Tamilnadu

“அண்ணா பற்ற வைத்த அந்த ’தீ’யை யாராலும் அணைக்க முடியாது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சென்னை மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் நேற்று பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கழக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அதன் விவரம் வருமாறு:-

இன்று சென்னை மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக அண்ணா நகர் மற்றும் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கழகத்தின் நிர்வாகிகளுக்குப் பொங்கல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, உங்களையெல்லாம் சந்தித்து உரையாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். வந்திருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் முதலில் என்னுடைய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளையும் பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சென்னை மேற்கு மாவட்டம் என்றாலே அதற்கு ஒரு தனி வரலாறு உண்டு. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நின்று வென்ற அண்ணா நகர் தொகுதி, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி ஆகியவை இந்த மாவட்டத்தில்தான் வருகின்றன. அதேபோல் நம்முடைய தலைவருக்கு மிகவும் நெருக்கமான தொகுதி ஆயிரம் விளக்கு தொகுதியும் இந்த மேற்கு மாவட்டத்தில்தான் வருகின்றது. ஆகவே இங்கு வந்திருக்கக்கூடிய நிர்வாகிகள் எல்லாம் சாதாரண நிர்வாகிகள் கிடையாது. இங்கு ஒவ்வொருவரும் கலைஞரின் வெற்றிக்காக, நம் தலைவரின் ஒவ்வொரு வெற்றிக்காகவும் உழைத்தவர்கள், களத்தில் நின்று பாடுபட்டவர்கள். அந்தப் பெருமையைப் பெற்றவர்கள்தான் இங்கு வந்திருக்கிறீர்கள். எனவே நீங்கள் எப்பொழுதுமே நம்முடைய தலைவருக்கும் கழகத்திற்கும் மிகவும் சிறப்பான நிர்வாகிகள் என்றால், இந்த மாவட்டத்தின் நிர்வாகிகள்தான்.

இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய நம்முடைய மாவட்ட கழகச் செயலாளர் சிற்றரசு அவர்களுக்கு முதலில் என்னுடைய பாராட்டுகளை, வாழ்த்துகளை உங்கள் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம் தலைவரின் உத்தரவிற்கு இணங்க, பொங்கல் மட்டும் அல்ல, அது தீபாவளியாக இருந்தாலும் சரி, ரம்ஜானாக இருந்தாலும் சரி, கிறிஸ்துமஸாக இருந்தாலும் சரி எந்த நிகழ்ச்சியையும் பொதுமக்களோடு சேர்ந்து கழக நிர்வாகிகள் நாம் மக்களோடு சேர்ந்து கொண்டாடுவதுதான் வழக்கம். இந்த முறை நம்முடைய தலைவர் அவர்கள் சிறந்த முறையில் திராவிடப் பொங்கலாகக் கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்கள். அதன் வகையில் இன்று இந்த மாவட்டம் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் எல்லா இடங்களிலும் நாம் இன்று நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறோம், நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

கட்சி சார்பாக மட்டுமல்லாமல் இன்று அரசின் சார்பாகவும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை, மகிழ்ச்சியான செய்திகளை நம் அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது. இரண்டு வருடத்தில் 20 லட்சம் மடிக்கணினிகளைக் கொடுக்க வேண்டும். இந்த ஆண்டு மட்டும் 10 லட்சம் மடிக்கணினிகளை இன்று மாணவர்கள் கையில் கொடுக்கப்போகிறது நம்முடைய முதலமைச்சர் நம்முடைய திராவிட மாடல் அரசு. அந்தத் திட்டத்தை ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கி வைத்தார்கள்.

அதுமட்டுமில்லாமல், பல்வேறு திட்டங்களை நம்முடைய அரசு செய்து கொண்டிருக்கிறது. மகளிருக்கு விடியல் பயணத் திட்டம். நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற முதல் நாள் அவர் போட்ட முதல் கையெழுத்து விடியல் பயணத் திட்டம், மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துத் திட்டம். அந்தத் திட்டத்தின் மூலமாக இன்று ஒவ்வொரு மகளிரும் குறைந்தது மாதம் 900 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரைக்கும் சேமித்திருக்கிறார்கள். 950 கோடி முறை பயணம் செய்திருக்கிறார்கள். இதுதான் அந்தத் திட்டத்தின் வெற்றி.

குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு வர வேண்டும், படிக்க வேண்டும், அது வெறும் வயிற்றோடு படிக்கக்கூடாது, பசியோடு படிக்கக்கூடாது என்று முதலமைச்சர் காலை உணவுத் திட்டம். இன்று ஒவ்வொரு நாளும் 22 லட்சம் குழந்தைகள் முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தில் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள். பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் பகவந்த் சிங் அவர்கள், அவர்கள் ஒன்றும் நம்முடைய கூட்டணிக் கட்சிகள் கிடையாது, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர். இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்திருந்தார், அந்தத் திட்டத்தை விரிவாக்கம் செய்கின்ற ஒரு நிகழ்ச்சியில், முதலமைச்சரோடு சேர்ந்து கலந்து கொண்டார். அரசுப் பள்ளிகள் மட்டுமல்ல அரசு உதவி பெறுகின்ற பள்ளிகளுக்கும் அந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்பொழுது அந்தத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பஞ்சாப் மாநில முதலமைச்சர் பேசும் போது பேசினார்: "மிகச்சிறந்த திட்டம், குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு வர வேண்டும், வெறும் வயிற்றோடு படிக்கக்கூடாது, காலையில் தெம்பாக தரமான உணவு சாப்பிட்டுவிட்டு அதன் பிறகு தரமான கல்வி அவர்களுக்குக் கொடுக்க வேண்டும், இந்த நல்ல திட்டத்தை அடுத்த ஆண்டிலிருந்து பஞ்சாப் மாநிலத்தில் இந்தத் திட்டத்தை நான் அறிமுகப்படுத்தப் போகிறேன்" என்று சொல்லிவிட்டுப் சென்றார் பஞ்சாப் மாநில முதலமைச்சர்.

குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு வந்தால் போதுமா? கல்லூரிக்குப் போக வேண்டும். பள்ளிப் படிப்பு படித்தால் போதாது, கல்லூரி படிக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டுவரப்பட்டதுதான் தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம். மாணவியாக இருந்தால் புதுமைப் பெண் திட்டம், மாணவனாக இருந்தால் தமிழ்ப் புதல்வன் திட்டம். அரசுப் பள்ளியில் படித்தால் போதும், அரசுப் பள்ளியில் படித்து எந்தக் கல்லூரியில் சேர்ந்தாலும் நான் உனக்குத் தருகிறேன் மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இன்று கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் சென்ற மாதம் வரைக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் ஒரு கோடியே 13 லட்சம் மகளிருக்கு 27 மாதங்கள் நம் தலைவர் கொடுத்திருக்கிறார்.

இந்தப் பொங்கலை முன்னிட்டு, இந்த ஜனவரி மாதம் அந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, இன்று ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 30 லட்சம் மகளிருக்குக் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை விட இன்னும் பெருமையாகச் சொல்ல வேண்டும் என்றால், பொங்கல் பரிசாக இந்தப் பொங்கலுக்குத் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை குடும்பங்களுக்கும் 3,000 ரொக்கப் பரிசாக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொடுத்திருக்கிறார்.

இப்படி ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்வதனால்தான் இன்று நம்முடைய தமிழ்நாடு இந்தியாவிலேயே வளர்ச்சி அடைகின்ற மாநிலங்களில் முதல் இடத்தில், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இரட்டை இலக்க வளர்ச்சி 11.19 சதவீத வளர்ச்சியோடு தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதன்முறையாக இன்று தமிழ்நாடு வளர்ச்சி அடைகின்ற மாநிலங்களில் முதல் இடத்தில் வந்துகொண்டிருக்கிறது.

ஆனால் ஒன்றிய அரசு பார்க்கிறது, நமது தமிழ்நாட்டிற்கு எதுவுமே செய்வது இல்லை. நிதி கேட்டுக் கொடுப்பது இல்லை. மொழி உரிமையைப் பறிக்கிறோம். ஆனால் எப்படித் தமிழ்நாடு இவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, ஏதாவது ஒரு பிரச்சினை செய்ய வேண்டும், ஏதாவது ஓர் இடைஞ்சல் செய்ய வேண்டும் என்றுதான் இன்று அவர்கள் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கல்வி உரிமையைப் பறிக்கிறார்கள், மொழி உரிமையைப் பறிக்கிறார்கள், நிதி உரிமையைப் பறிக்கிறார்கள். புதிய கல்விக் கொள்கை என்று ஒன்று கொண்டு வந்தார்கள். மற்ற மாநிலங்கள் எல்லாம் ஏற்றுக்கொண்டன. தமிழ்நாடு முதலமைச்சர் பார்த்தார். புதிய கல்விக் கொள்கையில் என்னென்ன இருக்கிறது என்று கேட்டார். பார்த்தால், புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மீண்டும் தமிழ்நாட்டிற்குள் எப்படியாவது குறுக்கு வழியில் ஹிந்தியைத் திணிப்பதற்கான வழிதான் இந்த புதிய கல்விக் கொள்கை. மீண்டும் சமஸ்கிருதத்தைத் தமிழ்நாட்டு மக்கள் மீது திணிக்கின்ற முயற்சிதான் இந்தப் புதிய கல்விக் கொள்கை. மீண்டும் குலக்கல்வித் திட்டத்தைத் தமிழ்நாட்டிற்குள் எப்படியாவது திணிக்க வேண்டும் என்கிற முயற்சிதான் இந்தப் புதிய கல்விக் கொள்கை. முதலமைச்சர் நிறுத்தினார், ‘ஏற்க முடியாது’ என்று சொன்னார்.

