Tamilnadu
ரூ.165 கோடியில் கட்டப்பட்டு வரும் 700 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்! : உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு!
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சமமான வளர்ச்சி என்பதை இலக்காக கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். அதனடிப்படையில் சென்னை மாநகரின் வளர்ச்சியில் ஒரு பகுதியாக வடசென்னை பகுதியும் நன்கு வளர்ச்சியடைய வேண்டுமென்பதை இலக்காக கொண்டு, வடசென்னை வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றார்.
இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 4.12.2024 அன்று சென்னை, வால்டாக்ஸ் சாலை சாலை தண்ணீர் தொட்டி தெரு மற்றும் அண்ணா பிள்ளை தெரு பகுதியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சி.எம்.டி.ஏ சார்பில் 700 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி உள்பட மொத்தம் 165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வளாக கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து வால்டாக்ஸ் சாலை பகுதியில் 2.93 ஏக்கர் பரப்பளவில், 119.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஒவ்வொரு குடியிருப்பும் தலா 415 சதுர அடி பரப்பளவில் 35 மாற்றுத்திறனாளிகளுக்கான குடியிருப்புகள் உள்பட 700 அடுக்குமாடி குடியிருப்புகள், 2 தொகுதிகளாக கட்டப்பட்டு வருகின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் மின் தூக்கி வசதி, திறந்த வெளி விளையாட்டு பகுதி, நடைபாதை, பசுமை புல்வெளி, சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டு வருகின்றன.
மேலும் இதே வளாகத்தில் 0.15 ஏக்கர் பரப்பளவில் 11.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரைத்தளத்தில் இரண்டு, நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம், கழிப்பறைகள், மின் தூக்கி வசதி, முதல் தளத்தில் 4 ஆலோசனை அறைகள், மருந்தகம், காத்திருப்பு கூடம், இரண்டாம் தளத்தில் பிசியோதெரபி, அல்ட்ராசவுண்ட், மெழுகு சிகிச்சை மற்றும் எலக்ட்ரோதெரபி, எக்ஸரே, செயற்கை மூட்டு மையம் ஆகியவற்றிற்காக தனித்தனி அறைகளும்;
மூன்றாவது தளத்தில் ஆய்வகம், பணியாளர்கள் உடைமாற்றும் அறை, உணவு அறை மற்றும் ஆலோசனை அறைகளும், நான்காவது தளத்தில் சோதனை அறை, டயாலிசிஸ் சிகிச்சை பகுதி, மறு செயலாக்க பகுதி, நோயாளிகள் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய இரத்த சுத்திகரிப்பு மற்றும் மறுவாழ்வு மையம் கட்டப்பட்டு வருகின்றது.
இந்த குடியிருப்பு வளாகத்திலேயே 0.60 ஏக்கர் பரப்பளவில் 650 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபம், 220 இருக்கைகள் கொண்ட உணவருந்தும் கூடம், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம், மின்தூக்கி வசதி, மணமக்கள் அறைகள் மற்றும் விருந்தினர்கள் தங்கும் அறைகள் வசதியுடன் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கூடிய பல்நோக்கு மையம் கட்டப்பட்டு வருகின்றது.
இந்த குடியிருப்பு வளாகத்தில் மற்றுமொரு சிறப்பாக 9,027 சதுர அடி பரப்பளவில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின்தூக்கி வசதி, கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளுடன் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய மாநகராட்சி அச்சக கட்டடம் கட்டப்பட்டு வருகின்றது.
மேலும் இந்த குடியிருப்பு வளாகத்தில் 2.05 ஏக்கர் பரப்பளவில் 10.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிர்வாக கட்டடம், பூப்பந்து உள் விளையாட்டு கூடம், கால்பந்து கூடம், கைப்பந்தாட்ட கூடம், கபடி மைதானம், குத்துச் சண்டை மைதானம், யோகா மையம், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பகுதி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட விளையாட்டுத் திடல் கட்டப்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (22.12.2025) துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வால்டாக்ஸ் சாலை தண்ணீர் தொட்டி தெரு மற்றும் அண்ணா பிள்ளை தெரு பகுதியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 700 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்;
பல்நோக்கு மையம், இரத்த சுத்திகரிப்பு மற்றும் மறுவாழ்வு மையம், மாநகராட்சி அச்சகம் மற்றும் மேம்படுத்தப்படவுள்ள விளையாட்டுத் திடல் என ஒருங்கிணைந்த வளாக கட்டுமான பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். சி.எம்.டி.ஏ அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு இந்த பணிகள் குறித்த காலத்திற்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
Also Read
-
“தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்!” : ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழ்நாடு அரசின் முடிவால் செவிலியர்கள் மகிழ்ச்சி!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
“நாம் இன்னும் விழிப்போடு செயல்பட வேண்டும்!” : SIR குறித்து எச்சரித்த முரசொலி தலையங்கம்!
-
“இது நூல் அல்ல, நமது போர் ஆயுதம்”: ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் கி.வீரமணி உரை!
-
“நமது ஆட்சியின் Diary ; எதிரிகளுக்கு பதில் சொல்லும் நூல்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!