடந்த ஜனவரி திங்கள் 4ல் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. அந்த அனுமதி கிடைத்தவுடன் பரிசீலிக்கப்படும்.
வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் கேள்விக்கு
ஒரு துணைக் கேள்விக்கு ஒரு 7-8 கேள்விகளை இணைத்து கேட்டிருக்கிறார். எல்லாவற்றிற்குமான ஒரே பதில் இந்த மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுமதி கோரப்பட்டிருக்கிறது. அனுமதி கிடைக்கப்பெற்றவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில் 1000 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களும் அமைக்கப்பட வேண்டுமென்று கேட்கப்பட்டிருக்கிறது. அனுமதி கிடைக்கப்பெற்றால், அமைத்துத் தரப்படும். இரண்டாவது, வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு CT Scan கருவி வேண்டுமென்று கேட்டிருக்கிறார். அதனை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மிகவிரைவில் CT Scan அமைத்துத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
போளூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் கேள்விக்கு
பொதுவாக இந்த அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிக்காட்டுதலோடு, துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏறத்தாழ 2,000 க்கும் மேற்பட்ட கட்டடங்கள் கட்டித் தரப்பட்டிருக்கின்றன. என்றாலும், இன்னமும் வாடகைக் கட்டடங்களிலும் சிதிலமடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் இருக்கிற கட்டடங்களும் ஏராளமாக இருந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கட்டடத்தையும் இன்றைக்கு ஆய்வு செய்து, நிதியாதாரத்திற்கேற்ப கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதாவது நிதி ஆணையத்தின் நிதியாதாரத்தோடு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் கோரிக்கையையேற்று, கூடுதல் கட்டடங்கள் எங்கெங்கே தேவைப்படும் என்பதைக் கண்டறிந்து எதிர்காலத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய வழிக்காட்டுதலைப் பெற்று, கட்டித் தருவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதைத் தங்களின் வாயிலாக மன்ற உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் கேள்விக்கு
நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் அவர்களுடைய கோரிக்கையை ஏற்று அங்கு மின்தூக்கி அமைப்பதற்குரிய நடவடிக்கைளை மாவட்ட ஆட்சி நிருவாகத்தோடு கலந்துபேசி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் கேள்விக்கு
சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் சொல்லியிருப்பதைபோல உசிலம்பட்டியில் ஏற்கெனவே இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு கூடுதல் கட்டடங்கள் என்கின்ற வகையில் ரூ.10 கோடி செலவில் கூடுதல் கட்டடங்கள் கட்டி திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. அவர் தற்போது MRI Scan கேட்டிருக்கிறார். அது அவசியமான ஒன்றுதான். படிப்படியாக நிறைய இடங்களில் MRI Scan இல்லாத இடங்களில் எல்லாம் அவை வைக்கப்பட்டு வருகிறது. விரைவில் உசிலம்பட்டியில் MRI Scan அடுத்த நிதிநிலை ஆண்டுகளில் கொண்டுவருவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் .
ஆரணி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் கேள்விக்கு
இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு புதிதாக 642 துணை சுகாதார நிலையங்களும் 708 நகர்புற நல வாழ்வு மையங்களும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும் 19 மாவட்ட தலைமை மருத்துவமனைகளும், 5 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளும் கட்டித் தரப்பட்டிருக்கின்றன. மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர் அவர்களுடைய கோரிக்கையை ஏற்று அந்த துணை சுகாதார நிலையம், நான் ஏற்கெனவே சொன்னதைப்போல மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்கள் அல்லது புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் வருகிறபோது அவருடைய கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் கேள்விக்கு
ஒரு மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்றால் ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அந்தவகையில்தான் தாம்பரத்தில் ரூ.115 கோடியில் அந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தமிழக முதல்வர் அவர்கள் அனுமதி தந்து அதை கட்டி, திறந்தும் வைத்திருக்கிறார்கள். அந்தவகையில் பூந்தமல்லியைப் பொறுத்தவரையில் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஏராளமான புதிய மருத்துவமனைகளுக்கு புதிய கட்டடங்களுக்கு அனுமதி தந்து அவைகளெல்லாம் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. நசரத்பேட்டையில் கட்டப்பட்டிருச்கின்ற அந்த விபத்து பிரிவு மருத்துவமனை மிக விரையில் பணியாளர்கள் நியமனத்திற்கு பிறகு திறந்துவைக்கப்படவிருக்கிறது
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உரையாற்றினார்.
Also Read
-
ஜிம்னாஸ்டிக்ஸ் உள்ளிட்ட 20 விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்கள் : பணி நியமன ஆணைகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
“வேளாண்மையில் ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு!” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
“முதலீடுகள் வேலைவாய்ப்புகளாக மாறுவது தமிழ்நாட்டில்தான்” : பேரவையில் பெருமையுடன் சொன்ன அமைச்சர் TRB ராஜா!
-
புதுப்பொலிவு பெற்ற தமிழ்நாடு ஆவணக்காப்பகம்: Japanese Tissue முறையை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி
-
சென்னையில் 4035 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் : 2 அமைச்சர்கள் ஆய்வு!