ஒன்றிய அரசு ஒவ்வொரு மாநிலத்திற்கும் கல்வி நிதியைக் கொடுக்க வேண்டும். எல்லா மாநிலத்திற்கும் பிரித்துக் கொடுத்தாகிவிட்டது. தமிழ்நாட்டிற்குக் கொடுக்க வேண்டியது கிட்டத்தட்ட 2,500 கோடி. கல்வி நிதி என்றால் ஒன்றிய அரசு கொடுப்பது கிடையாது. நாம் கட்டக்கூடிய வரிப் பணத்தைப் பகிர்ந்து கொடுப்பதுதான் ஒன்றிய அரசின் வேலை. ஒன்றிய அரசு சொல்லிவிட்டது எல்லா மாநிலமும் ஏற்றுக்கொண்டார்கள், அவர்களுக்கெல்லாம் கொடுப்போம், தமிழ்நாடு நீங்கள் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டும்தான் நிதி கொடுப்பேன் என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மிரட்டினார். நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சொன்னார், ‘நீங்கள் புதிய கல்விக் கொள்கை மூலமாக மீண்டும் ஹிந்தியைக் கொண்டு வரப் பார்க்கிறீர்கள், மீண்டும் சமஸ்கிருதத்தைத் தமிழ்நாட்டு மக்கள் மேல் திணிக்கப் பார்க்கிறீர்கள், குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வரப் பார்க்கிறீர்கள், 2,500 கோடி இல்லை, நீ 10,000 கோடி கொடுத்தாலும் நான் எந்த நாளும் தமிழ்நாடு மேல் மீண்டும் ஹிந்தி திணிப்பைக் கொண்டு வர விடமாட்டேன்’ என்று சொன்னார் நம் முதலமைச்சர்.

இன்று சட்டப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம், நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஒரு உதாரணம் மட்டும் சொல்கிறேன், கடந்த 10 வருடத்தில் ஒன்றிய அரசு தமிழ் மொழி வளர்ச்சிக்குக் கொடுத்த நிதி எவ்வளவு தெரியுமா? வெறும் 150 கோடி ரூபாய். ஆனால் யாருமே பேசாத சமஸ்கிருத மொழிக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு தெரியுமா? 2,600 கோடி ரூபாய். தமிழுக்கு 150 கோடி, யாருமே பேசாத சமஸ்கிருதத்திற்கு 2,600 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள். எனவே மும்மொழிக் கொள்கையைக் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். இன்று மட்டுமல்ல என்றைக்குமே தமிழ்நாடு ஹிந்தி திணிப்பை எதிர்க்கும்.

ஒரு வரலாற்றை மட்டும் இங்கே சொல்ல விரும்புகிறேன். 1968-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சரான உடனே ஒரு வேலை செய்தார். செய்துவிட்டுச் சட்டசபையிலும் பேசினார், பதிவு செய்திருக்கிறார். அந்த வீடியோக்களைத் தொலைக்காட்சி வீடியோக்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள், யூடியூபில் பார்த்திருப்பீர்கள்.

சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட வடிவம் கொடுத்தார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கைதான் இன்று தமிழ்நாட்டில், மும்மொழிக் கொள்கையை எந்த நேரத்திலும் தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டேன் என்று இருமொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். தமிழ்நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைத்தார், அதுவரைக்கும் சென்னை மாகாணம் (Presidency) என்று இருந்தது.

இந்த மூன்றையும் செய்துவிட்டு அண்ணா சொன்னார், ‘நான் இன்று ஆட்சியில் இருக்கலாம், இந்த மூன்று திட்டத்தையும் கொண்டுவந்து, அமல்படுத்திவிட்டேன். பிற்காலத்தில் பல வருடங்களுக்குப் பிறகு யாராவது இதை மாற்ற வேண்டும் என்று நினைத்தார்கள் என்றால், அவர்கள் மனதில் ஒரு பயம் வரும். அந்தப் பயம் இருக்கிற வரைக்கும் இந்தத் தமிழ்நாட்டை ஆள்வது அண்ணாதுரைதான்’ என்று பேரறிஞர் அண்ணா அன்று சொன்னார். இன்று அண்ணா வடிவில் நம்முடைய தலைவர் அவர்கள் அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார், அதைப் பின்பற்றிக்கொண்டிருக்கிறார்.

பாசிஸ்டுகள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அண்ணா பற்ற வைத்த அந்தத் தீயை யாராலும் அணைக்க முடியாது. அந்தத் தீ இன்று தலைமுறை தலைமுறை கடந்து எரிந்து கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த விஷயம், தொலைக்காட்சிகளில் சில பேர் பார்த்திருப்பீர்கள். காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அம்மையார் மெகபூபா முஃப்தி அவர்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்துகிறார்கள். அப்பொழுது அவர்கள் செய்தியாளர் கேள்வி கேட்கக் கேட்கத் தங்களுடைய தாய்மொழி காஷ்மீரியிலேயே பதில் சொல்கிறார்கள். உடனே ஒரு செய்தியாளர் குறுக்கிட்டுச் சொல்கிறார், ‘நீங்கள் ஏன் காஷ்மீரியில் பேசுகிறீர்கள்? நீங்கள் ஹிந்தியில் பேசுங்கள் அப்படி இல்லை என்றால் உருதுவில் பேசுங்கள்’ என்று கேட்கிறார். உடனே அந்த மெகபூபா முஃப்தி அவர்கள் சொல்கிறார்கள், ‘உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என்னிடம் கேட்பாய்? உனக்குத் தைரியம் இருந்தால் இந்தக் கேள்வியைத் தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கிறாரே என்னுடைய சகோதரர் ஸ்டாலின் என்று தலைவர் பெயரைச் சொல்லிச் சொல்கிறார்கள், ‘என்னுடைய சகோதரரிடம் போய் உன்னால் கேட்பதற்குத் தமிழ்நாட்டில் கேட்பதற்குத் தைரியம் இருக்கிறதா?’ என்று இன்று காஷ்மீரிலிருந்து ஒரு குரல் வருகிறது என்றால் மாநில உரிமை, மொழி உரிமை என்றால் அனைத்துத் தலைவர்களுக்கும் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்துத் தலைவர்களுக்கும் ஞாபகம் வருவது இன்று தமிழ்நாடுதான், நம்முடைய முதலமைச்சர் அவர்கள்தான்.

எனவே இன்று இந்த உரிமைகளையெல்லாம் காப்பாற்றுவதில் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் வழிகாட்டியாகவும் எடுத்துக்காட்டாகவும் இருக்கக்கூடியவர் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், நம்முடைய தலைவர் அவர்கள். இன்று இதையெல்லாம் நாம் உள்வாங்கிக்கொண்டு நமக்குக் கையில் வெறும் 80 நாட்கள் தான் இருக்கின்றன. இந்த மாதம் இன்று 11 அல்லது 12-ஆம் தேதி ஆகிவிட்டது, 20 நாட்கள் இருக்கின்றன.

அடுத்த மாதம் ஒரு 30 நாட்கள், அதன் பிறகு ஒரு 20 நாட்கள் தான், அதற்குள் தேர்தல் தேதி அறிவித்துவிடுவார்கள். நம்முடைய கைகளில் அடுத்து ஒரு 80 நாட்கள்தான் உள்ளன. இந்த 80 நாட்கள் மிக மிக முக்கியமான நாட்கள் என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொண்டு இந்தப் பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

மீண்டும் ஏன் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வர வேண்டும், மீண்டும் நம்முடைய உரிமையையெல்லாம் அ.தி.மு.க கையில் கொடுத்துவிட்டீர்கள் என்றால் அந்த உரிமையையெல்லாம் பறிபோய்விடும் என்கிற இந்தப் பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு நீங்கள் சேர்க்க வேண்டும்.

இந்தச் சூழலில் எஸ்.ஐ.ஆர் திட்டத்தையும் கொண்டு வந்தார்கள், சிறப்புத் தீவிரத் திருத்தம். அதன் மூலமாக இன்று கிட்டத்தட்ட 97 லட்சம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். வரைவுப் பட்டியல் வெளியாகி இருக்கிறது, 18-ஆம் தேதி வரைக்கும் நமக்கு நேரம் இருக்கிறது. இன்று ஒவ்வொரு தொகுதியிலும் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் நீக்கப்பட்டிருக்கின்றன. மேற்கு மாவட்டத்தில் அண்ணா நகரில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டிருக்கின்றன. ஆயிரம் விளக்கில் கிட்டத்தட்ட 98 ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டிருக்கின்றன.

நிர்வாகிகள் உங்களிடம் கேட்டுக்கொள்வது ஒரேயொரு வேண்டுகோள்தான். உங்களின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று முதலில் சரிபாருங்கள். உங்களின் பெயர் மட்டுமல்ல உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடைய பெயரெல்லாம் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுகிறதா என்று பார்க்க வேண்டியது மிக மிக அவசியம்.

அப்படி வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுப் போயிருந்தால் அவர்களுக்குப் படிவம் 6 கொடுத்து மீண்டும் விண்ணப்பிக்கச் சொல்லுங்கள். உங்களுக்கு மட்டுமல்ல மக்களுடைய வாக்குரிமையையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதைக் கூறிக்கொள்கிறேன்.

வீடு வீடாகச் சென்று பிரச்சாரத்தை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். தகுதியான ஒரு வாக்காளரின் பெயர் கூட வாக்காளர் பட்டியலிலிருந்து விடுபட்டு விடக்கூடாது. உங்களின் வாக்குரிமையை மட்டுமல்ல இன்று தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இன்று நம்மிடம் இருக்கிறது.

10 நாட்களுக்கு முன்பு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்திருந்தபோது பேசிவிட்டுப் சென்றார். பீகார், மத்திய பிரதேசத்தில் எல்லாம் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம். எங்களுடைய அடுத்த இலக்கு தமிழ்நாடு என்று இன்று ஒன்றிய பா.ஜ.க உள்துறை அமைச்சர் பேசியிருக்கிறார். யார் வேண்டுமானாலும் இலக்கு வைக்கலாம், ஆனால் அந்த இலக்கை அடைவது நம்முடைய உடன்பிறப்புகள் நீங்கள்தான், வந்திருக்கக்கூடிய நிர்வாகிகள் அது உங்கள் கைகளில் இருக்கிறது.

ஏனென்றால் இன்று தமிழ்நாட்டு மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். பாசிச பா.ஜ.க-வையும் அவர்களுடன் சேர்ந்து வருகின்ற அடிமைக் கூட்டத்தையும் நிராகரிப்பதற்குத் தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களிடம் இந்தப் பிரச்சாரத்தைச் செய்ய வேண்டிய பொறுப்பை மட்டும் உங்களிடம் நம் தலைவர் அவர்கள் ஒப்படைத்திருக்கிறார், அதை நிச்சயம் நீங்கள் செய்து காட்டுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, அண்ணா நகர் தொகுதியிலும் ஆயிரம் விளக்கு தொகுதியிலும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

அண்ணா நகர் பகுதியில் செனாய் நகரில் 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய விளையாட்டுத் திடல், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செனாய் நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை, 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விருகம்பாக்கம் கால்வாய் தூர்வாரப்பட்டுச் சுற்றுச்சுவர் என நிறைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

ஆயிரம் விளக்கு பகுதியில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோபாலபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி, 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வள்ளுவர் கோட்டம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக ஆயிரக்கணக்கான புதிய வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. 46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா, இப்படிப் பல்வேறு திட்டங்களை நம் தலைவர் அவர்கள் செய்திருக்கிறார்கள். தலைவர் அவர்கள் சொன்னது போல வெல்வோம் 200, படைப்போம் வரலாறு. அதற்கு ஒரு ஆரம்பப் புள்ளியாக, தொடக்கமாக மேற்கு மாவட்டத்தில் இருக்கக்கூடிய நம்முடைய சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் மூன்று தொகுதியிலும் சென்ற தேர்தலைவிட மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் நாம் வென்று காட்டுவோம் என்பதைக் கூறிக்கொள்கிறேன்.

கழகம் 7-வது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், நம் தலைவர் அவர்கள் இரண்டாவது முறையாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றால், இங்கு வந்துள்ள நிர்வாகிகளின் கைகளில் இருக்கிறது. அடுத்த இரண்டு மாதம் அதற்காக களத்தில் இறங்கி வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Also Read: கவிஞர் யுகபாரதிக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது : தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிப்பு!