Tamilnadu
கும்மிடிப்பூண்டியில் 2,104 பேருக்கு வேலைவாய்ப்பு! : புதிய உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (6.02.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் 2,091 கோடி ரூபாய் முதலீட்டில், 2,104 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் அமைத்துள்ள, அறைகளுக்கான குளிர்சாதன இயந்திரங்கள் (Room Air Conditioners) மற்றும் காற்றழுத்தக் கருவிகள் (Compressors) உற்பத்தி ஆலையை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு, இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் முதன்மை மாநிலமாகவும், தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது. மாநிலத்தில் முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் இளைஞர்கள் மற்றும் மகளிர்க்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மாநில பொருளாதாரத்தை மேன்மேலும் மேம்படுத்திடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட்
ஜப்பான் நாட்டை சேர்ந்த மிட்சுபிஷி எலக்ட்ரிக் கார்ப்பரேஷன், ஆற்றல் மற்றும் மின்சார அமைப்புகள், தொழில்துறை ஆட்டோமேஷன், தகவல் மற்றும் தொடர்பு அமைப்புகள், வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சார மற்றும் மின்னணு உபகரணங்களை தயாரிப்பதில் இணையற்ற நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது. மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட், இந்த உலகளாவிய முன்னணி நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
இந்நிறுவனம், 2091 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 2104 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அறைகளுக்கான குளிர்சாதன இயந்திரங்கள் (Room Air Conditioners) மற்றும் காற்றழுத்தக் கருவிகள் (Compressors) உற்பத்தி ஆலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 2023-ஆம் ஆண்டு மே மாதம் மற்றும் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதங்களில் மேற்கொள்ளப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் இத்திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட நிகழ்வானது, திட்டங்கள் செயல்பாட்டு நிலைக்கு முன்னேற்றம் பெற, அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
தமிழ்நாட்டில் Mitsubishi Electric நிறுவனம் அமைத்துள்ள இத்தொழிற்சாலை, இந்தியாவில் அதன் முதலாவது அறைகளுக்கான குளிர்சாதன இயந்திரங்கள் (Room Air Conditioners) உற்பத்தி ஆலை என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிப்புற அலகுகள், உட்புற அலகுகள் மற்றும் காற்றழுத்தக் கருவிகள் (Compressors) ஒரே இடத்தில் உற்பத்தி செய்யும் முதலாவது தொழிற்சாலையாகவும் இது இருக்கும். இந்நிறுவனம், இத்திட்டத்தில் இதுவரை 1633 கோடி ரூபாய் முதலீடு மேற்கொண்டுள்ளதுடன், 200-க்கும் மேற்பட்ட மகளிர் உட்பட 629 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் அளித்துள்ளது.
Also Read
-
“சிவந்தது சென்னை!” - மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த அபராதம் செல்லும் : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
-
“கலைஞர் ஒரு வரலாற்றுப் பதிவு! அவரை யாராலும் முறியடிக்க முடியாது!” : தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்படும் தமிழ்நாட்டு MP-க்கள் : முதலிடத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் MP!
-
அண்ணா பல்கலைக்கழக உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.500 கோடி நிதி! : அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு!